இலங்கைத் தீவில் தமிழர்களே ஆதிக்குடிகள் - ஐங்கரநேசன் ஆதாரங்களுடன் உறுதிபடத் தெரிவிப்பு - Yarl Voice இலங்கைத் தீவில் தமிழர்களே ஆதிக்குடிகள் - ஐங்கரநேசன் ஆதாரங்களுடன் உறுதிபடத் தெரிவிப்பு - Yarl Voice

இலங்கைத் தீவில் தமிழர்களே ஆதிக்குடிகள் - ஐங்கரநேசன் ஆதாரங்களுடன் உறுதிபடத் தெரிவிப்பு


புதிய பாராளுமன்றின் கன்னி அமர்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான க.வி.விக்னேஸ்வரன் அவர்களும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களும் ஆற்றிய உரைகள் தொடர்பாக தென் இலங்கை அரசியல்வாதிகள் கடுமையான கண்டனங்களை வெளியிட்டு வருகின்றனர். இவர்கள் பாராளுமன்றில் பேசத்தகாத வார்த்தைகள்  எதனையும் பேசவில்லை. 

இலங்கைத்தீவில் தமிழ்மக்கள் ஆதிக்குடிகள் என்பதையும், தனியானதொரு தேசம் என்பதையுமே வலியுறுத்தியிருந்தார்கள். இதற்கே, தென்னிலங்கை அரசியல்வாதிகள் கொதித்துப்போயுள்ளார்கள். இலங்கைத் தீவில் தமிழர்களே ஆதிக்குடிகள் என்பதும் அவர்கள் தனியானதொரு தேசம் என்பதும் வரலாற்று உண்மைகள். இவை பேரினவாதிகளின் கூச்சல்களால் ஒருபோதும் இல்லை என்றாகிவிடாது என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் உறுதிபடத் தெரிவித்துள்ளார். 

பாராளுமன்ற உறுப்பினர்கள் க.வி.விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோரின் உரைகள் தொடர்பாக பெரும்பான்மையினப் பாராளுமன்ற உறுப்பினர்கள் கண்டனங்களைத் தெரிவித்துவரும் நிலையில், இது தொடர்பாகப் பொ.ஐங்கரநேசன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்குறிப்பிட்டுள்ளவாறு தெரிவித்துள்ளார். 
மேலும், அவரது அறிக்கையில்,

சிங்கள இலக்கியங்களும், பாளி இலக்கியங்களும் இலங்கையின் பூர்வீக மக்கள் சிங்கள மொழி பேசுகின்ற ஆரியமொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் வட இந்தியாவில் இருந்து வந்த ஆரிய இன மக்கள் என்றும் கூறுகின்றன. 

ஆனால், இவற்றுக்கு ஆதாரமாக எவ்விதத் தொல்லியல் சான்றுகளும்; இலங்கையில் இருந்து கிடைக்கவில்லை. இலங்கையின் பூர்வீக மக்கள் திராவிட மொழிக் குடும்பத்தைச் சார்ந்த, பெருங்கற் பண்பாட்டுக்குரிய மக்கள் இனம் என்பது வரலாற்றாசிரியர்களாலும், தொல்லியலாளர்களாலும், மொழியியலாளர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மையாகும். 

பல்லாயிரம்; ஆண்டுகளுக்கு முன்பாகத் தென்னிந்தியாவின் நிலப்பரப்பில் இருந்து இயற்கைப் பேரிடர் காரணமாகப் பிரிந்த ஒரு நிலப்பரப்பே இலங்கைத் தீவு என்று புவியியலாளர்கள் நிரூபித்திருக்கும் நிலையில், இலங்கையின் பூர்வீக மக்கள் தமிழ் மொழி பேசுகின்ற திராவிடப் பண்பாட்டு மக்கள் என்பதை வரலாற்று அறிவில்லாத சாதாரண மக்களே ஏற்றுக்கொள்வார்கள்.

இலங்கைத் தீவில் சிங்கள மக்களைப் போன்றே தமிழ் மக்களும் தங்களது ஆட்சிக்குட்பட்ட நிலப்பரப்பைக் கொண்டிருந்தவர்கள்  என்றவகையிலும், பாரம்பரியத் தாயகமாகக் கொள்ளக்கூடிய நிலப்பரப்பைக் கொண்டுள்ளவர்கள் என்றவகையிலும், தங்களுக்கிடையே மொழி ரீதியான, சமய ரீதியான, பண்பாட்டு ரீதியான சார்பு நிலையைக் கொண்டுள்ளவர்கள் என்ற வகையிலும் தனியானதொரு தேசமாகவே உள்ளார்கள். 

இலங்கையை ஆக்கிரமித்த போர்த்துக்கேயரும், ஒல்லாந்தரும் தமிழர் தேசத்தை அங்கீகரித்த நிலையில், இவர்களின் பின்வந்த ஆங்கிலேயர்களே இரண்டு தேசங்களையும் வலுக்கட்டாயமாக ஒன்றாக்கி, ஒற்றையாட்சி முறைமையைத் திணித்துவிட்டுச் சென்றனர். 

பூமி தட்டையானது; பூமியே பிரபஞ்சத்தின் மையம் என்ற கோட்பாடு நிலைபெற்றிருந்த  காலப்பகுதியில், கலிலியோ கலிலி அதனை நிராகரித்து பூமி கோளவடிவானது என்றும், பூமியும் ஏனைய கிரகங்களும் சூரியனைச் சுற்றி வருகின்றன என்றும் வலியுறுத்தியபோது அவரது கருத்துகளை ஏற்றுக்கொள்ளாத அதிகாரவர்க்கம் அவரைச் சாகும்வரை வீட்டுக்காவலில் வைத்திருந்தது. 

எவ்வாறு, அதிகார வர்க்கம் கலிலியோ கலிலியை வீட்டுக்காவலில் வைத்து உண்மையை மறைக்க முற்பட்டாலும் பூமி கோளவடிவானது இல்லை என்றாகாதோ, அதேபோன்றே இலங்கைத்தீவில் தமிழ்மக்கள் மீது சிங்களப் பேரினவாதம் எத்தகைய கொடும் நெருக்கடிகளைக் கொடுத்தாலும் தமிழர்களே தொன்மைக் குடிகள் என்பதும், தமிழர்கள் தனியானதொரு தேசம் என்பதும் ஒருபோதுமே இல்லை என்றாகிவிடாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

0/Post a Comment/Comments

Previous Post Next Post