யாழ் கல்வி வலயத்தில் முறைகேடு என இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு - விளைவு ஏற்படுமென்றும் எச்சரிக்கை - Yarl Voice யாழ் கல்வி வலயத்தில் முறைகேடு என இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு - விளைவு ஏற்படுமென்றும் எச்சரிக்கை - Yarl Voice

யாழ் கல்வி வலயத்தில் முறைகேடு என இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு - விளைவு ஏற்படுமென்றும் எச்சரிக்கை



யாழ்ப்பாண கல்வி வலயத்தில் நிவர்த்தி செய்யப்படாத, பக்கச்சார்பான இடமாற்றங்கள் காரணமாக நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற யாழ்.கல்வி வலய இடமாற்றச் சபையில் இலங்கை ஆசிரியர் சங்கம் கலந்து கொள்ளாமல் புறக்கணித்துள்ளது. 

கடந்த வருட இடமாற்றச் சபையில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்தப்படாமல், ஒரு சில தனிப்பட்டவர்களின் தலையீடு காரணமாக தொடர்ந்தும் பக்கச்சார்பாகவே இடமாற்றங்கள் நடைபெற்று வரும் நிலையில், இடமாற்றச்சபை கூடுவது என்னும் போர்வையில் முறைகேடுகளை அனுமதிக்க முடியாது. 

இதன்; அடிப்படையிலேயே, இலங்கை ஆசிரியர் சங்கம் குறித்த இடமாற்றச் சபையைப் புறக்கணித்துள்ளது. ஆயினும், நேற்றைய தினம் இலங்கை ஆசிரியர் சங்கம் இன்றி இடமாற்றச்சபை நடைபெற்றிருந்தது. இதன்மூலம் -; ‘முறைகேடுகளை தொடர்ச்சியாக ஆதரித்து வருகின்றோம்’ என்ற விடயத்தையே குறித்த இடமாற்ற சபையில் கலந்து கொண்டவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.  

கடந்த வருட இடமாற்றச்சபையில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் படி, முறைகேடுகள் நிவர்த்தி செய்யப்படும் வரை, யாழ்.கல்வி வலயத்தில் எடுக்கப்படும் இடமாற்றத் தீர்மானங்களுக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் ஒத்துழைப்பு வழங்கப்போவதில்லை. 

வெளிமாவட்டங்களிலிருந்து கடமையாற்றி வரக்கூடிய ஆசிரியர்களின் இடமாற்றங்களுக்கு மட்டுமே இலங்கை ஆசிரியர் சங்கம் ஒத்துழைக்கும் என்பதுடன், ஏனைய அனைத்து யாழ்.மாவட்ட இடமாற்றங்களுக்கும், கடந்த இடமாற்றசபை கூட்டத்தில் எடுத்திருந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்படும்வரை ஒத்துழைக்கப்போவதில்லை. கல்வி அதிகாரிகள், தமக்கு சார்பானவர்களை பாதுகாக்கும் நோக்கில் மேற்கொள்ளும் முறைகேடுகளுக்கு எதிராக தொழிற்சங்க போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய நிலைக்கு எம்மைத் தள்ளி வருகின்றனர். 

கடந்த வருடம் யாழ்.கல்வி வலய இடமாற்றச்சபையில், எம்மால் தெரிவிக்கப்பட்டிருந்த முறைகேடுகளை 15 நாட்களுக்குள் நிவர்த்தி செய்து, மேன்முறையீட்டு சபையைக் கூட்டுவதாக, யாழ்.வலயக் கல்விப் பணிப்பாளர் உறுதியளித்திருந்தார். அவை எழுத்து மூலமாக அறிக்கையிடப்பட்டிருந்தது. ஆயினும், முறைகேடுகள் தீர்க்கப்படவுமில்லை, மேன்முறையீட்டு சபை கூட்டப்படவுமில்லை. 

வழங்கிய வாக்குறுதிகளுக்கமையவும், எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கமையவும், இத்தகைய முறைகேடுகள் நிவர்த்திசெய்தால் மட்டுமே நேற்றைய இடமாற்றச்சபை கூட்டத்தில் கலந்துகொள்வோம் என யாழ்.வலயக் கல்விப் பணிப்பாளருக்கும் எம்மால் தெரிவிக்கப்பட்டுமிருந்தது. குறித்த விடயம் கல்வியமைச்சின் செயலாளராலேயே தாமதமடைகின்றது என வலயக் கல்விப் பணிப்பாளரால் குறிப்பிடப்பட்டது.

 வலயக் கல்விப் பணிப்பாளர், கல்வியமைச்சின் செயலாளர் மீதும், செயலாளர் வலயக்கல்விப் பணிப்பாளர் மீதும் மாறி மாறி பந்தை எறிந்து தொடர்ச்சியாக எம்மை ஏமாற்றும் முயற்சியிலேயே ஈடுபட்டு வருகின்றனர். 

ஒரு சிலரை திருப்திப்படுத்துவதற்காக, கல்விக் கட்டமைப்பில் முறைகேடுகளை உருவாக்கி வருகின்றார்கள். ஒவ்வொருவருக்கு ஒரு நீதி என செயற்படுவதற்கு இலங்கை ஆசிரியர் சங்கம் ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை. 

குறித்த சில முறைகேடுகள் குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பரிந்துரையைக் கூட மீறும் வகையிலேயே கல்வியமைச்சின் செயலாளரும், யாழ்.வலயக் கல்விப் பணிப்பாளரும் செயற்பட்டு வருகின்றனர். 

வடமாகாண கல்வியமைச்சின் அதிகாரிகளின் முறைகேடுகளுக்கு சுயாதீன விசாரணைக்குழு அமைக்குமாறு தொடர்ச்சியாக நாம் வலியுறுத்திவரும் நிலையில், வடமாகாண ஆளுநர் இந்த முறைகேடுகளை நிவர்த்திசெய்ய எந்தவிதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முன்வரவில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும். 

இந்த முறைகேடுகள் தீர்க்கப்படவில்லையாயின், வருடாந்த இடமாற்றங்களில் வடமாகாண கல்வியமைச்சு பாரிய விளைவுகளை சந்திக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்தார். 



0/Post a Comment/Comments

Previous Post Next Post