யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் மீண்டும் உடற்கல்வி உயர் தகைமைச் சான்றிதழ் (டிப்ளோமா) கற்கை நெறி ஆரம்பம்! - Yarl Voice யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் மீண்டும் உடற்கல்வி உயர் தகைமைச் சான்றிதழ் (டிப்ளோமா) கற்கை நெறி ஆரம்பம்! - Yarl Voice

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் மீண்டும் உடற்கல்வி உயர் தகைமைச் சான்றிதழ் (டிப்ளோமா) கற்கை நெறி ஆரம்பம்!யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் உடற்கல்வி டிப்ளோமாக் கற்கை நெறி ஆரம்ப அறிமுக நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ். பல்கலைக்கழக விளையாட்டு விஞ்ஞான அலகின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி சி. சபானந் தலைமையில், கைலாசபதி கலையரங்கில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா, இணை மருத்துவ விஞ்ஞானபீடாதிபதி கலாநிதி தெய்வி தபோதரன், விளையாட்டு விஞ்ஞான அலகின் தலைவர், சிரேஷ்டவிரிவுரையாளர் கலாநிதி கு. கேதீஸ்வரன் ஆகியோர் விருந்தினர்களாக் கலந்து கொண்டனர்.  

யாழ். பல்கலைக்கழகத்தின் பீடாதிபதிகள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், போதனாசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் கற்கை நெறிக்குத் தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் உட்படப் பலர் கலந்துகொண்டனர்.  பல்கலைக்கழகத்தின் இணை மருத்துவ விஞ்ஞான பீடத்தின் கீழ் உடற்கல்வி விஞ்ஞானமாணிக் கற்கைநெறியை ஆரம்பிப்பதற்கு யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, இணை மருத்துவ விஞ்ஞான பீடத்தின் கீழ் விளையாட்டு விஞ்ஞானஅலகு, புதிய துறையாக உள்வாங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, யாழ். பல்கலைக்கழக விளையாட்டு விஞ்ஞான அலகினால் நடாத்தப்பட்டு வந்த உடற்கல்வி டிப்ளோமாக் கற்கை நெறியை மீள ஆரம்பிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. வடக்கு - கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த 92 விளையாட்டுப்பயிற்றுவிப்பாளர்கள் இந்த உயர் டிப்ளோமா கற்கை நெறிக்கு உள்வாங்கப்பட்டிருக்கின்றனர்.

1998 ஆம் ஆண்டு, அப்போதைய துணைவேந்தர் பேராசிரியர் பொ. பாலசுந்தரம் பிள்ளையினால்உடற்கல்வி டிப்ளோமாக் கற்கை நெறி ஆரம்பிக்கப்பட்டிருந்தது.  ஆரம்ப காலங்களில் அந்தக் கற்கைநெறி மருத்துவ பீடம், வணிக முகாமைத்துவ பீடம்ஆகியவற்றின் கீழ் மாறி, மாறிச் செயற்படுத்தப்பட்டது. 

இரண்டு வருட காலத்தைக் கொண்ட டிப்ளோமா கற்கை நெறியைப் பூர்த்தி செய்தவர்களை, மூன்றாம் வருடத்தில் உடற் கல்விமாணிப் பட்டதாரிகளாகப் பயிற்றுவதற்குப் பல்கலைக்கழக நிர்வாகம் முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், அங்கு நிலவிய உள்ளக முரண்பாடுகள் காரணமாக அது சாத்தியப்படாமல் போனது. 

விஞ்ஞான பீடத்தின் கீழும், கலைப் பீடத்தின் கீழும்  உடற்கல்விமாணிப் பட்டப்படிப்பை ஆரம்பிப்பதற்கான முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்ட போதிலும் கடந்த காலங்களில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அவை அங்கீகரிக்கப்படவில்லை.  

கடந்த வருடம் செப்ரெம்பர் மாதம் புதிய துணைவேந்தராக பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா பதவியேற்ற பின்னர், பல்கலைக்கழகத்தின் இணை மருத்துவ விஞ்ஞான பீடத்தின் கீழ் உடற் கல்விவிஞ்ஞானமாணிப் பட்டப்படிப்பை நடாத்துவதற்காக மூதவை, பேரவை ஆகியவற்றின் அங்கீகாரத்துடன் உடற்கல்வி விஞ்ஞானமாணி பட்டப் படிப்புக்கான முன்மொழிவு பல்கலைக் கழகமானியங்கள் ஆணைக்குழுவுக்குச் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

அந்த முன்மொழிவு, கடந்த மாதம் 7 ஆம் திகதி இடம்பெற்ற பல்கலைக்கழக மானியங்கள்ஆணைக்குழுவின் மாதாந்தக் கூட்டத்தில் ஆராயப்பட்டு, அதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதன் படி க.பொ.த உயர்தரத்தில் பல்கலைக்கழக அனுமதிக்கான ஆகக் குறைந்த தேவைப்பாட்டை நிறைவு செய்த, விளையாட்டுத்துறையில் ஈடுபடுகின்ற மாணவர்களை உள்வாங்குவதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. வெளிவரவிருக்கின்ற 2020 ஆம் ஆண்டு நடந்த க.பொ.த உயர்தரப் பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் உடற் கல்வி விஞ்ஞானமாணி பட்டப்படிப்புக்கான விண்ணப்பங்கள் கோரப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post