முல்லையில் ஊடகவியிலாளர்கள் தாக்கபட்டதற்கு யாழ் ஊடக அமையம் கண்டனம் - நீதியான விசாரணைக்கும் வலியுறுத்து - Yarl Voice முல்லையில் ஊடகவியிலாளர்கள் தாக்கபட்டதற்கு யாழ் ஊடக அமையம் கண்டனம் - நீதியான விசாரணைக்கும் வலியுறுத்து - Yarl Voice

முல்லையில் ஊடகவியிலாளர்கள் தாக்கபட்டதற்கு யாழ் ஊடக அமையம் கண்டனம் - நீதியான விசாரணைக்கும் வலியுறுத்து
ஊடக அடக்குமுறையின் புதிய வடிவம்

முல்லைத்தீவு முறிப்பு பகுதியில் சட்ட விரோத மரக்கடத்தல் தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்ற முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர்களும் யாழ்.ஊடக அமைய சிரேஸ்ட உறுப்பினர்களுமான சண்முகம் தவசீலன் மற்றும் கணபதிப்பிள்ளை குமணன்  உள்ளிட்ட இருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டமையினை யாழ்.ஊடக அமையம் வன்மையாக கண்டிக்கின்றது.
அதே வேளை மீண்டும் அரங்கேறும் ஊடக வன்முறை தொடர்பில் தனது அச்சத்தை யாழ்.ஊடக அமையம் இவ்வேளையில் பகிர்ந்தும் கொள்கின்றது.
ஏற்கனவே வடகிழக்கில் ஊடக சுதந்திரம் கடந்த காலங்களில் எவ்வாறு அரசினால் பேணப்பட்டதென்பது சொல்லி தெரியவேண்டியதொன்றல்ல.
எமது சக ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப்பணியாளர்கள் 39பேரினது உயிர்களை ஈகம் செய்தே தமிழ் தேசத்தில் ஊடக பணி முன்னெடுக்கப்படுகின்றது.
ஊடக நிறுவனங்கள் தாக்கப்பட்டும் , விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்களால் ஊடகவியலாளர்கள் பலரும் நாட்டை விட்டு வெளியேறும் சூழலே முன்னைய காலங்களில் இருந்து வந்திருந்தது.
ஊடகப்படுகொலைகளிற்கு யுத்த காலத்தை காரணங்காட்டி வந்திருந்த ஆட்சியாளர்களிற்கும் அவர்களது முகவர்களிற்கும் முல்லைத்தீவு முறிப்பு பகுதியில் சட்டவிரோதமான முறையில் தேக்கு மரங்கள் வெட்டப்படுவது யுத்த கால சூழல் இல்லையென்பது தெரியாமலிருக்க வாய்ப்பில்லை.
தாக்குதல் நடத்தியவர்கள் இலங்கை வன வள திணைக்களம் மற்றும் இலங்கை பொலிஸாரின் ஆதரவுடனேயே இந்த மரக்கடத்தலில் ஈடுபட்டதை தாக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் உறுதியாக சுட்டிக்காட்டியுள்ளனர்.
இலங்கை தேசிய மரக்கூட்டுத்தாபனம் ஒன்றின் உப ஒப்பந்ததாரராகிய பெரும்பான்மை இனத்தினைச் சேர்ந்த நபரொருவரது நிறுவனம் ஒன்றுக்கான மரம் ஏற்றும் நடவடிக்கையை மேற்கொண்டுவரும் குறித்த குழு தமக்கு காப்பரணாக குறித்த நிறுவத்தினையும் மரக்கூட்டுத்தாபனத்தினையும் பயன்படுத்தி வந்திருக்கின்றதென்பதையும் ஊடகவியலாளர்கள் அம்பலப்படுத்தியுள்ளனர்.
மீண்டும் ஊடகவியலாளர்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் அரச இயந்திர ஆதரவுடனான தாக்குதல்கள் நிச்சயமாக மகிழ்ச்சியான சூழலொன்றை எதிர்வருங்காலங்களில் நிச்சயம் ஏற்படுத்தாதென்பதை யாழ்.ஊடக அமையம் சுட்டிக்காட்ட விரும்புகின்றது.
தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்யவும் சட்டத்தின் முன்னிறுத்தவும் யாழ்.ஊடக அமையம் அரசை கேட்டுக்கொள்வதுடன் ஊடக சுதந்திரத்திற்கான பயணத்தில் உறுதியாக அனைத்து ஊடகவியலாளர்களுடனும் கைகோர்த்து பயணிக்குமென்பதையும் தெரிவித்துக்கொள்கின்றது.


ஆ.சபேஸ்வரன்;                                                                    சி.நிதர்சன்,
தலைவர்,                                                                                 செயலாளர்,
யாழ்.ஊடக அமையம்                                                          யாழ்.ஊடக அமையம்

0/Post a Comment/Comments

Previous Post Next Post