அமைச்சர்கள் வருகையால் கொரோனா தொற்றும் என்ற அச்சநிலை தேவையற்றது – டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு! - Yarl Voice அமைச்சர்கள் வருகையால் கொரோனா தொற்றும் என்ற அச்சநிலை தேவையற்றது – டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு! - Yarl Voice

அமைச்சர்கள் வருகையால் கொரோனா தொற்றும் என்ற அச்சநிலை தேவையற்றது – டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!



யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்திக் குழுக் கூட்டத்தினால் கொரோனா பரவும் அச்சநிலை உருவாகும் என்று அச்சம் கொள்ளத் தேவையில்லை. அமைச்சர்கள் உள்ளிட்ட அனைவரும் பி..சி.ஆர் பரிசோதனை மேற்கொண்டு அனைத்து சுகாதார நடைமுறைகளையும் பின்பற்றியே வந்திருந்தனர் என தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறித்த நிகழ்வு ஒரு களியாட்ட நிகழ்வும் அல்ல எனவும் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலுள்ள அமைச்சரின் அலுவலகத்தில் இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போது ஊடகவியலாளர் ஒருவர் இது தொடர்பில் கேள்வி எழுப்பியிருந்த நிலையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில் –

கொரோனா தொற்றானது இலங்கையை மட்டுமல்லாது உலகம் முழுவதும் பரவியுள்ள ஒரு தொற்றாகும். இந்நிலையில் இலங்கையில் குறித்த தொற்று இவ்வாண்டின் முற்பகுதியில் ஏற்பட்டபோது அதை ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் வெற்றிகரமாக எதிர்கொண்டு கட்டுப்படுத்தியிருந்தது.

ஆனாலும் ஒரு சில காரணங்களால் அத்தொற்று இலங்கையில் மீண்டும் பரவியுள்ளது. இதையும் அரசாங்கம் கட்டுப்படுத்தும் என்ற நம்பிக்கை அனைத்து மக்களிடையேயும் உண்டு.

அதேபோல இத்தொற்று ஒரு சிலரது தொழில்துறையை மட்டும் பாதித்திருக்கவில்லை. இது அனைத்து உழைப்பாளிகளையும் பாதித்துள்ளது. அத்துடன் கடலுணவில் இது பரவுவதாக சிலரது போலி பிரசாரங்களால் மக்களிடையே கடலுணவு  விற்பனையில் சிறு பின்னடைவு காணப்பட்டது. ஆனாலும் இது மனிதரிடமிருந்து மனிதருக்கு பரவுவதால் நோயுற்ற ஒரு மனிதன் கடலுணவல்ல மரக்கறிவகையுள்ளிட்ட எதனை தொட்டாலும் அதனூடாக பரவும் என்பதே உண்மை நிலை.

அத்துடன் குறித்த நிகழ்வானது இம்மாவட்ட மக்களின் நலன்களை முன்னிறுத்தியே நடத்தப்’பட்டது. இது ஒரு களியாட்ட நிகழ்வும் அல்ல. அத்துடன் நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு கோரி எவரையும் வற்புறுத்தியும் அழைத்திருக்கவில்லை.

அத்துடன் இந்நோய்த் தொற்றை கட்டுப்படுத்த கட்டுப்பாடுகள் சுகாதார தரப்பினரால் போடப்பட்டுள்ள நிலையில் இந்நிகழ்வு நடைபெற்றதால் எவரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை. அனைத்து அமைச்சர்களும் அவர்களுடன் வருகைதந்தோரும் சுகாதார முறைகளை பின்பற்றி அதன் அனுமதியுடனேயே வருகை தந்திருந்தனர் என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post