தமிழ் அரசியல் கைதிகளை உடன் விடுவிக்கவேண்டும் -வலி.மேற்கு பிரதேச சபையில் தீர்மானம்- - Yarl Voice தமிழ் அரசியல் கைதிகளை உடன் விடுவிக்கவேண்டும் -வலி.மேற்கு பிரதேச சபையில் தீர்மானம்- - Yarl Voice

தமிழ் அரசியல் கைதிகளை உடன் விடுவிக்கவேண்டும் -வலி.மேற்கு பிரதேச சபையில் தீர்மானம்-



தமிழ் அரசியல் கைதிகள் கொரோனாவின் பிடியில் சிக்கித் தவிக்கின்ற நிலையில், அவர்களை #விடுவிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலி.மேற்கு பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
 
சகோதர சிங்கள மக்களும் முற்போக்கு சிங்கள அரசியல் தலைவர்களும் இந்த விடயத்தை மனிதநேய ரீதியில் அணுகி அரசுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும் எனவும் வலி.மேற்கு பிரதேச சபை கோரிக்கை விடுத்துள்ளது. 

வலி.மேற்கு பிரதேச சபையின் 34 ஆவது கூட்டம் இன்று (23) பிரதேச சபை மண்டபத்தில் தவிசாளர் த.நடனேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதன்போது, அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக உறுப்பினர் ந.பொன்ராசா விசேட பிரேரணை ஒன்றை சமர்ப்பித்தார். அது சபையில் ஏற்றுக்கொள்ளப்பட்டு தீர்மானமாக எடுக்கப்பட்டது. 

குறித்த பிரேரணையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கையின் பல்வேறு இடங்களிலும் கைது செய்யப்பட்ட 78 தமிழ் அரசியல் கைதிகள் நாட்டின் பல்வேறு சிறைகளிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் மகசீன் சிறைச்சாலை உட்பட மேலும் சில சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 16 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்களில் 4 பேர் நீண்ட காலமாக தடுத்துவைக்கப்பட்டிருக்கின்றனர். 

யுத்தம் முடிவடைந்து 11 வருடங்கள் கடந்துவிட்ட நிலையிலும் யுத்தத்தைக் காரணம் காட்டி கைது செய்யப்பட்ட தமிழ் இளைஞர்கள் 10 தொடக்கம் 25 வருடங்கள் தடுத்துவைக்கப்பட்டிருக்கின்றனர். இவர்களில் சிலர் விடுதலை கிடைக்காமலே கைதி என்ற பெயருடன் உயிரிழந்திருக்கின்றனர். 

தற்போது உலகத்தை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனா நோய்த்தொற்று சிறைச்சாலைக்குள்ளும் புகுந்ததால் கைதிகளில் அனைவரும் ஆபத்தில் சிக்கியிருக்கின்றனர். தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கைதிகளில் பலர் இருதயநோய், நீரிழிவு, மூட்டுவாதம் உள்ளிட்ட பல நோய்களால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். 

இதைவிட தமது விடுதலையை வலியுறுத்தி அடிக்கடி உண்ணாவிரதப் போராட்டங்களில் ஈடுபட்டனர். சிறை நெருக்கடிகளால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக உளவியல் ரீதியான தாக்கத்திற்கு உட்பட்டுள்ளனர். இந்தக் காரணங்களால் இவர்கள் இயல்பாகவே நோய் எதிர்ப்பு சக்தியை இழந்திருக்கின்றனர். இவை கொரோனா நோய் தொற்றுவதற்கான சாதகமான காரணிகள் ஆகும். 

கொரோனா நோயைக் கருத்திக்கொண்டு 8000 ஆயிரம் கைதிகளை விடுதலை செய்வதற்கான நடவடிக்கையை அரசு ஆரம்பித்திருந்தது. இதுவரை 7400 வரையான கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என தெரியவருகின்றது. இதற்குள் தமிழ் அரசியல் கைதிகள் உள்ளடக்கப்படவில்லை. 

கைதிகளை விடுதலை செய்யுமாறு அவர்களின் உறவினர்கள் தொடர் போராட்டங்களை நடத்தினர். தற்போது தமது உறவுகளுக்கு கொரோனா தொற்று என்பதை அறிந்த அவர்களின் பெற்றோர், மனைவி, பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் தினமும் கதறிக்கொண்டிருக்கின்றனர். அவர்களின் வீடுகள் நிம்மதி இழந்திருக்கின்றன.
 
நாடு தற்போது கொரோனா பேரிடரைச் சந்தித்திருக்கின்றது. என்றுமில்லாத வகையில் உலக மக்கள் கொடிய நோயின் பிடிக்குள் சிக்கியிருக்கின்றனர். நாளாந்தம் ஆயிரக்கணக்கானோர் மரணித்துக்கொண்டிருக்கின்றனர். இந்த சந்தர்ப்பத்திலாயினும் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என அரசாங்கத்தைக் கோருகின்றோம். 

அதேவேளை, பெரும் ஆபத்திற்குள் சிக்கியிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை மனிதாபிமான ரீதியில் விடுதலை செய்வதற்கு அரசாங்கத்திற்கு அழுத்தும் கொடுக்குமாறு இந்த நாட்டிலுள்ள சிங்கள மக்களிடம் நாம் பகிரங்க கோரிக்கை விடுக்கின்றோம். 

அன்பைப் போதிக்கும் பௌத்த மதத்தை பின்பற்றுகின்ற சகோதர சிங்கள மக்களும் முற்போக்கு சிங்கள அரசியல் தலைவர்களும் தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் மனித நேயத்துடன் கரிசனை செலுத்துமாறும் நாம் கோரிக்கை முன்வைக்கின்றோம்l – என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தீர்மானம் இன்றைய தினமே உரிய தரப்பினருக்கு அனுப்பிவைக்கப்படும் என தவிசாளர் தெரிவித்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post