மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் நீதி கேட்டு நுழைந்த பெண்ணால் பரபரப்பு - Yarl Voice மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் நீதி கேட்டு நுழைந்த பெண்ணால் பரபரப்பு - Yarl Voice

மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் நீதி கேட்டு நுழைந்த பெண்ணால் பரபரப்புவனவளத் திணைக்களத்தினால் கையகப்படுத்தப்பட்ட தனது காணியை விடுவிக்கக் கோரி பல வருடங்களாகப் போராடிய பெண் ஒருவர் இது வரை நியாயம் கிடைக்காத நிலையில் மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நேற்று வியாழக்கிழமை காலை இடம்பெற்ற போது அந்தக் கூட்டத்திற்குள் அத்துமீறி நுழைந்து ஆளுநரிடம் பிரச்சினையை எடுத்துக் கூற முயன்றமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,
முருங்கன் பிட்டி பகுதியைச் சேர்ந்த சீவரத்தினம் தயாளசீலி  என்ற பெண்ணுக்கு சொந்தமான 15 ஏக்கர் காணி,வனவள திணக்களத்தினால் அபகரிக்கப்பட்டு ஐந்து வருடங்கள் கடந்துள்ளன.

எனினும் இது வரை  தனது காணி விடுக்கப்படாத நிலையில் மிகுந்த சிரமத்தின் மத்தியில் உணவுக்கே வழியின்றி தனது 75 வயதான தாயுடன் வாழ்க்கை   நடாத்தி வருகின்றார்.

இந்தப்  பிரச்சினை தொடர்பாக பிரதேச செயலகம், அமைச்சர்கள், ஒருங்கிணைப்புக் குழு, ஜனாதிபதி செயலகம், மாவட்ட செயலகம் உட்பட  பல இடங்களுக்கும் நேரில் சென்று முறையிட்டும் கடிதங்கள் அனுப்பியும் இதுவரை முடிவுகள் எதுவும் வழங்கப்படவில்லை.

இந்த  நிலையில் நேற்று வியாழக்கிழமை காலை  மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற நிலையில் அங்கு வந்து நீதி கோரி கூட்டத்திற்குள் நுழைந்த போது, இந்தப் பெண்ணுக்கு பாதுகாப்பு தரப்பினரால் உள்ளே நுழைய அனுமதி வழங்கப்படவில்லை.

எனினும் இந்தப் பெண் தனக்கான நீதியை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் பேசித் தீர்த்து தர வேண்டும் எனக் கோரி கூட்டம் முடியும் வரை காத்திருந்த போதிலும் ஏமாற்றமே மிஞ்சியது. 

இருப்பினும் கூட்டம் நிறைவடைந்த பின்னர் தனது கோரிக்கை அடங்கிய மகஜரை வட மாகாண ஆளுநர்  பி.எஸ்.எம்.சாள்ஸிடம்  இறுதியில் ஒப்படைத்தார்.

இந்தப் பெண்ணுக்கு,அண்மையில் ஏற்பட்ட விபத்தில் 15 இடங்களில் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப் பட்டுள்ளதுடன் தலை உட்பட பல பகுதிகளில் தகடுகள் வைக்கப்பட்டு நோயுடன் போராடி வருகின்ற நிலையில் மேற்படி வனவள திணைக்களம்  காணியை கையகப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post