படுகொலைகள் செய்வதென்பது ராஜபக்சாக்களின் அரசிற்கு பொருட்டல்ல - ஜங்கரநேசன் குற்றசாட்டு - Yarl Voice படுகொலைகள் செய்வதென்பது ராஜபக்சாக்களின் அரசிற்கு பொருட்டல்ல - ஜங்கரநேசன் குற்றசாட்டு - Yarl Voice

படுகொலைகள் செய்வதென்பது ராஜபக்சாக்களின் அரசிற்கு பொருட்டல்ல - ஜங்கரநேசன் குற்றசாட்டு

இனப்படுகொலை செய்த  ராபக்சாக்கள் அரசிற்கு சூழல் படுகொலை செய்வது ஒன்றும் பொருட்டல்ல என தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் ஜங்கரநேசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சிங்கராஜாக் காட்டுக்குள்ளும் சீன நிறுவனம் சூழற்படுகொலையில் கோட்டா அரசாங்கம் எனவும்  கண்டனம் வெளியிட்டுள்ளார்.


யாழ் நகரிலுள்ள தமது கட்சி அலுவலகத்தில் இன்று நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது...

இலங்கையின் சிங்கராஜாக் காடு உலகில் எஞ்சியிருக்கும் மிகத்தொன்மையான மழைக் காடுகளில் ஒன்று. இதனைக் 
கருத்திற் கொள்ளாது, இந்த ஆதிக் காட்டுக்குள்ளே இரண்டு பாரிய நீர்த்தேக்கங்களை அமைக்கும் திட்டத்தை 
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவர்களின் தலைமையிலான அரசாங்கம் முன்னெடுத்திருக்கிறது. இவற்றை 
நிர்மாணிப்பதற்காகச் சீன நிறுவனமொன்றுடன் ஒப்பந்தமும் செய்யப்பட்டுள்ளது. உலகின் உயிர்ப் 
பல்வகைமை மிக்க வெகுசில இடங்களில் ஒன்றாகப் பாதுகாக்கப்படும் சிங்கராஜாக் காட்டைச் சீர்குலைப்பது 
சூழற்படுகொலையே அன்றி வேறல்ல. இனப்படுகொலையாளிகளான இவர்களுக்கு இது ஒரு பொருட்டாகவே இல்லை என்று 
தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். 
கொழும்பில் ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்னெடுக்கப்பட்டுள்ள காடழிப்புக்கு எதிரான போராட்டம் 
தொடர்பாகத் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைமை அலுவலகத்தில் பொ. ஐங்கரநேசன் நிகழ்த்திய 
ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தனது கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பில் தொடர்ந்து அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
மகிந்த ராஜபக்ச அவர்களின் பிறந்த இடமான அம்பாந்தோட்டையின் வீரக்கெட்டிய நகரத்துக்கு ஜின் கங்கையில் 
இருந்தும் நிலவள கங்கையில் இருந்தும் தண்ணீர் கொண்டு செல்வதற்காகவே சிங்கராஜக் காட்டின் உள்ளே இரண்டு 
நீர்த்தேக்கங்களைக் கட்டும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது. நீர்ப்பாசன அமைச்சரும் ராஜபக்ச சகோதரர்களில் 
ஒருவருமான சமல் ராஜபக்ச அவர்கள் அழிக்கப்படும் காட்டுக்குப் பதிலாகப் புதிதாகக் காடு உருவாக்கப்படும் 
என்று தெரிவித்திருக்கிறார். பல்லாயிரக்கணக்கான வயதுடைய இந்தக் காட்டை எந்தப் புதிய காட்டாலும் ஈடுசெய்ய 
முடியாது.
இலங்கையின் மிகமுக்கிய பன்னிரு ஈரவலயங்களில் ஒன்றான நீர்கொழும்பின் முத்துராஜவெல கண்டற் சூழலும் 
அழிவைச் சந்திக்கத் தொடங்கியுள்ளது. சரணாலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டிருந்த முத்துராஜவெல வனஜீவராசிகள் 
திணைக்களத்திடம் இருந்து இப்போது நகர அபிவிருத்திச் சபையிடம் கைமாற்றப்பட்டுள்ளது. பல இடங்களில் 
சரணாலயத்தின் பெயர்ப் பலகைகள் அகற்றப்பட்டு தனியார் நிறுவனங்களின் பெயர்ப் பலகைகள் 
நாட்டப்பட்டுள்ளன. ஒருபுறம், ஏற்கனவே கொழும்பின் குப்பைகளால் நிரப்பப்பட்டுக் கொண்டிருக்கும் 
முத்துராஜவெல ஈரநிலம், இன்னொரு புறம் அபிவிருத்தியின் பெயராலும் நிரப்பப்படவுள்ளது.
இலங்கையின் அரசியற் ஸ்திரத்தன்மை பற்றிக் கருத்திற் கொள்ளாமல் சீன சார்பு நிலையெடுத்து இலங்கையை 
வல்லரசுகளின் போட்டிக் களமாக்கியுள்ள அரசாங்கம் இப்போது இலங்கையின் சூழல் ஸ்திரத் தன்மையையும் 
சீர்குலைப்பதில் முனைப்பாக ஈடுபட்டு வருகின்றது. இவை தென்னிலங்கைச் சம்பவங்கள் என்று நாம் பேசாது இருக்க 
முடியாது. இயற்கைச் சூழலுக்கு எல்லைகள் இல்லை. இவை தென்னிலங்கையை மாத்திரம் அல்ல் ஒட்டுமொத்த இலங்கையையும், 
உலகையும் பாதிக்கப்போகின்ற சூழற் பேரழிவுகள். இவற்றின் காரணமாகத் தென்னிலங்கையில் காடழிப்புக்கு 
எதிராக ஐக்கிய மக்கள் சக்தி முன்னெடுத்துள்ள பேராட்டத்தை நாம் வரவேற்கிறோம்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசா அவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்த போதும் சரி, 
இப்போதும் சரி தமிழ் மக்களின் போராட்டம் தொடர்பான நியாயப்பாடுளை ஏற்றுக் கொண்டவராகவோ, 
இனப்படுகொலைக்கு நீதி வேண்டுபவராகவோ, வடக்கு கிழக்கில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற வளச் 
சுரண்டல்களுக்கு எதிராகக் குரல் கொடுப்பவராகவோ இருந்தவர் அல்லர். ஆனாலும் சூழலியம் என்ற 
கோட்பாட்டைத் தேசியத்தின் ஒரு கூறாகவும் விளங்கிக் கொண்டிருக்கும் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் இதன் 
காரணமாக ஐக்கிய மக்கள் சக்தி முன்னெடுத்துள்ள சூழற்படுகொலைக்கு எதிரான போராட்டத்துக்குத் தனது தார்மீக 
ஆதரவை வழங்குகின்றது என்றும் தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post