தமிழ்த் தேசிய இனத்திற்கு எதிரான அரசின் நிலைப்பாட்டைக் கண்டித்து சுதந்திரதினத்தைப் புறக்கணிப்போம். சுரேஷ் பிறேமச்சந்திரன் அறைகூவல் - Yarl Voice தமிழ்த் தேசிய இனத்திற்கு எதிரான அரசின் நிலைப்பாட்டைக் கண்டித்து சுதந்திரதினத்தைப் புறக்கணிப்போம். சுரேஷ் பிறேமச்சந்திரன் அறைகூவல் - Yarl Voice

தமிழ்த் தேசிய இனத்திற்கு எதிரான அரசின் நிலைப்பாட்டைக் கண்டித்து சுதந்திரதினத்தைப் புறக்கணிப்போம். சுரேஷ் பிறேமச்சந்திரன் அறைகூவல்
இலங்கை சுதந்திரம் அடைந்தகாலம் தொட்டு இன்றுவரை தமிழ்த் தேசிய இனத்தை இல்லாமல் செய்யும் நோக்கில் 
செயற்படுகின்ற போக்கைக் கண்டித்தும் பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதனத்தோடு விளையாடும் 
போக்கைக் கண்டித்தும் இஸ்லாமியர்களின் மத நம்பிக்கைகளை அவமதிக்கும் போக்கைக் கண்டித்தும் இலங்கையின் 
சுதந்திர தினத்தைப் பகிஷ்கரிக்க அணிதிரளுமாறு தமிழ்த் தேசிய இனத்திற்கும் பெருந்தோட்ட 
பாட்டாளிகளுக்கும் இஸ்லாமிய சகோதரர்களுக்கும் ஜனநாயக முற்போக்கு சக்திகளுக்கும் ஈழ மக்கள் புரட்சிகர 
விடுதலை முன்னணியின் தலைவரும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் இணைப்பேச்சாளருமான சுரேஷ் க 
பிறேமச்சந்திரன் அறைகூவல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையின் முழுவிபரம் வருமாறு:
1972ஆம் ஆண்டு இலங்கை குடியரசு யாப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த குடியரசு யாப்பினை தமிழ் 
மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அந்த நாள் தமிழ் மக்களின் கரிநாளாக அனுஷ்டிக்கப்பட்டது. தொடர்ந்தும் 
அது கரிநாளாகவே அனுஷ்டிக்கப்பட்டு வந்தது. 1978ஆம் ஆண்டு மற்றொரு புதிய அரசியல் யாப்பினை 
முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தன அறிமுகப்படுத்தினார். அதனையும் தமிழ் மக்கள் 
ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் இலங்கையின் சுதந்திர தினம் என்பது இலங்கை தமிழ் மக்களுக்கு தொடர்ந்தும் 
கருப்பு தினமாகவே இருந்து வந்துள்ளது. எதிர்வரும் 4ஆம் திகதி எழுபத்து மூன்றாவது சுதந்திர தினம் 
அனுட்டிக்கப்படவுள்ளது. இந்த இடைப்பட்ட காலத்தில் தமிழ் மக்கள் தமது விடுதலைக்காக இலட்சக்கணக்கில் தமது 
சொந்தபந்தங்களை இழந்தும் போராடி வருகின்றனர். இன்றும் அரசியல் உரிமைகளுக்காகவும் காணாமல் 
ஆக்கப்பட்டோருக்காகவும் அரசியல் கைதிகளின் விடுதலைக்காகவும் போராடிக்கொண்டிருக்கிறார்கள். 
ஆனால் அரசாங்கமோ தமிழ் மக்களின் புராதனச் சின்னங்களை அழிப்பதிலும் அத்தகைய புராதனச் 
சின்னங்கள் உள்ள இடங்களில் புத்தர் சிலைகளை நிறுவுவதிலும் காணிகளை பலாத்காரமாக அபகரித்து சிங்கள 
மக்களைக் குடியேற்றுவதிலும் வடக்கு-கிழக்கு இணைப்பை இல்லாதொழித்து அந்த நிலத் தொடர்ச்சியை இல்லாமல் 
செய்வதிலும் வேகமாகச் செயற்பட்டு வருகின்றது. இத்தகைய ஒரு சூழ்நிலையில், சுதந்திர தினமென்பது தமிழ் 
மக்களைப் பொறுத்தவரையில் அது தமிழ் மக்களுக்கான சுதந்திர நாளல்ல. மாறாக அது சிங்கள மக்களுக்கான 
சுதந்திரநாளே. ஆகவே, அத்தகைய ஒரு நாளை தமிழ் மக்கள் ஒரு கருப்பு நாளாகக் கருதி சுதந்திர தினத்தைப் 
புறக்கணிக்குமாறு ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி வேண்டுகோள் விடுக்கின்றது.
அதே சமயம் அரசாங்கத்தினுடைய இத்தகைய எதேச்சாதிகார நடவடிக்கைகளுக்கு எதிராகவும் தமிழ் மக்கள்மீது 
திணிக்கப்படும் அடக்குமுறைகளுக்கு எதிராகவும் முஸ்லிம் மக்களின் மத நம்பிக்கைகளுக்கு எதிராக அவர்களது 
ஜனாசாக்களை எரித்துவரும் அரசின் நடவடிக்கைகளைக் கண்டித்தும் மலையக உழைக்கும் வர்க்க தமிழ் மக்களுக்கு ஆயிரம் 
ரூபாய் அடிப்படைச் சம்பளம் வழங்கப்படும் எனக்கூறி இதுவரை அதனை நடைமுறைப்படுத்த பின்நிற்கும் 
அரசாங்கத்திடம் அதனை நடைமுறைப்படுத்தும்படிக் கோரியும் பொத்துவில் முதல் பொலிகண்டி வரை அரசிறக்கு 
எதிராகச் செயற்படுத்தப்படும் போராட்டங்களில் முழு மக்களையும் கலந்துகொள்ளுமாறும் அதனூடாக எமது 
எதிர்ப்பினை அரசாங்கத்திற்குத் தெரியப்படுத்துமாறும் அனைத்து தமிழ் முஸ்லிம் மக்களையும் ஜனநாயக 
முற்போக்கு சக்திகளையும் கோருகின்றோம்.

சுரேஷ் க.பிறேமச்சந்திரன்
தலைவர்
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி
இணைப்பேச்சாளர்
தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி

0/Post a Comment/Comments

Previous Post Next Post