சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதே உழைப்புக்கான உத்தரவாதம் மே தினச் செய்தியில் ஐங்கரநேசன் - Yarl Voice சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதே உழைப்புக்கான உத்தரவாதம் மே தினச் செய்தியில் ஐங்கரநேசன் - Yarl Voice

சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதே உழைப்புக்கான உத்தரவாதம் மே தினச் செய்தியில் ஐங்கரநேசன்
முதலாளி வர்க்கத்தால் ஈவிரக்கமின்றி நாள் முழுவதும் வேலை வாங்கப்பட்ட தொழிலாளிகள் இரத்தம்சிந்தி 
நிகழ்த்திய நெடிய போராட்டத்தின் விளைவாக வேலை நேரம் 8 மணித்தியாலங்களாகக் குறைக்கப்பட்டது. சர்வதேச 
அளவில் தொழிலாளர்களின் இந்த வெற்றி ஆண்டுதோறும் மே முதலாம் திகதி அன்று கொண்டாடப்படுகிறது. 

ஆனால், கடந்த ஆண்டில் இருந்து உலகம் முழுவதும் கொரோனாப் பெருந்தொற்றுக் காரணமாக மில்லியன் 
கணக்கான தொழிலாளிகள் தொழில் வாய்ப்பை இழந்து நாள் முழுவதும் வீட்டுக்குள் முடங்கும் நிலையே 
நீடிக்கிறது. கொரோனா வைரஸ் விலங்கு வைரசுக்களில் இருந்து உருமாறிய திரிபு என அடையாளம் காணப்பட்ட 
நிலையில், வலிய பாடம் ஒன்றை எமக்குப் போதித்திருக்கிறது. அது, சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதே எமது 
உழைப்புக்கான உத்தரவாதம் என்பதாகும். 

மே தினம் தொடர்பாகத் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் விடுத்திருக்கும் ஊடகச் 
செய்தியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்திருக்கிறார். அந்த ஊடகச் செய்தியில் அவர் மேலும் 
தெரிவிக்கையில்,

கொரோனாப் பெருங்கொள்ளை நோய் மில்லியன் கணக்கான மக்களின் உயிர்களைப் பலியெடுத்ததோடு இதைவிடப் பன்மடங்கு அதிகமானோரின் தொழில் வாய்ப்பைப் பறித்துள்ளது.

 இவர்களிற் பெரும்பான்மையானோர் 
தினக்கூலியைத் தவிர வேறு எந்தக் கொடுப்பனவுகளையோ சலுகைகளையோ பெறாத முறைசாராத் தொழிலாளர்கள் ஆவார்கள். இவர்களைக் கொரோனா தாங்கொணாத வறுமையின் பிடிக்குள் தள்ளி வருகிறது.

திறந்த வெளிகளில் வேலை செய்யும் விவசாயிகள், கட்டிடத் தொழிலாளர்கள் போன்ற முறைசாராத் 
தொழிலாளர்களின் எதிர்காலம் மென்மேலும் கேள்விக்குறியாகி வருகிறது. 

பூமி சூடாகி வரும் சூழற் 
பிரச்சினையால் வெப்ப அலைகளின் பாதிப்பில் இருந்து விடுபடுவதற்கு வேலை நேரத்தைக் குறைப்பதுதான் 
இவர்களுக்கு முன்னால் உள்ள ஒரே தெரிவு என்று ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேசத் தொழிலாளர் அமைப்புத் 
தெரிவித்துள்ளது. 

இதன் காரணமாக இன்னும் 8 ஆண்டுகளில் 80 மில்லியன் தொழிலாளர்கள் வேலை இழப்பர் 
என்பது இவர்களின் கணிப்பு.
உலகத் தொழிலாளர்கள் ஒன்றுபட்டு முன்னெடுத்த போராட்டமே எட்டு மணி நேர வேலை என்ற வெற்றியை 
அவர்களுக்குப் பெற்றுத்தந்துள்ளது.

 அந்த வேலையைக் கொரோனா, காலநிலை மாற்றம் மற்றும் பிற சூழற் 
பாதிப்புகளால் பறிகொடுக்கா திருப்பதற்கும் போராட வேண்டிய நிர்ப்பந்தம் இப்போது ஏற்பட்டுள்ளது. 
முதலாளித்துவப் பொருளாதாரம் தொழிலாளர்களுக்கு மாத்திரமல்ல் சுற்றுச்சூழலுக்கும் எதிரானது.

வளர்ச்சியின் பெயரால் முன்னெடுக்கப்படும் சூழலைப் பாதிக்கும் அனைத்துச் செயற்பாடுகளையும் 
நிராகரிப்போம். செம் மே தினம் இனி செம் பசுமை மே தினம் ஆகட்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post