சமய நிகழ்வுகளை அவமதிப்பது அராஜகத்தின் உச்சம் - சுரேந்திரன் கண்டனம் - Yarl Voice சமய நிகழ்வுகளை அவமதிப்பது அராஜகத்தின் உச்சம் - சுரேந்திரன் கண்டனம் - Yarl Voice

சமய நிகழ்வுகளை அவமதிப்பது அராஜகத்தின் உச்சம் - சுரேந்திரன் கண்டனம்செக்கென்ன சிவலிங்கமென்ன என்று தெரியாத இலங்கை அரசாங்கத்தின்  தொடர்ச்சியான தமிழர் விரோத  நடவடிக்கைகளின் உச்சமாக கார்த்திகைத் தீபத் திருநாளில்  இலங்கை காவல்த்துறையினர் நடந்துகொண்ட விதம் அமைந்துள்ளது இந்த போக்கு வன்மையாக  கண்டிக்கத்தக்கது என்பதுடன்  இந்த செயற்பாடானது  தமிழ் மக்கள் மத்தியில் பாரிய விரக்தி நிலையினை உருவாக்கியுள்ளது. 

அடிக்கடி தான் சிங்கள பௌத்த மக்களின் வாக்குகளால்த்தான் வெற்றிபெற்றதாக கூறிக்கொள்ளும் ஜனாதிபதியின்  தலைமையிலான அரசு தமிழ் மக்களை பழி தீர்க்கின்றதா ? என்ற எண்ணம் தோன்றுகின்றது.

புதிய அரசு ஆட்சிக்கு வந்த காலம் முதல் தொடர்ச்சியாக தமிழ்மக்களின் உரிமைகளை நேரடியாக மறுத்து வருவதுடன் எமது மக்களின் உணர்வுகளையும் மலினப்படுத்தி வருகின்றது. இதுவரை உயிரிழந்த உறவுகளை அஞ்சலிப்பதற்கு கடுமையான தடைகளை விதித்துவந்த அரசாங்கம் தற்போது ஒருபடி மேலே சென்று எமது மக்களின் சமய நிகழ்வுகளைக் கூட குழப்பும் மனநிலைக்கு சென்றுள்ளமை கண்டிக்கத்தக்கது .
கடந்த 29 - 11 - 2020 அன்று சைவமக்களின் பண்டிகையான கார்த்திகைத் தீபத் திருநாளில் யாழ்ப்பாணம், சுண்ணாகத்தில் ஆலயமொன்றில் கார்த்திகை தீபங்களை காவல்த்துறையினர் கால்களால் தட்டிவிட்டதுடன் மற்றும் பல இடங்களில் சமய நிகழ்வுகளை அவமதிக்கும் செயல்பாடுகளில் அரச படைகள் ஈடுபட்டமை கண்டனத்துக்குரிய விடயம் மட்டுமல்ல பூர்வீக குடிகளான தமிழ் மக்கள் மூன்றாம் தர பிரஜைகளாக நடத்தப்படும் போக்கையே காட்டுகின்றன.

மூன்று தசாப்தகால யுத்தத்திற்கு பின்னர் யுத்த அழிவுகளிலிருந்து மீள்வதற்கு போராடிக்கொண்டிருக்கும் தமிழ் மக்கள் மீது தொடர்ந்தும் அராஜகப் போக்கை கடைப்பிடிக்கும் இவர்கள் தமிழ் மக்கள் மத்தியில் விரக்தியையும் குரோத உணர்வையும் வளர்க்க எத்தனிப்பது ஏன் என்ற கேள்வி எழுகிறது. 

பாரிய எதிர்பார்ப்புக்களுடன் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சிக்கு வந்த அரசாங்கம் தமக்கு வாக்களித்த மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதில் தோல்வியடைந்து வருவதனால் சிங்கள மக்களை திருப்திப்படுத்துவதற்காக தமிழர் விரோத போக்கை கடுமையாக கையாண்டு பெரும்பான்மை மக்களை தற்காலிகமாக குளிர்வித்து வருகின்றதோ என எண்ணத் தோன்றுகின்றது.

நடந்துமுடிந்த 2020 பாராளுமன்றத் தேர்தலில் அரச சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற தமிழ் உறுப்பினர்களும் இவற்றை தட்டிக் கேட்காமல் இருப்பது வழமைக்கு மாறாக அரச சார்பு வேட்பாளர்களுக்கு வாக்களித்த தமிழ் மக்கள் தமது தவறை உணர்ச் செய்துள்ளது. இது தமிழ் மக்களுக்கு மாத்திரமல்லாது தமது சுய நலன்களுக்காக பிரிந்து நிற்கும் தமிழ் அரசியல் தலைமைகளுக்கும் பாடமாக அமைத்துள்ளது.

இந்த அரசாங்கம் ஒருபோதும் தமிழ் மக்களின் உரிமைகளை ஏற்றுக்கொள்ளவோ உணர்வுகளை மதிக்கவோ தயாராக இல்லை என்பதனால் தமிழர்கள் தமது இருப்பை உறுதிப்படுத்திக்கொள்ள அனைவரும் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டியதன் அவசியத்தையே இந்த சம்பவங்கள் உணர்த்தியுள்ளன.

சுரேந்திரன் 
தேசிய அமைப்பாளர் 
தமிழ் ஈழ விடுதலை இயக்கம்

0/Post a Comment/Comments

Previous Post Next Post