விலங்கிலிருந்துதான் கொரோனா மனிதர்களிடத்தில் பரவியுள்ளது; சீன சோதனை கூடத்திலிருந்து கசியவில்லை- WHO ஆய்வில் தகவல் - Yarl Voice விலங்கிலிருந்துதான் கொரோனா மனிதர்களிடத்தில் பரவியுள்ளது; சீன சோதனை கூடத்திலிருந்து கசியவில்லை- WHO ஆய்வில் தகவல் - Yarl Voice

விலங்கிலிருந்துதான் கொரோனா மனிதர்களிடத்தில் பரவியுள்ளது; சீன சோதனை கூடத்திலிருந்து கசியவில்லை- WHO ஆய்வில் தகவல்



உலகையே உலுக்கி வரும் கோவிட் - 19 வைரஸ் அல்லது கொரோனா வைரஸ் எங்கிருந்து எப்படி தோன்றியது என்ற புரியாத புதிர் குறித்து பல ஆய்வுகள் நடைபெற்ற வண்ணம் இருந்தாலும் வவ்வாலிலிருந்து இன்னொரு விலங்குக்கு மாறி பிறகு மனிதர்களை கொரோனா தொற்றியிருக்கலாம் என்று உலகச் சுகாதார அமைப்பும் சீனாவும் இணைந்து நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

கடந்த டிசம்பர் 2019-ல் சீனாவின் வூஹான் நகரில் இந்த கொரோனா உருவானது. இது லேபில் இருந்து கசிந்திருக்கலாம் என்ற கருதுகோளை சீனா தொடர்ந்து மறுத்து வருகிறது, ஆனால் ட்ரம்ப் நிர்வாக அமெரிக்கா சீனா வேண்டுமென்றே ஒரு பயோ-வார் என்பதை உலகின் மீது தொடுத்துள்ளது என்று பகீர் குற்றச்சாட்டை வைத்தது. இதனையடுத்த் அமெரிக்கா-சீனா இடையேயான உறவுகள் சிக்கலில் உள்ளன.

சீனாவின் கிருமிச் சோதனைக் கூடத்திலிருந்து கசிந்ததல்ல என்று இந்த ஆய்வு கூறுவதாக அசோசியேட் பிரஸ் என்ற செய்தி நிறுவனம் தனக்குக் கிடைத்த பிரத்யேக ஆய்வு நகலை வைத்து செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தக் கண்டுப்பிடிப்பு என்பது பலரும் அறிந்ததே, எதிர்பார்த்ததே, அதனால்தான் ஏகப்பட்ட கேள்விகளை எழுப்புகிறது. பல கேள்விகளுக்கு விடையில்லை. இந்நிலையில் சோதனைக்கூடத்திலிருந்து வைரஸ் வெளியே கசிந்தது என்ற கருதுகோளைத் தவிர மற்ற பகுதிகளில், அதாவது விலங்கிலிருந்து மனிதனுக்குப் பரவியது என்பது குறித்து இன்னும் பல ஆய்வுகள் நடத்த வேண்டும் என்கிறது உலகச் சுகாதார அமைப்பு.

இந்த ஆய்வறிக்கை தேவையில்லாமல் காலதாமதம் ஆனதால் சீனா தனக்கேற்றவாறு, தங்களுக்கு பங்கம் வராதவாறு ஆய்வு முடிவுகளை மாற்றுகிறதோ என்ற ஐயம் எழுந்தது, இன்னமும் கூட இந்த ஐயம் தீரவில்லை.

கடந்தவார இறுதியில், ஆய்வு நடத்தப்பட்டதன் முடிவுகள் இன்னும் சில நாட்கலில் வெளியாகும் என்று உலகச் சுகாதார அமைப்பு அறிவித்திருந்தது.

இந்நிலையில் அசோசியேட் பிரஸ்க்கு கிடைத்தது துல்லியமான ஆய்வு இறுதி வடிவம் என்று தெரிகிறது. இன்னும் அதிகாரப் பூர்வமாக வெளியாகாத இந்த அறிக்கை இன்னும் மாற்றக்கூடப்படலாம் என்கிறது அசோசியேட் பிரஸ்.

SARS-CoV-2 என்பது பெரும்பாலும் வவ்வால்களை உறைவிடமாகக் கொண்டுள்ளது, ஆனால் வவ்வால்களில் காணப்படும் கொரோனா வைரஸுக்கும் மனிதனிடம் காணபடும் SARS-CoV-2 வைரஸுக்கும் இடையே வேறுபாடு இருப்பதால் இடையே இன்னொரு விலங்கு மூலம் மனிதர்களுக்கு பரவியது என்ற கருதுகோள் கொரோனா தோன்றிய காலத்திலிருந்தே பேசப்பட்டு வருகிறது.

ஆனால் எது அந்த இடைநிலை விலங்கு, அதன் அடையாளம் என்னவென்பதெல்லாம் இன்று வரை தெரியாதவையே. இப்போது வவ்வால்களிலிருந்து நேரடியாகவே மனிதர்களிடத்தில் கொரோனா தொற்றியிருக்கலாம் என்ற கருதுகோளும் இன்னும் உயிரோடுதான் உள்ளது. உணவுப்பொருள் வழியே பரவும் சாத்தியம் இருந்தாலும் வாய்ப்பு மிகவும் குறைவு என்கின்றனர்.

இன்னும் சில நாட்களில் இந்த உலகச் சுகாதார அமைப்பின் கொரோனா மூலாதாரம் என்னவென்ற ஆய்வுஇன் முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post