சுகாதார நடைமுறை தளர்வுகளை துஷ்பிரயோகம் செய்யாதீர்கள் - பொது மக்களிடம் அரச அதிபர் கோரிக்கை - Yarl Voice சுகாதார நடைமுறை தளர்வுகளை துஷ்பிரயோகம் செய்யாதீர்கள் - பொது மக்களிடம் அரச அதிபர் கோரிக்கை - Yarl Voice

சுகாதார நடைமுறை தளர்வுகளை துஷ்பிரயோகம் செய்யாதீர்கள் - பொது மக்களிடம் அரச அதிபர் கோரிக்கை
சுகாதார நடைமுறை தளர்வுகளை பொதுமக்கள் துஷ்பிரயோகம் செய்யாது  தங்களையும், சமூகத்தையும் பாதுகாக்கும் வகையில் செயற்பட வேண்டியது அவசியம் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.

யாழ் மாவட்டத்தில் தற்போதைய கொரோனா  நிலைமைகள் தொடர்பில் இன்றையதினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே கணபதிப்பிள்ளை மகேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்... 

யாழ் மாவட்டத்தில்  தற்போதைய நிலையில் 183 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலை காணப்படுகின்றது. கடந்த ஒக்டோபர் மாதத்தின் பின் தொற்று  நிலைமை ஏற்பட்டுள்ளது.

அதேவேளை யாழில் தொற்றுக்குள்ளான 126 நபர்கள் பூரணமாக சுகமடைந்து வீடு திரும்பியிருக்கிறார்கள். தற்போதைய நிலையில் ஆயிரத்து 415 குடும்பங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்து 598 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். 
சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற நிவாரணப் பொதிகள் கட்டம் கட்டமாக தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகின்றது.

கடந்த இரண்டு மூன்று நாட்களாக யாழ் மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை  தொடர்ச்சியாக குறைவடைந்து செல்வதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.

இருந்த போதிலும் அந்த நிலைமையினை  நாங்கள் விழிப்பாக இருந்து  கடந்து செல்லவேண்டிய நிலை காணப்படுகின்றது எனவே பொதுமக்கள் சுகாதார வழிகாட்டல்களைப் பேணி முக கவசம் அணிந்து  தங்களுடைய வழமையான செயற்பாடுகளை மேற்கொள்வதன் மூலம் நமக்கு ஏற்பட்டுள்ள இந்த நிலைமையிலிருந்து பாதுகாப்பாக கடந்து செல்ல முடியும்.

இந்த நிலையில்  கொரோனா  தொற்றினை தடுப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் சற்று யாழ் மாவட்டத்தில் தளர்த்தப்பட்டுள்ளன . பாடசாலைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன அதேபோல் எதிர்வரும் காலங்களில் தனியார் கல்வி நிலையங்களை ஆரம்பிப்பதற்குரிய அறிவுறுத்தல்கள் கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த நிலையில் சினிமா திரையரங்குகள் மற்றும் வழிபாட்டு இடங்கள் போன்றவற்றில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன அதாவது சில கட்டுப்பாடுகளுடன் சிலகட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டும் உள்ளன.

இதனைவிட கடந்த வாரம் தொடக்கம் மீன் சந்தைகள், அதேபோல் மூடப்பட்டிருந்த கடைகளினைமீள திறப்பதற்குரிய அனுமதி சுகாதாரபிரிவினரால் வழங்கப்பட்டுள்ளது.

எனினும்  பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி தமது செயற்பாடுகளை செயற்படுத்த வேண்டும் அதேபோல் நேற்றைய தினம் இடம்பெற்ற சுகாதார வழிகாட்டல் குழுவின் சிபார்சின் படி எதிர்வரும் திங்கட்கிழமை முதல் யாழ்ப்பாண மாவட்டத்தில் திருமண மண்டபங்கள் வரவேற்பு மண்டபங்கள் மற்றும் ஹோட்டல் மண்டபங்களை திறப்பதற்குரிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த அனுமதியானது அந்த மண்டபத்தினுடைய கொள்ளளவில் 50 வீதத்திற்கு சமூக இடைவெளி பேணப்பட்டு அதேபோல் அனுமதிக்கப்பட கூடிய ஆட்களின் எண்ணிக்கை 150 எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் அங்கு சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக பின்பற்றி நிகழ்வுகளை நடத்துவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது அதே போல உணவு பரிமாறும் போது  சுயமாக பரிமாறிக்கொள்வது நிறுத்தப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பான வழிகாட்டல்கள் சுகாதார பிரிவினரால் அந்தந்த தரப்பினருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது இதனைவிட எதிர்வரும் 18ஆம் திகதி மூடப்பட்டிருந்த சந்தைகளை மீள திறக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

எனவே அந்தந்த சந்தைகளுக்கு பொறுப்பான உள்ளூராட்சி மன்றங்கள் அதற்குரிய சுகாதார வழிகாட்டலை சரியாக பின்பற்றி சந்தைகளை திறப்பதற்கு  அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

எனவே தளர்வுகளை பொதுமக்கள் துஷ்பிரயோகம் செய்யாது சுயகட்டுப்பாட்டோடு தங்களையும் சமூகத்தையும் பாதுகாக்கும் வகையில் செயற்பட வேண்டியது கட்டாயமாக இருக்கின்றது.

இந்த தளர்வுகள் மக்களுடைய சிரமங்களை குறைப்பதற்கும் அதே போல அவர்களுடைய வாழ்வாதார நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்குமாகவே இந்த தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன எனவே பொதுமக்கள் எந்தவிதமான அலட்சியப் போக்கையும் காட்டாது அனைவரும் ஒரு சமூகப் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டியது அனைவரதும் பொறுப்பாகும்.

இந்த தளர்வுகள் யாவற்றையும் வேண்டத் தகாத விளைவுகளை ஏற்படுத்தாத வண்ணம் பயன்படுத்த வேண்டும். அத்தோடு தற்பொழுது சுகாதாரத் திணைக்களத்தினரால் மாகாணங்களுக்கு இடையில் பயணம் செய்வோர் தனிமைப்படுத்தல் பட தேவையில்லை என அறிவுறுத்தப்பட்டுள்ளது அத்தோடு அவ்வாறு செய்வதாயினும் தங்களுடைய அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ் மாவட்டத்தினை பொறுத்தவரை சுகாதாரப் பிரிவினர் மற்றும் ஏனைய பிரிவினரின் ஒத்துழைப்புடன்  கொரோனா நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்றோம் எனினும் இந்த நடைமுறையானது பொதுமக்களின் சிரமத்தை குறைப்பதற்காகவே ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சுகாதார பிரிவினர் தனிமைப்படுத்தல் தொடர்பாக வெளி மாவட்டங்களிலிருந்து வருவோர் தொடர்பில் தகவல்களை சேகரித்து அவர்களுக்குரிய வழிகாட்டல்களை வழங்குவார்கள். அத்தோடு அவர்களை தனிமைப்படுத்துவதாயின் அதனை சுகாதார அமைச்சுக்கு தெரியப்படுத்தி அவர்களின் அனுமதியுடன் தனிமைப் படுத்துவார்கள்

மாவட்டங்களுக்கிடையில் பயணம் செய்வோரை சிரமத்துக்குள்ளாக்காதவாறு இந்த நடைமுறை அறிவிக்கப்பட்டுள்ளது எனினும் இந்த கட்டுப்பாடு முழுமையாக தளர்த்தப்பட்டதாக ஏற்றுக்கொள்ள முடியாது.

சுகாதாரப் பிரிவினர்  வெளிமாவட்டங்களில் இருந்து வருபவர்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பது தொடர்பில் சுகாதாரப் பிரிவினர் வழிகாட்டுவார்கள் எனவே மக்களை சிரமத்திற்குள்ளாகி விடகூடாது என்பதற்காக தளர்த்தப்பட்டுள்ள இந்த நடைமுறையானது முழுமையாக தளர்த்தப்பட்டதாகக் கருதப்பட முடியாது எனினும் அந்தந்த பகுதி சுகாதார பிரிவினரால் அதற்குரிய வழிகாட்டல்கள் பின்பற்றப்படும்.

எனவே வெளி மாவட்டங்களில் பயணங்களை மேற்கொள்வோர் தமது பயணவிவரங்களை  சுகாதாரப் பிரிவினருக்கு வழங்குவதன் மூலமே அதற்குரிய நடவடிக்கையினை  முன்னெடுக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post