ஹாட்லியின் மைந்தர்கள் நினைவு குருதிக்கொடை முகாம் நடைபெற்றது! - Yarl Voice ஹாட்லியின் மைந்தர்கள் நினைவு குருதிக்கொடை முகாம் நடைபெற்றது! - Yarl Voice

ஹாட்லியின் மைந்தர்கள் நினைவு குருதிக்கொடை முகாம் நடைபெற்றது!




ஹாட்லியின் மைந்தர்களது 21 மற்றும் 16 ஆம் ஆண்டு நினைவை முன்னிட்டு ஹாட்லியின் மைந்தர்கள் நிதியத்தின் ஏற்பாட்டில், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை இரத்த வங்கி பிரிவினரது அனுசரணையில் குருதிக்கொடை முகாம் இன்று சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தற்போதைய கொரோனாத் தொற்று தடுப்பு நடவடிக்கையாக கடைப்பிடிக்கப்பட்டுவரும் சுகாதார-பாதுகாப்பு நடைமுறைகளுக்கு அமைவாக தான்னார்வ குருதிக்கொடையாளர்களது விபரங்கள் முன்கூட்டியே பெறப்பட்டு சுகாதாரப்பிரிவினர் மூலம் உறுதிசெய்யப்படே குருதிக்கொடை முகாமில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கல்வி செயற்பாட்டின் நிமித்தம் வடமராட்சி இன்பர்சிட்டி கடற் பகுதியில் 1999 ஆம் ஆண்டு நவம்பர் 17 ஆம் திகதி, கடல்வள ஆராட்சியில் ஈடுபட்டிருந்தவேளை கடல் அலையில் சிக்குண்டு உயிரிழந்திருந்த யாழ்.ஹாட்லி கல்லூரியின் 2000 ஆம் ஆண்டு உயர்தர வகுப்பு மாணவர்கள் நான்கு பேரின் 21 ஆவது ஆண்டு, மற்றும் பேராதனை பல்கலைக் கழகத்தில் பொறியியல் பீட மாணவனாக கல்வி கற்றுவந்த வேளை புகையிரத விபத்தில் சிக்கி உயிரிழந்த மாணவனது 16 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு கடந்த நவ-17 காலை 9.00 மணியளவில் வடமராட்சி இன்பர்சிட்டி கடற்கரையில் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அவர்களின் நினைவாக வருடா வருடம் முன்னெடுக்கப்பட்டுவரும் குருதிக்கொடை முகாம் இன்று சனிக்கிழமை (நவ-21) காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகி மதியம் 2.00 மணிவரை இடம்பெற்றுள்ளது.

ஹாட்லிக் கல்லூரியின் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற இக்குருதிக் கொடை முகாமில் பங்கேற்க ஹாட்லிக் கல்லூரியின் பழைய மாணவர்கள் உள்ளிட்ட 70 இற்கு மேற்பட்டவர்கள் தாமக முன்வந்து விபரங்களை பதிவு செய்திருந்தனர்.

தற்போதைய சுகாதார-பாதுகாப்பு நடைமுறைக்கிணங்க குருதிக்கொடை முகாம் முன்னெடுக்கப்படுவதால் இரண்டு முகாமாக நடத்த அறிவுறுத்தப்பட்டதையடுத்து இன்று நடைபெற்ற முகாமில் 28 பேர் குருதி வழங்கியுள்ளனர்.

ஏனைய தன்னார்வலர்களிடம் இருந்து வரும் சனிக்கிழமை (நவ-28) காலை 9.00 மணி முதல் நண்பகல் 2.00 மணி வரை நடைபெறவிருக்கும் அடுத்த குருதிக்கொடை முகாமில் குருதி பெற்றுக்கொள்ள ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஹாட்லிக்கல்லூரியின் 2000 ஆம் ஆண்டு உயர்தர மாணவர்களாக கல்விகற்றுவந்த பூரணமூர்த்தி-கந்தர்வன், சிவநாதன்-இரவிசங்கர், சுந்தரலிங்கம்-சிவோத்தமன் மற்றும் பாலகிருஸ்ணன்-பிரதீபன் ஆகியோர் கடந்த 17/11/1999 அன்று வடமராட்சி இன்பர்சிட்டி கடலிலும், பேராதனை பல்கலைக் கழகத்தில் பொறியியல் பீட மாணவனாக இருந்த பொழுதில் 17/05/2004 அன்று இடம்பெற்ற புகையிரத விபத்தில் சிக்கி மரியரட்ணம்-குணரட்ணம் என்ற மாணவனும் சாவடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post