யாழ்.பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை ஒத்திவைக்க வேண்டும்! -விடாப்பிடியை வி.சி கைவிடவேண்டும்- - Yarl Voice யாழ்.பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை ஒத்திவைக்க வேண்டும்! -விடாப்பிடியை வி.சி கைவிடவேண்டும்- - Yarl Voice

யாழ்.பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை ஒத்திவைக்க வேண்டும்! -விடாப்பிடியை வி.சி கைவிடவேண்டும்-




யாழ். பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா எதிர்வரும் 24,25 ஆம் திகதிகளில் திட்டமிட்டவாறு வெறுமனே பட்டம் பெறும் மாணவர்களுடன் நடைபெறும் என துணைவேந்தர் தலைமையிலான பல்கலைக்கழ நிர்வாகம் அறிவித்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாததது. 

ஒரு மாணவனின் பல்கலைக்கழகக் கல்வி என்பது தனியே வேலைவாய்ப்பிற்கான பட்டப்படிப்பு என்பதற்கு அப்பால் அதற்குள் பல்வேறு உறவுகளுடைய ஏராளமான எதிர்பார்ப்புக்கள் தங்கியிருக்கின்றன.

 பல்கலைக்கழக வாய்ப்பு கிடைத்தவுடனேயே தனது மகனின் பட்டமளிப்பு விழாவை எப்படி நடத்தவேண்டும் என பெற்றோரும், தமது சகோதரனின் பட்டமளிப்பை எப்படி நடத்தவேண்டும் என சகோதரர்களும் ஏன் ஊரில் உள்ள நண்பர்கள் அனைவரும் எதிர்ப்பார்ப்புடன் இருப்பர். 

ஏழைக் குடும்பத்தில் இருந்து கல்வி கற்று பல்கலைக்கழகம் சென்ற தமது பிள்ளை பட்டம் பெறுவதை பார்க்கின்ற பெற்றோருக்கு அதைவிட பெரும் பேறு எதுவும் இல்லை. பின்தங்கிய ஊரில் ஒரு பிள்ளை மட்டும் பல்கலைக்கழகம் தெரிவுசெய்யப்படுவது அந்த ஊருக்கே கொண்டாட்டம். அந்த ஒரு நாளில்தான் பெற்றோரும் உறவினர், நண்பர்களும் பல்கலைக்கழகத்தில் ஒன்றுகூடுவர். 

இவ்வாறான எதிர்பார்ப்புக்கள் அனைத்தையும் தகர்த்தெறிந்து, மாணவனுக்கு மட்டும் பட்டத்தை வழங்கி அனுப்புவதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் எடுத்திருக்கும் நடவடிக்கை ஏற்றுக்கொள்ள முடியாதது. 

யாழ். பல்கலைக்கழகத்தில் கடந்த 2007 ஆம் ஆண்டு எங்கள் கல்விச் செயற்பாடு நிறைவுக்கு வந்தது.  அப்போது கடும் யுத்தம். இதன் காரணமாக மூன்று வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட பின்னர் 2010 ஆம் ஆண்டு எங்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. அப்போதைய துணைவேந்தர் பேராசிரியர் என்.சண்முகலிங்கன் அந்த சூழ்நிலையை சிறப்பாகக் கையாண்டார். 

அதேபோன்று, எந்த நிகழ்வாக, விழாவாக இருப்பினும் இக்கட்டான சூழ்நிலை வரும்போது ஒத்திவைப்பதும் சரியான சூழ்நிலை வரும்போது நடத்துவதும் இயல்பானது. பட்டச் சான்றிதழை வழங்கினால் அவர்கள் வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிப்பார்கள். அதை விடுத்து, தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்ற அடிப்படையில், பட்டமளிப்பு விழாவை நடத்தியே தீருவேன் என துணைவேந்தர் விடாப்பிடியாக நிற்பது ஏன் எனப் புரியவில்லை. 

சுகாதரத்துறையினரின் கொரோனா எச்சரிக்கையையும் பொருட்படுத்தாமல் துணைவேந்தரும் அவர் சார்ந்த குழுவினரும் எடுத்திருக்கும் இந்த முடிவுக்கு ஒட்டுமொத்த பெற்றோரும் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும். 

கொரோனா தடுப்பு நடவடிக்கை வேகமாக முன்னெடுக்கப்படுகின்றது. இன்னும் சில மாதங்களில் கட்டுக்குள் வரலாம். அதன் பின்னர் பட்டமளிப்பு விழாவை நடத்தலாம். ஏன், அடுத்த வருடம் வெளியேறவுள்ள மாணவர்கள் அணியையும் இணைத்து (2010 போன்று) ஒரே தடவையில்கூட நடத்தலாம். அது பிழையில்லை. 

எல்லாவற்றிற்கும் குரல் கொடுக்கும் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இந்த விடயத்தில் அமைதியாக இருப்பதற்கு காரணம் என்ன?

வெளியே நடைபெறும் அநீதிகளுக்கு மட்டுமல்ல, உள்ளே நடைபெறும் தான்தோன்றித்தனமாக செயற்பாடுகளையும் தட்டிக்கேட்க வேண்டியது மாணவர் ஒன்றியத்தின் கடமை என்பதை இங்கு சுட்டிக்காட்டுகின்றேன்.

ந.பொன்ராசா
பல்கலைக்கழக முன்னாள் மாணவன்
வலி மேற்கு பிரதேசசபை உறுப்பினர்

0/Post a Comment/Comments

Previous Post Next Post