கிளைமத்தோன் நிகழ்வு இரண்டாவது வருடமாகவும் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது - Yarl Voice கிளைமத்தோன் நிகழ்வு இரண்டாவது வருடமாகவும் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது - Yarl Voice

கிளைமத்தோன் நிகழ்வு இரண்டாவது வருடமாகவும் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது




நவம்பர் 13,14,15 ஆம் திகதிகளில் உலகம் முழுவதும் காலநிலை மாற்றத்திற்கான தீர்வுகளை வலியுறுத்தி நூற்றைம்பதுக்கும் மேற்பட்ட பெருநகரங்களில் இளையோர் அணிதிரள உள்ளார்கள். 


தென்னாசியாவில் டாக்கா, கராச்சி, ஐதரபாத், மும்பை போன்ற பெருநகரங்களின் வரிசையில் யாழ்ப்பாணமும்கிளைமத்தோனில் இணைகிறது.இலங்கையில் முதன்முதலாக 2019ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட கிளைமத்தோன் நிகழ்வு இரண்டாவது வருடமாகவும் தொடர்கின்றது. 


உலக பொது முடக்கம் காரணமாக இந்த வருட நிகழ்வுகள் முழுமையாக இணையவழி ஊடாகவே ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன.. புதிய சவால்களை இளையோர் நாம் ஒன்றிணைந்து எதிர்கொள்வது மட்டுமல்லாது உலகமெங்கும் உள்ளோரை காலநிலை மாற்றம் தொடர்பாகப் பேச யாழ்ப்பாணத்திற்கு இணையவழியில் அழைத்து வருகின்றோம்.

இவ்வருடம் யாழ்ப்பாணத்தில் கிளைமத்தோன் பெருநிகழ்வை முன்னெடுப்பதற்கான ஆரம்பக்கட்ட முயற்சிகளை இயற்கை வழி இயக்கம் OMNE (Organic Movement of North and East) பிரதான ஒழுங்கமைப்பாளர் என்ற வகையில்  மேற்கொண்டது. யாழ்ப்பாண மாநகர சபை, யாழ்ப்பாண வர்த்தகத் தொழிற்துறை மன்றம் (CCIY), வடக்கு மாகாணத் தகவல் தொழில்நுட்பச் சம்மேளனம் (NCIT), யாழ்ப்பாணப் பயில்களம் (JLF), சுவடி நிறுவகம் ஆகியோர் பிரதான பங்காளர்களாக இணைந்து கொண்டமை இம்முயற்சிக்கு மேலும் வலுச்சேர்க்கிறது.. இப் பெருநிகழ்வினை வெற்றியடையச் செய்ய Comdu.it & ITEE Foundation ஆகிய அமைப்புகளும் முக்கிய பங்காளர்களாகப் புலம்பெயர் நாடுகளில் இருந்து கைகோர்த்துள்ளனர்.

பாடசாலை மாணவர் மட்டத்தில் காலநிலை மாற்றம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தச் சிறகுகள் அமையம் மூலம் கட்டுரை, சித்திரம் மற்றும் ஆக்கப் போட்டிகளும், மனிதம் அமைப்பின் ஊடாக ஒளிப்படப் போட்டிகளும் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாண மாநகரம் எதிர்நோக்கும் காலநிலை மாற்றம் சார்ந்த சவால்கள் தொடர்பில் தொடர்சியாகத் துறைசார் வல்லுனர்கள் மற்றும் செயல் முனைவோர் இணைந்து கொள்ளும் கிளைமத்தோன் உரையாடல் (Climathon Talks) நிகழ்வுகள் இணையவழியாக நடத்தப்பட்டு வருகின்றன.

சுற்றுச்சூழல் சார்ந்த பல்வேறு பணிகளை முன்னெடுத்து வரும் இளையோர் அமைப்புகளான மனிதம், வடமராட்சி பசுமை நிழல்கள், ஒளடதம், Zero Plastic Forum, விதை அனைத்தும் விருட்சமே, பசுமை நிழல்கள், சுயாதீன இளையோர் அமைப்பு - வவுனியா, சுழியம் அமைப்பு - மட்டக்களப்பு, சுவடுகள் அமையம், சிறகுகள் அமையம் ஆகிய அமைப்புகள் இம்முயற்சியில் பங்காளர்களாக இணைந்து நிகழ்விற்கு மேலும் வலுச் சேர்த்துள்ளனர்.

இந்நிகழ்வில் இளம் தொழில் முயற்சியாளர்கள், புத்தாக்குனர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் எனப் பலரும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளக்கூடிய புதுமையான கருத்திட்டங்களை நிபுணர் குழுவிடம் முன்வைக்கவுள்ளார்கள்.  நிலைபேறான உணவு மற்றும் நீர் தொகுதி, நிலைபேறான கழிவு முகாமைத்துவம், நிலைபேறான போக்குவரத்து மற்றும் மீள் பயன்பாட்டு சக்திகள் ஆகிய மூன்று பிரிவுகளில் எதிர்நோக்கும் சவால்களுக்கான தீர்வுகளை முன்வைக்கவுள்ளனர். 2030ஆம் ஆண்டளவில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளத்தக்க நிலைபேறான யாழ்ப்பாண மாநகரை உருவாக்குவதே இவர்களின் நோக்கமாகும்.

13.11.2020 (வெள்ளி) அன்று காலை 8.30 மணி தொடக்கம்  11.30 மணி வரை கிளைமத்தோன் நிகழ்வின் ஆரம்ப நிகழ்வுடன் கூடிய அறிமுக நிகழ்வு இடம்பெறும். 14.11.2020 (சனி) அன்று காலை 8.30 மணிக்கு சூழலியலாளர்.  திரு. பொ. ஐங்கரநேசன் மற்றும் 15.11.2020 (ஞாயிறு) அன்று காலை 8.30 மணிக்கு திரு.ரியாஸ் அகமேட் (விரிவுரையாளர் -கிழக்கு பல்கலைக்கழகம்) ஆகியோர் சிறப்புப் பேச்சாளர்களாகக் கலந்து கொள்வர். 14.11.2020 சனிக்கிழமை அன்று மாலை 4:00 - 7:00 மணி வரை “பண்பாட்டு மாலை” நிகழ்வில் சூழலியல் சார்ந்த பண்பாட்டு அம்சங்களை உள்ளடக்கிய கலை நிகழ்வுகள் இடம்பெறும்.

மேலும் 15.11.2020 (ஞாயிறு) அன்று காலை 10.00 மணி முதல் துறைசார் வல்லுனர்கள் கலந்து கொள்ளும் சிறப்புக் கலந்தாய்வு இடம்பெறும். சூழலியற் தொடர்பாடற் துறையைச் சேர்ந்த தகைசால் பேராசிரியர் நடராஜா சிறீஸ்கந்தராஜா அவர்கள் நெறியாள்கை செய்யும் இச் சிறப்புக் கலந்தாய்வில் கென்ய நாட்டு சூழலியல் செயற்பாட்டாளர் வஞ்சிரா மாத்தாய் அவர்கள் கலந்து கொள்கின்றார். பசுமைப் பட்டி இயக்கத்தின் (Green Belt Movement) ஸ்தாபகரும் 2004 ஆம் ஆண்டில் நோபல் பரிசு பெற்றவரும் ஆகிய வங்காரி மாத்தாய் அவர்களின் மகளே வஞ்சிரா என்பது குறிப்பிடத்தக்கது. வஞ்சிரா மாத்தாய் அவர்கள் 2020 ஆம் ஆண்டில் செல்வாக்கு மிக்க 100 ஆபிரிக்கப் பெண்களில் ஒருவராக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

நெதர்லாந்து வாகனிங்கென் பல்கலைக்கழகத்தில் 'சமூக-இயற்கை நிலைபேறும் மாற்றத்துக்கான கற்றலும்'  என்ற துறைக்கு உரிய  UNESCO  சிறப்புப் பேராசிரியராகக் கடமையாற்றும் திரு ஆர்யன் வால்ஸ் அவர்களும் இக் கலந்துரையாடலில் பங்கேற்க உள்ளார். சமூகத்தில் பரந்து காணப்படும் ல்வகை அறிவுமக்கள் வளம்அவர்தம் படைப்பாற்றல் என்பனவெல்லாம் எமது கல்விக்கூடங்களில் கற்றல் - கற்பித்தலில்  சிறிதும்கூட கையில் எடுத்தாளப்படாமல் தேங்கி நிற்கின்றன என இவர் வாதிடுபவராவார். அவற்றையெல்லாம் கெட்டித்தனமாக உள்வாங்கி எதிர்கால உலகம் இன்றைய நிலையைவிட மேம்பட்டதான கல்வியை பள்ளிக்கூட வகுப்பறை முதல் பல்கலைக்கழகக் கற்றல் வரையிலும் சமூக மாற்றத்திலும் எவ்வாறு  புதுப்புது  வடிவங்களில் கற்றல் நிகழ வைக்கலாம் என்ற  பெருமுயற்சியால் இவர் உலகப் புகழ் பெற்றிருக்கிறார்.

கிளைமத்தோன் நிகழ்வின் இறுதி நிகழ்வு மற்றும் பரிசில் வழங்கல் 15.11.2020 ஞாயிறு அன்று மாலை 4.00 மணி முதல் 7:00 மணி வரை இடம்பெறும். நிகழ்வில் Zoom செயலி ஊடாக இணைந்துகொள்ள Meeting ID - 817 5484 7355

எம் இளையோரின் இவ் அரும் பணி சிறக்க நீங்கள் அனைவரும் இந்நிகழ்வுகளில் இணையவழியில் இணைந்து சிறப்பிப்பது அவசியமானதொன்றாகும். மேலும் விவரங்களை அறிய 0779866409 | 0764658482 என்ற அலைபேசி இலக்கங்கள் md@suvadi.org எனும் மின்னஞ்சல் முகவரியூடாகத் தொடர்பு கொள்ளுங்கள்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post