யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் பணியாற்றும் மாணவ ஒழுக்காற்று அதிகாரிகளில் ஒருவருக்குக் கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கான மேலதிக முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தொற்று அடையாளப்படுத்தப்பட்டதை அடுத்து, நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் வழிகாட்டல்களுக்கு அமைய, பல்கலைக்கழக கோவில் 19 தொற்று பரவல் தடுப்புச் செயலணி தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கான மேலதிக முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
மாணவ ஒழுக்காற்று அதிகாரி கடமை நிமித்தம் பல்கலைக் கழகத்தினுள் நடமாடிய அனைத்து இடங்களிலும் இன்று தொற்று நீக்கி விசிறப்பட்டுள்ளதுடன், மாணவ ஒழுக்காற்று அதிகாரி அலுவலகத்தில் பணிபுரியும் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களிடம் இன்று காலை பி. சி. ஆர் பரிசோதனைக்காக மாதிரிகள் பெறப்பட்டுள்ளன. பரிசோதனை முடிவுகள் இன்று மாலை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேநேரம், கடந்த 8 ஆம் திகதி இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் குறித்த மாணவ ஒழுக்காற்று அதிகாரியும் கலந்து கொண்டிருந்ததால், அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் பலர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களில் பலர் கொரோனாத் தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்கள் எனினும், அவர்கள் அனைவரையும் கட்டங் கட்டமாகப் பி. சி. ஆர் பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.







Post a Comment