தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் தமிழ்த் தேசியத்துடன் தடம்மாறாது பயணிக்கும் - ஐங்கரநேசன் தெரிவிப்பு - Yarl Voice தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் தமிழ்த் தேசியத்துடன் தடம்மாறாது பயணிக்கும் - ஐங்கரநேசன் தெரிவிப்பு - Yarl Voice

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் தமிழ்த் தேசியத்துடன் தடம்மாறாது பயணிக்கும் - ஐங்கரநேசன் தெரிவிப்பு

நாடளாவிய ரீதியில் தேர்தல் முடிவுகள் ஒருபுறம் சிங்கள பௌத்த பேரினவாதம் திரட்சி பெற்று ராஜபக்ஷ சகோதரர்கள் அசுரப்பலம் பெற்றிருப்பதை வெளிப்படுத்தியுள்ளது. இன்னொருபுறம் தமிழினத்தின் கூட்டு ஆன்மாவான தமிழ்த்தேசியம் நெருக்கடிக்குள் சிக்கியிருப்பதையும் வெளிப்படுத்தியிருக்கிறது. 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாக்கு வீழ்ச்சி, அதில் வெற்றி பெற்றுள்ளவர்களின் விடுதலைப்போராட்டம் தொடர்பான கருத்து நிலைப்பாடு, பேரினவாதக் கட்சிகளின் ஒத்தோடித் தமிழ்க்கட்சிகள் மற்றும் பேரினவாதக் கட்சிகள் பெற்றிருக்கும் வாக்குப்பலம் வருங்காலத்தில் தமிழ்த் தேசியம் பன்முகத் தாக்குதலுக்கு ஆளாகவிருப்பதைக் கட்டியங்கூறி நிற்கின்றன என்று தமிழ்த் தேசியப்பசுமை இயக்கத்தின் தலைவரும் பாராளுமன்ற வேட்பாளருமான பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். 

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் சுயேச்சைக்குழுவாக யாழ்ப்பாணம்-கிளிநொச்சித் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டிருந்தது. இது தொடர்பாகப் பொ.ஐங்கரநேசன் ஊடகங்களுக்கு அனுப்பிவைத்திருக்கும் அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும்,

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் ஒரு அரசியல் கட்சியாகப் பதிவு செய்வதற்குத் தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்திருக்கும் சூழ்நிலையிலேயே பாராளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள நேரிட்டது.

 இதற்கு முன்பிருந்தே தேர்தல் கூட்டாக மாத்திரம் அமையாமல் தமிழ்த்தேசியக் கொள்கை மீது பற்றுறுதி கொண்ட கூட்டு முன்னணி ஒன்றை உருவாக்கும் முயற்சியில் நானும் பங்கு கொண்டிருந்தேன். அது கைகூடாத நிலையிலேயே, சுயேச்சை அணியாகப் போட்டியிடுவதிலுள்ள சவால்களை நாம் தெரிந்து கொண்டிருந்தும், இத்தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் சுயேச்சை அணியாகப் போட்டியிடும் தவிர்க்க முடியாத முடிவை நாம் எடுக்க நேரிட்டது. 

எனினும், சுயேச்சைகளுக்கு வழங்கும் வாக்குகள் வீணானது என்ற பலத்த பரப்புரைகளுக்கு மத்தியிலும் கணிசமான மக்கள் தொகையினர் எங்களை ஆதரித்து வாக்களித்துள்ளனர். இத்தேர்தலில் கட்சிகள், சுயேச்சைகள் என்று போட்டியிட்ட 33 அணிகளில் 11ஆவது இடத்தை எங்களுக்கு வழங்கியுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் வேட்பாளர் ஒருவர் தமிழ்த் தேசியக் கட்சிகளின் வேட்பாளர்களைவிடக் கூடுதலான விருப்பு வாக்குகளைப் பெற்றுப் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகியிருக்கிறார். இங்கு பணநாயகம் வென்றிருக்கிறது என்பது வெள்ளிடைமலை. 

ஆனால், இதனைச் சலுகை அரசியலுக்கான வெற்றியாக மாத்திரமே குறுக்கிப் பார்த்துவிட முடியாது. தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டம் முளைவிட்டு எழுச்சி பெற்றமைக்கான காரணங்கள் தெரியாத, போரின் வலியை அனுபவித்திராத ஒரு இளைய தலைமுறை இன்று வாக்காளர்களாகியிருக்கிறார்கள். 

இவர்களில் கணிசமானோர் தமிழ்த் தேசிய நீக்கத்திற்கு இலகுவில் வயப்பட்டு வருகிறார்கள் என்பதும் ஒரு காரணமாகும் இதற்கான கூட்டுப்பொறுப்பை தமிழ்த் தேசியம் பேசுகின்ற அனைத்துக் கட்சிகளும் ஏற்றுக்கொண்டாகவேண்டும். 

யாழ்ப்பாணத்தில்  மாம்பழம் சின்னத்தில் போட்டியிட்ட எமது அணிக்கு 2128 வாக்குகள் கிடைத்திருக்கின்றன. ஆனால், இதைவிடப் பன்மடங்கு அதிகமாக மாம்பழம் சின்னத்துக்கு அளிக்கப்பட்ட வாக்குகள் நிராகரிக்கப்பட்டிருந்ததாக வாக்கு எண்ணும் நிலையங்களில் இருந்த எமது முகவர்கள் எமக்குத் தெரியப்படுத்தியுள்ளனர். 

படித்த மாவட்டம் எனப் பெருமை கொள்ளும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் சரியான முறையில் வாக்களிக்காததன் காரணமாக 35000 வாக்குகள் வரையில் நிராகரிக்கப்பட்டுள்ளன. தபால்மூல வாக்குகளும் இதில் அடக்கம். விருப்புவாக்கு முறையால் குழப்பம் அடைந்திருக்கும் மக்களுக்கு வாக்களிக்கும் முறை தொடர்பாக தெளிவுபடுத்தியிருக்க வேண்டிய பொறுப்பும் எங்கள் எல்லோரையுமே சாரும். 

எவ்வாறெனினும், இத்தேர்தலில் தமது நெஞ்சங்களில் எமக்கு ஆசனங்களை வழங்கிய ஆயிரக்;கணக்கானவர்களுக்கும், இத்தேர்தலில் எமக்காக உழைத்த பசுமை உறவுகள் அனைவருக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ளுகிறோம். 

அத்தோடு, தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம்; தொடர்ந்தும்; தமிழ்த் தேசியப் பயணத்தில் தடம்மாறாது பயணிக்கும் என்பதையும், தேவைகளின் அடிப்படையில் ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகளுடன் இணைந்து பணியாற்றும் என்பதையும் உறுதிபடத் தெரிவிக்கின்றோம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

0/Post a Comment/Comments

Previous Post Next Post