கிளிநொச்சியில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் உரிய நடவடிக்கையை பொலிஸார் முன்னெடுக்க வேண்டும் - வட மாகாண பிரதி பொலிஸ் மா அதிபரிற்கு சிறிதரன் கடிதம் - Yarl Voice கிளிநொச்சியில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் உரிய நடவடிக்கையை பொலிஸார் முன்னெடுக்க வேண்டும் - வட மாகாண பிரதி பொலிஸ் மா அதிபரிற்கு சிறிதரன் கடிதம் - Yarl Voice

கிளிநொச்சியில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் உரிய நடவடிக்கையை பொலிஸார் முன்னெடுக்க வேண்டும் - வட மாகாண பிரதி பொலிஸ் மா அதிபரிற்கு சிறிதரன் கடிதம்

                                                 

                                                                                                               
திரு.சஞ்சீவ தர்மரத்ன
பிரதி பொலிஸ் மா அதிபதி
பொலிஸ் திணைக்களம்,
வடக்கு மாகாணம்.

கிளிநொச்சி மாவட்டத்தில் நடைபெற்றுள்ள  கொலைச் சம்பவங்கள்

மீள்குடியேற்றத்தின் பின்னரான பத்துவருட காலப்பகுதியில் தங்கள் நிருவாக எல்லைக்குட்பட்ட கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகளவான கொலைச் சம்பவங்கள் நடைபெற்றுள்ள போதும், அக் கொடூர கொலைகளுடன் தொடர்புடைய குற்றவாளிகள் இனங்காணப்படாமலும், இனங்காணப்பட்டு குற்றம் நிரூபிக்கப் பட்டவர்களுக்கு உரிய தண்டனைகள் வழங்கப்படாமலும் உள்ளமை இறந்தவர்களின் குடும்பங்களிடையே உளரீதியான தாக்கத்தையும், மக்களிடையே பொலிசார் மற்றும் நீதித்துறை மீது நம்பிக்கையீனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

1. இல.935, சிவிக்சென்ரர், வட்டக்கச்சியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான திரு.அருளம்பலம் துசியந்தன் (வயது.34) அவர்கள் கடந்த 2021.03.10 ஆம் திகதி மாலை அவரது வீட்டில் வைத்து அதே பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்களின் கத்திக்குத்துக்கு இலக்காகி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு 2021.03.11ஆம் திகதி மரணமடைந்துள்ளார். இவரைக் கத்தியால் குத்தி கொலை செய்த இருவரும் அடையாளம் காணப்பட்டுள்ள போதும் அக் கொலையாளிகளைப் பாதுகாக்கும் செயற்பாடுகளில் பொலிசார் ஈடுபட்டு வருவதாக அப்பகுதி மக்களும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரும் தெரிவித்துள்ளனர். 

அதேவேளை நேற்றைய தினம் 2021.03.15 ஆம் திகதி கொலையாளிகளின் வீட்டிற்குப் பொலிசார் சென்றதை அவதானித்து அங்கு சென்றிருந்த ஊரவர்களும், இறந்தவரின் மனைவியான திருமதி.தீபா துசியந்தன் (வயது.34), இறந்தவரின் சகோதரியான திருமதி.வசிதினி தீபன் (வயது.33), அவர்களது அயலவரான செல்வி.பிரவீனா தங்கேஸ்வரன் (வயது.20), இறந்தவரின் மைத்துனரான திரு.குகதாசன் ஜனகன் (வயது.40) ஆகியோர் தருமபுரம் பொலிசாரால், துப்பாக்கிகளாலும், குண்டாந்தடிகளாலும் கடுமையாக தாக்கப்பட்ட சம்பவம் காணொலி வடிவில் சமூக வலைதளங்களில் வெளியாகியிருந்ததை தாங்களும் அறிந்திருப்பீர்கள். ஏற்கனவே ஒரு உயிரை அநியாயமாகப் பலிகொடுத்துவிட்டு ஆற்றாமையின் விளிம்பில் நிற்கும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை அதிலும் குறிப்பாக பெண்களை அவர்கள் கண்ணீரோடு கதறியழுததையும் பொருட்படுத்தாது கடுமையாக தாக்கிய பொலிசாரின் ஈவிரக்கமற்ற இச்செயல் அப்பகுதி மக்களிடையே பாரிய அச்ச நிலையையும், பொலிசார் மீதான அதிருப்தியையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

நேற்றைய தினம் தருமபுரம் பொலிசாரால் மேற்கொள்ளப்பட்ட இவ் அராஜகச் சம்பவம், இந்த மண்ணில் கடந்த எழுபது ஆண்டுகளாகப் புரையோடிப் போயிருக்கும் இனப்பிரச்சனைக்கு ஆரம்பத்தில் அடித்தளமிட்ட பொலிசாரின் இனவெறிச் செயற்பாடுகளை எமக்கும், பாதிக்கப்பட்ட எம்மின மக்களுக்கும் நினைவுபடுத்தும் வகையிலான மோசமான செயற்பாடகாவே அநை;திருந்தது என்பதை தங்களுக்கு மனவருத்தத்துடன் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

2. கடந்த 2021.03.09 ஆம் திகதி கிளிநொச்சி, அம்பாள் குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்ட 37 வயதான திருமதி.திலகேஸ்வரி காமராஜ் அவர்கள் கொலைசெய்யப்பட்டே மரணமடைந்திருப்பதாக சந்தேகிக்கப்படுகின்ற நிலையில் அக் கொலையாளியோ, சம்பவத்துடன் தொடர்புடையவர்களோ இதுவரை பொலிசாரால் கண்டுபிடிக்கப்படவில்லை.

3. 10 வீட்டுத் திட்டம், மாயவனூர், வட்டக்கச்சியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயாரான திருமதி.நிறோசா பாஸ்கரன் (வயது.24) அவர்கள் கடந்த 2018.02.14 ஆம் திகதி குடும்பத் தகராறு காரணமாக அவரது கணவரான திரு.யோகராஜா பாஸ்கரன் என்பவரால் கொலைசெய்யப்பட்டு இற்றைக்கு மூன்று வருடங்கள் முடிவடைந்த நிலையில் குற்றம் நிரூபிக்கப்பட்ட கொலையாளிக்கு எவ்வித தண்டனையும் வழங்கப்படவில்லை. இக் கொலையாளியின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரே திரு.அருளம்பலம் துசியந்தன் அவர்களின் கொலையுடன் தொடர்புடையவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

4. வட்டக்கச்சிப் பகுதியில் 2012 ஆம் நடைபெற்ற கொலைச் சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய குற்றவாளிக்கும் இதுவரை தண்டனை வழங்கப்படாத நிலையில் மிகக் கொடூரமான குற்றத்தில் ஈடுபட்ட அவர்களும் தற்போது சமூகத்தில் சாதாரண மனிதர்கள் போன்று நடமாடுவதை அவதானிக்க முடிகிறது.

5. இல.06, 30 வீட்டுத் திட்டம், உதயநகர் மேற்கு, கிளிநொச்சியைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான திரு.நாகராசா திருக்குமார் அவர்கள் கடந்த 2017.05.16 ஆம் திகதியன்று அவரது வீட்டில் வைத்து வர்த்தக நிலைய உரிமையாளர் ஒருவரால் வெட்டிக் கொலைசெய்யப்பட்டார். குறித்த சம்பவத்தில் அவரது மனைவியான திருமதி.கிருஸ்ணவேணி திருக்குமார் அவர்களும் பலத்த காயமடைந்திருந்த போதும் இதுவரை அக்கொலைக்குரிய நீதியோ, கொலையாளிக்குரிய தண்டனையோ வழங்கப் படவில்லை.

6. கடந்த 2019.07.30 ஆம் திகதி ஜெயந்திநகர்ப் பகுதியில் 74 வயதான தாயும், 34 வயதான மகனும் அவர்களது அயல் வீட்டுக்காரரால் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது நிரூபிக்கப்பட்டு கொலையாளி கைதுசெய்யப்பட்ட போதும் இன்றளவும் அவ் இரட்டைக் கொலையைப் புரிந்தவருக்கு தண்டனை வழங்கப்படவில்லை.

7. சங்கத்தார் வயல், இயக்கச்சி, பளையைச் சேர்ந்த திரு.தங்கராஜா தர்மலிங்கம் (வயது.57) அவர்கள் கடந்த 2019.10.29 ஆம் திகதியன்று குறித்த பகுதியில் அடித்தும், வெட்டியும் கொலைசெய்யப்பட்டிருந்த போதும் அக்கொலைக் குற்றவாளிகளுக்கான தண்டனை வழங்கப்படவில்லை.

இவைதவிர குறுகிய கால இடைவெளியில் மிக அதிகமான கொலைச் சம்பவங்கள் கிளிநொச்சியில் நடைபெற்றுள்ள போதும் அக்குற்றவாளிகளுக்கான தண்டனை வழங்குவதிலும், தமது உறவுகளின் உயிரிழப்பால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பதிலும் பொலிசாரின் கரிசனை போதுமானதாக இல்லை என்பதே மக்களின் பொதுவான அபிப்பிராயமாக உள்ளது.

அதேவேளை இக் குற்றங்களுக்கான தண்டனைகள் உடனுக்குடன் வழங்கப்படாமை குற்றவாளிகளை துணிகரமாக மேலும் குற்றச்செயல்களில் ஈடுபட ஊக்குவிக்கப்பதாகவே அமைந்துள்ளது. 
எனவே கிளிநொச்சி மாவட்டத்தில் நடைபெற்றுள்ள கொலைகளுடன் தொடர்புடையவர்களுக்கெதிராக உடனடி நடவடிக்கை களை மேற்கொள்ளவும், ஈடுசெய்ய முடியாத உயிரிழப்புக்களால் பாதிப்படைந்துள்ள கொலையுண்டவர்களின் குடும்பங்களுக்கு உடனடி நீதியைப் பெற்றுக்;கொடுக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு தங்களைத் தயவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

இங்ஙனம்,
மக்கள் பணியிலுள்ள,

சிவஞானம் சிறீதரன்
பாராளுமன்ற உறுப்பினர், 
யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டம்,
கிளிநொச்சி  

படிகள்
1. பதிவாளர், மாவட்ட நீதிமன்றம், கிளிநொச்சி
2. பணிப்பாளர், மனித உரிமைகள்  ஆணைக்குழு, யாழ்ப்பாணம்;
3. பொலிஸ் அத்தியட்சகர், பொலிஸ் திணைக்களம், கிளிநொச்சி
4. பொறுப்பதிகாரி, பொலிஸ் நிலையம், கிளிநொச்சி0/Post a Comment/Comments

Previous Post Next Post