இறுதிப் போரில் வெள்ளைக்கொடியுடன் வந்தவர்களை கொன்றது போர் விதியா? இராணுவ தளபதியிடம் சபாகுகதாஸ் கேள்வி - Yarl Voice இறுதிப் போரில் வெள்ளைக்கொடியுடன் வந்தவர்களை கொன்றது போர் விதியா? இராணுவ தளபதியிடம் சபாகுகதாஸ் கேள்வி - Yarl Voice

இறுதிப் போரில் வெள்ளைக்கொடியுடன் வந்தவர்களை கொன்றது போர் விதியா? இராணுவ தளபதியிடம் சபாகுகதாஸ் கேள்வி



இறுதிப் போரில், சுதந்திரபுரம் தொடங்கி வெள்ளைக் கொடி வரை நடந்தது போர் விதியா? என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும், ரெலோவின் இளைஞர் அணி தலைவருமான சபா குகதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்றையதினம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே சபா குகதாஸ் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்...

இராணுவத் தளபதி சவேந்திர சில்வா நேற்றைய தினம் வெளியிட்ட செய்தியில் இறுதிப்போரில் தாங்கள் போர் விதி முறைகளை பின்பற்றியதாகவும் மனிதாவிமான நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும் இறுதி நடவடிக்கைகளை பார்க்காதவர்கள் போலியான போர்க்குற்றச் சாட்டுக்களை முன் வைப்பதாகவும் கூறியுள்ளார்.

உண்மையில் சுதந்திரபுரம் தொடங்கி வெள்ளைக் கொடி படுகொலை வரை நடைபெற்றது சிறிலங்கா படைகளின் போர் விதி முறையா? அல்லது சர்வதேச போர் விதி முறையா? இறுதி யுத்தம் நடைபெற்றுக் கொண்டு இருந்த போது விசுவமடு நோக்கி சிறிலங்கா படைகள் வந்த பின்னர் பொது மக்களை சுதந்திரபுரம் பகுதியில் தங்குமாறு இப் பகுதி சூட்டுத் தவிர்ப்பு வலயம் என பிரகடனப் படுத்தி உலங்கு வானூர்தி மூலம் துண்டுப் பிரசுரங்களை வீசினார்கள் இதனை நம்பி மக்கள் ஒன்று திரண்ட பின்னர் இராணுவம் நடாத்திய தாக்குதலில் எத்தனை ஆயிரம் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

உலகில் தடை செய்யப்பட்ட வெடி குண்டான கிளஸ்டர் குண்டை(கொத்துக் குண்டு) பயன்படுத்தி ஆனந்தபுரம், இரணைப்பாலை, புதுமாத்தளன், பொக்கணை, வலைஞர்மடம், இரட்டைவாய்க்கால், முள்ளிவாய்க்கால் போன்ற இடங்களில் எத்தனை ஆயிரம் மக்களை கொன்றீர்கள் இன்றும் எத்தனை பேர் ஊனமுற்றும் அதன் பகுதித் துண்டுகளை உடலில் சுமந்தவாறும் நடைப்பிணங்களாக வாழ்கின்றனர்.

வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த அப்பாவிப் பொது மக்கள் மன்றாடிக் கொண்டு அபயக்குரல் எழுப்ப உங்கள் கட்டுப்பாட்டில் வைத்து சுட்டுப் படுகொலை செய்தீர்கள்  இவை எல்லாம் உங்கள் அகராதியில் போர் விதிமுறையா?

இசைப்பிரியா உங்களிடம் சரணடைந்த பின்னர் உங்கள் படைகளிடம் மன்றாடி வெம்பி வெம்பி கண்ணீர் மல்க ஈவிரக்கம் இன்றி  வன் கொடுமைக்கு உட்படுத்தி கொலை செய்தமை இவை எல்லாம் மனிதாபிமான நடவடிக்கையா?

 இவை தொடர்பான ஆதாரங்கள் சனல் நான்கு மூலம் வெளியிடப்பட்டும் இலங்கை அரசாங்கத்தால் ஏன் இன்றுவரை சட்ட ரீதியான தொழில் நுட்பத்தால் உண்மை இல்லை என்பதை நிரூபிக்க முடியவில்லை .சனல் நான்கு காட்சிகள் போர் விதிமுறைகளை வெளிப்படுத்துகின்றதா?

இல்லை போர்க்குற்றங்களை அம்பலப்படுத்தியுள்ளதா? தொடர்ந்து நீதியின் கதவுகள் நிரந்தரமாக மூடியிருக்கமாட்டாது. நிச்சயம் திறக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.


0/Post a Comment/Comments

Previous Post Next Post