வெடுக்குநாறி கோவில் வழக்கு முதிர்ச்சியடையாத விண்ணப்பம்! சட்டத்தரணி சயந்தன் - Yarl Voice வெடுக்குநாறி கோவில் வழக்கு முதிர்ச்சியடையாத விண்ணப்பம்! சட்டத்தரணி சயந்தன் - Yarl Voice

வெடுக்குநாறி கோவில் வழக்கு முதிர்ச்சியடையாத விண்ணப்பம்! சட்டத்தரணி சயந்தன்



வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் கோயில் வழக்கில், யார் எவ்வாறான குற்றம் செய்தார்கள் என்பது தெளிவற்ற நிலையில், பரிபாலன சபையினரை நீதிமன்றில் ஆஜராக உத்தரவிடுமாறு பொலிஸார் கோருவதென்பது முதிர்ச்சியடையாத விண்ணப்பம் என தாம் ஆட்சேபித்தார் என சட்டத்தரணி கே.சயந்தன் தெரிவித்துள்ளார்.

வவுனியா, வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வர் ஆலயம் தொடர்பான வழக்கு வவுனியா நீதிமன்றில் இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், இந்த விசாரணையின் பின்னர், ஆலய நிர்வாகத்தினர் சார்பாக ஆஜரான சட்டத்தரணி சயந்தன் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் -

'வெடுக்குநாறி ஆதி இலிங்கேஸ்வரர் ஆலய நிர்வாகத்திற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கில், முன்னைய வழக்கினைப் போலவே தொல்பொருள் சின்னங்களைச் சேதப்படுத்தினார்கள் என்பதான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு, ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட 'பி' அறிக்கைக்கு மேலதிகமாக மேலும் ஓர் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு அழைக்கப்பட்டபோது, ஆலயத்தின் தலைவர் மற்றும் செயலாளரை நீதிமன்றில் பிரச்சன்னமாகுமாறு அறிவித்தல் அனுப்புமாறு பொலிசார் நீதிமன்றில் விண்ணப்பம் செய்தார்கள். அத்துடன், வழக்குத் தொடர்பாக சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெறவேண்டியிருப்பதாகவும் விண்ணப்பம் செய்திருந்தனர்.

புரியப்பட்ட குற்றம் என்ன, அதைப் புரிந்தவர்கள் யார், அவர்களுக்கு எதிராக சாட்சியங்கள் என்ன போன்ற விடயங்கள் தெளிவற்று இருக்கின்றமையே வழக்கு தொடுநர்கள் சட்டமா அதிபரிடம் ஆலோசனையைப் பெறுவதற்குக் காரணமாகவுள்ளது.

இந்நிலையில், பரிபாலன சபையினரை நீதிமன்றில் தோன்றுமாறு அறிவித்தல் வழங்குமாறு கோருகின்றமை ஒரு முதிர்ச்சியடையாத விண்ணப்பம் என நாங்கள் ஆட்சேபித்தோம்.

அந்தவகையில், பரிபாலன சபைக்கு அறிவித்தல் அனுப்பும் விண்ணப்பத்தை நீதிவான் நிராகரித்தமையுடன், வழக்கு விசாரணையை எதிர்வரும் ஜூன் 20ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளார். - எனக் குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய வழக்கு விசாரணையில், ஆலய நிர்வாகத்தினர்களான தமிழ்செல்வன், சசிகுமார், பூசகர் மதிமுகராசா ஆகியோர் நீதிமன்றிற்கு வருகைதந்தபோதும் மன்றில் பிரசன்னமாகியிருக்கவில்லை. அவர்கள் சார்பாக சட்டத்தரணிகளான கே.சயந்தன் உட்பட பலர் ஆயராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post