தெல்லிப்பழை புற்றுநோய் சிகிச்சைப் பிரிவை யாழ்.வைத்தியசாலையுடன் இணைக்க எதிர்ப்பு! - Yarl Voice தெல்லிப்பழை புற்றுநோய் சிகிச்சைப் பிரிவை யாழ்.வைத்தியசாலையுடன் இணைக்க எதிர்ப்பு! - Yarl Voice

தெல்லிப்பழை புற்றுநோய் சிகிச்சைப் பிரிவை யாழ்.வைத்தியசாலையுடன் இணைக்க எதிர்ப்பு!
தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையுடன் இணைப்பதற்கான ஏற்பாடுகள் திரைமறைவில் நடைபெறுகின்றன என்று தெரிவித்து தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை நோயாளர் நலன்புரிச் சங்கத்தினர் தெல்லிப்பழையில் உள்ள அரச திணைக்களங்கள், பொது அமைப்புக்கள், சமூகத்தின் பெரியார்கள், உள்ளூர் அரசியல் தலைவர்கள் என அனைவரையும் திரட்டி கடந்த திங்கட்கிழமை பொதுக்கூட்டம் ஒன்றை நடத்தினர்.

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை நோயாளர் நலன்புரிச் சங்கச் செயலாளர் லயன் சி.ஹரிகரன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் இந்த விடயம் தொடர்பாகத் தெளிவுபடுத்திய அவர் தெரிவித்தவை வருமாறு:-

தெல்லிப்பழை ஆதாவைத்தியசாலையில் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவை உருவாக்குவதற்கு கல்விக் காருண்யன் லயன் ஈ.எஸ்.பி.நாறட்ணமும், பிரபல சட்டத்தரணி சாந்தா அபிமன்னசிங்கத்தின் சகோதரரும் இணைந்து புற்றுநோயாளர்களின் அவலத்தை உணர்ந்து எமது வடக்கு மாகாணத்தில் ஒரு புற்றுநோய் வைத்தியசாலை அவசியம் என்பதை உணர்ந்து வைத்தியசாலை அமைவிடத்துக்கான காணியைக் கொள்முதல் செய்து வடக்கு மாகாண சுகாதார அமைச்சிடம் வழங்கினார்கள்.

களேஸ் ஒவ் கரேஜ் நிறுவனத்தைச் சேர்ந்த நாதன் சிவகணநாதன், சரிந்த உடம்புவே போன்றவர்கள் தெற்கே தெய்வேந்திரமுனையிலிருந்து வடக்கே பருத்தித்துறை முனைவரை நடைபயணம் மேற்கொண்டு பல்வேறு கருணை உள்ளம் கொண்ட அன்பர்களிடம் நிதி திரட்டிய 300 மில்லியன் ரூபாவில் இந்த புற்றுநோய் வைத்தியசாலைக்கான கட்டடத்தைக் கட்டி  தெல்லிப்பழையில் உருவாக்கினார்கள். யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒரு சிறு கட்டடத்தில் இயங்கிய புற்றுநோய் சிகிச்சைப் பிரிவு தனியான ஒரு பிரிவாக நவீன கட்டடங்களுடனும் சகல வசதிகளுடனும் கொண்டதாக 2014 ஆம் ஆண்டு தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் நிர்வாகத்தின் கீழ் மாற்றப்பட்டது. இதற்கான கட்டடங்களை அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திறந்துவைத்து தெல்லிப்பழையில் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவை ஆரம்பித்து வைத்தார்.

அன்று தொடக்கம் இன்றுவரை அந்தப் பிரிவு வடக்கு மாகாணசபையின் நேரடிக் கண்காணிப்பில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் நிர்வாகத்தின் கீழ் இயங்கி வருகின்றது. தற்போது இந்தப் பிரிவுக்கு நவீன சிகிச்சைக் கருவிகள் கொண்டுவரப்பட்டு  வடக்கு மாகாணத்தைத் தாண்டி கிழக்கு மாகாணம், அனுராதபுரம், புத்தளம் போன்ற மாவட்ட மக்களும் வந்து சிகிச்சை பெறுமளவுக்கு தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் உயர்ந்து நிற்கின்றது.

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவுடன் உளநல சிகிச்சைப் பிரிவும் காணப்படுகின்றது. வுடக்கு மாகாணத்தில் எந்த வைத்தியசாலையிலும் இல்லாத இருபெரும் அலகுகளை தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை கொண்டுள்ளது. யாழ்.பல்கலைக் கழகத்தின் மருத்துவ பீட மாணவர்களுக்கு போதனா கற்கைகளை வழங்கும் அலகாக இந்த வைத்தியசாலையிலுள்ள புற்றுநோய் சிகிச்சைப் பிரிவும், உளநல சிகிச்சைப் பிரிவும் உள்ளன.

13 ஆவது அரசமைப்பின் பிரகாரம் மத்தியில் குவிந்திருக்கின்ற அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்கலாமேயொளிய, மாகாணங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை மத்தி மீளப்பெற முடியாது. இது இவ்வாறிருக்க, மத்திய அரசின் நிர்வாகத்தின் கீழ் உள்ள யாழ்.போதனா வைத்தியசாலையுடன் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவை மட்டும் இணைக்கின்ற செயற்பாடுகள் சில வியாபார நோக்கம் கொண்டவர்களால் மேற்கொள்ளப்படுகின்றது.

புற்றுநோய் சிகிச்சைப் பிரிவைத் தனியாகப் பிரித்தால், ஒரு புற்றுநோயாளருக்கு பொது மருத்துவ தேவை ஒன்று ஏற்பட்டால்கூட அவரை யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அம்புலன்ஸ் ஊடாகத்தான் கொண்டுசெல்லவேண்டும். புற்றுநோய் சிகிச்சைப் பிரிவுக்கென்று தனியான சந்திர சிகிச்சைக் கூடம் இல்லை. தனியான இரத்த வங்கி இல்லை. தனியான பொதுவைத்திய நிபுணர்கள் இல்லை. அவர்களுக்கு பொது மருத்துவம் தொடர்பில் ஏதாவது தேவை ஏற்படின் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை பிரிவுகளே உடனடி சிகிச்சைகளை வழங்குகின்றன. இரத்தப் புற்றுநோயாளர்களுக்கு இரத்தமாற்றுச் சிகிச்சைக்கு தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை இரத்த வங்கியே தேவையான இரத்தம் வழங்குகின்றது. ஏனெனில் அனைத்தும் ஒரே நிர்வாகத்தின் கீழ் உள்ளமையால். போதனா வைத்தியசாலையுடன் இணைக்கப்பட்டால் இவர்களுக்குத் தேவையான அனைத்தையும் போதனா வைத்தியசாலையே வழங்கவேண்டும். இது மருத்துவ ரீதியான முரண்பாடுகள். இவற்றைவிட பௌதீக ரீதியான முரண்பாடுகள் ஏராளமாக உருவாகும்.

இவற்றால் மிகவும் வருத்தப்படப் போபவர்கள் - சிரமப்படப் போபவர்கள் - எமது பிரதேச நோயாளர்களே! நோயாளர் நலனில் அக்கறையுடைய நோயாளர் நலன்புரிச் சங்கம் இவற்றைப் பார்த்துக்கொண்டு வாழாவிருக்கமுடியாது. யாழ்.போதனா வைத்தியசாலையில் பௌதீக வளங்கள் இல்லை. புதிதாக உருவாக்கப்பட்ட எத்தனையோ பிரிவுகள் இயங்கமுடியாத நிலையில் உள்ளன. எத்தனையோ துறைசார் வைத்திய நிபுணர்கள் அவர்களுக்குரிய விடுதிகள் வழங்கப்படாமல் தமது சேவையை மக்களுக்கு வழங்கமுடியாமல் உள்ளார்கள். ஆனால், தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் நாம் நோயாளர் நலன்புரிச் சங்கத்தாலும் பல்வேறு நல்லுள்ளம் படைத்த கொடையாளர்களின் உதவியுடனும் பல ஏக்கர் காணிகளைக் கொள்வனவு செய்து வைத்தியசாலைத் தேவைக்கென வைத்திருக்கின்றோம். இனி உருவாகின்ற ஒவ்வொரு புதிய பிரிவுகளையும் வடக்கு மாகாண மக்கள் நலன் கருதி எமது வைத்தியசாலையில் உருவாக்கும் அளவுக்கு எம்மிடம் நிலப்பரப்பும் பௌதீக வளங்களும் உள்ளன.

வுடக்கு மாகாணத்தின் முக்கிய மையமாகத் தெல்லிப்பழை காணப்படுகின்றது. காங்கேசன்துறை துறைமுகம், பலாலி சர்வதேச விமான நிலையம் அனைத்துக்கும் மத்தியில் எமது வைத்தியசாலை ஒரு கேந்திர முக்கியத்துவம் பெற்றதாக உள்ளது. வலி.வடக்கு பிரதேசம் ஒரு சுற்றுலா மையமாக உருவாக்கப்படவிருக்கின்ற நிலையில் தெல்லிப்பழை வைத்தியசாலையின் தேவையும் அனைவராலும் உணரப்படும்.

புற்றுநோய் சிகிச்சைப் பிரிவை மாகாண நிர்வாகம் நிர்வகிப்பது கடினம் என்று யாராவது உணர்வார்களானால், தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையை மத்திய அரசின் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவந்து தெல்லிப்பழை விசேட போதனா வைத்திய சாலை என்று தரமுயர்த்தப்படுமானால் அது எமது மக்களுக்குப் பயனுள்ளதாக அமையும் என்பதால் நாமும் எமது பூரண ஒத்துழைப்பை நல்குவோம்.

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை போதனா வைத்தியசாலையாகத் தரமுயர்த்தப்பட்டால் எமது வலிகாமம் சுற்றுவட்டாரம் ஒரு சுகாதார நகரமாக எழுச்சிபெறும். யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்கள் தமது கல்வியை இலகுவில் மேற்கொள்ள பயனுள்ள ஒன்றாக இது அமையும். எமது வடக்குக் கிழக்கில் மருத்துவக் கல்வியை முடித்த மருத்துவர்கள் எமது பிரதேசத்தில் சேவையாற்றுவதற்கு இது வரப்பிரசாதமாக அமையும். பல்வேறு துறைகளில் வைத்திய நிபுணர்களாகிய எமது வைத்திய கலாநிதிகள் தமது பிரதேச மக்களுக்குக் கடமையாற்றுகின்ற பெரும் பாக்கியம் பெற்றோம் என்ற மனத்திருப்தியுடன் கடமையாற்ற முடியும்.

ஆகவே, எமது பிரதேசத்தின் மிகப்பெரிய சொத்தை கூறுபோட்டு நாசமாக்க நாம் எந்தக்காரணங்கொண்டும் இடங்கொடுக்கமுடியாது. அவ்வாறு நடைபெற்றால் மக்களைத் திரட்டி எமது எதிர்ப்பை வெளிப்படுத்துவோம். – என்றார்.

இது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கும் வடமாகாணத்தைச் சேர்ந்த அமைச்சர், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களின் தலைவர்கள் மக்கள் பிரதிநிதிகள் என அனைவருக்கும் உடனடியாக மகஜர் அனுப்புமாறும் கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.

இந்தக் கூட்டத்தில் வலி.வடக்கு பிரதேசசபைத் தவிசாளர் சோ.சுகிர்தன், தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை அரச மருத்துவ சங்க உறுப்பினர்கள், தாதியர் சங்கத்தின் யாழ்.மாவட்ட பிரதிநிதிகள் மற்றும் நோயாளர் நலன்புரிச் உறுப்பினர்களுடன் வலி.வடக்கு, வலி.தெற்கு பிரதேச சபைகளைச் சார்ந்த சில உறுப்பினர்களும், வலி.வடக்கில் அமைந்துள்ள பாடசாலைகளின் அதிபர்களும் பொது அமைப்புக்களின் பிரதிநிகள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post