புதியதோர் மாற்றத்திற்காக நாம் தமிழர் கட்சியை ஆதரியுங்கள் - தமிழக மக்களிடம் ஈழத்தமிழ் மக்கள் கோரிக்கை - Yarl Voice புதியதோர் மாற்றத்திற்காக நாம் தமிழர் கட்சியை ஆதரியுங்கள் - தமிழக மக்களிடம் ஈழத்தமிழ் மக்கள் கோரிக்கை - Yarl Voice

புதியதோர் மாற்றத்திற்காக நாம் தமிழர் கட்சியை ஆதரியுங்கள் - தமிழக மக்களிடம் ஈழத்தமிழ் மக்கள் கோரிக்கை


தமிழகத்தின் சட்டமன்றத்தேர்தல் எதிர்வரும் 06ம் திகதி நடைபெறவுள்ள நிலையில் இந்த சட்டமன்றத்  தேர்தலானது  மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தேர்தலாக  கருதப்படுகின்றது. 

தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக  திராவிட முன்னேற்றக் கழகம்இ அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என இரண்டு திராவிடக் கட்சிகள் தான் தமிழ் நாட்டை  இன்றுவரை ஆட்சி செய்து கொண்டிருக்கின்றார்கள். 

தமிழக தமிழர்களும் இந்த இரண்டு திராவிடக் கட்சிகளுக்கும் தொடர்ச்சியாக வாக்கு செலுத்தி பழகிவிட்டார்கள். இந்த திராவிடக் கட்சிகளும் தமிழ்மக்கள் பிறிதொரு மாற்றத்தை கண்டுவிடக் கூடாது அல்லது மாற்றம் ஒன்றை விரும்பக் கூடாது என்பதற்காக குறிப்பிட்ட ஒரு பெரும்பான்மை மக்களை இலவசம் என்ற மாயைக்குள் முடக்கி வைத்திருந்தார்கள் என்பதே உண்மை.

 இந்த இரு கட்சிகளினது ஆட்சியிலும் ஊழலுக்கு பஞ்சமே இருந்தது இல்லை. ஊழல் செய்து பழகிய இவர்களாலும் அதை விடுத்து வெளியில் வர இன்றுவரை முடியவில்லை. 

தி.மு.க வை பொறுத்தவரை தமிழக அரசியலில் தங்களது குடும்ப ஆட்சியையே நடத்திவந்தார்கள். இதற்கு வித்திட்டவர் கலைஞர் கருணாநிதி அவர்கள் தான். இன்று அவருடைய மகன் திரு.ஸ்டாலின் அவர்கள் தி.மு.க கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கியுள்ளார்.

 இவர்களுடைய பிரதான கூட்டணியாக இந்திய காங்கிரஸ் கட்சி  விளங்குகின்றது. இந்தியாவில் காங்கிரஸ் முழுமையான ஆட்சி அதிகாரத்தில் இருந்த போதுதான் எமது இனத்துக்கான ஈழ விடுதலைப் போராட்டம் சிதைக்கப்பட்டதும் சிங்கள பேரினவாத அரசுக்கு பூரணமாண ஒத்துழைப்புக்களையும் போருக்கான ஆயுதங்களையும் வழங்கியதும் எம் ஈழத் தமிழர்கள் லட்சக்கணக்கில் இனப் படுகொலை செய்யப்பட்டதையும் நாம் மறந்துவிடவில்லை.

இது இன்று வரலாறாகி விட்டது இருப்பினும் ஈழத்தில் நடந்த இனப்படுகொலைகளுக்கும் யுத்தவிதி மீறல்களுக்குமான விசாரணைகள் இன்றுவரை தொய்வு நிலையிலேதான் இருக்கின்றது.  

காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சியில் இருந்த போது தமிழகத்தில் ஆட்சியில் திமுக கட்சியின் மறைந்த முன்னாள் தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்கள் தான் முதலமைச்சராக இருந்தார் என்பதும் ஈழத்தமிழரை  சிங்கள பேரினவாதம் இனப்படுகொலை செய்து கொண்டிருந்த வேளை இவற்றை அறிந்தும் மௌனமாக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அடுத்து அதிமுக வினர் இவர்கள் செல்வி  ஜெயலலிதாவின் மரணத்தின் பின்னர் இன்று கட்சியை கட்டுக்கோப்பாக நிர்வகிக்கக்கூடிய ஆளுமையான தலைவர்கள் இல்லாமையினால் பாரத பிரதமர் நரேந்திரமோடி அவர்களின் காலில் வீழ்ந்து கிடந்து அவருடைய ஆதரவில் பொம்மை ஆட்சியை நடத்துகின்றார்கள்.

இன்று தமிழ்நாட்டில் அனைத்து வளங்களும் இருந்தும் அந்த வளங்கள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன என்றால் காப்பிரட் நிறுவனங்களின் ஊடுறுவல்தான் பிரதான காரணமாக இருக்கமுடியும். காப்பிரட் நிறுவனங்கள் தமிழ்நாட்டிற்குள் வருவதற்கு இந்த இரு திராவிடக் கட்சிகளுமே காரணம். 

எனவே தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு இன்று அரசியலில் புதிய மாற்றம் ஒன்றே தேவைப்படுகின்றது. திராவிட கட்சிகள் தமிழனை ஆண்டது போதும் இனி தமிழனையும் தமிழ்நாட்டையும் தமிழனே ஆழட்டும்.

 அந்த வகையில் தமிழ் நாட்டையும் தமிழர்களையும் இயற்கை வளங்களையும் கால்நடைகளையும் சுற்றுச்சூழலையும் தன்னிறைவுப் பொருளாதாரத்தையும் எல்லாத்துக்கும் மேலான இயற்கை விவசாயத்தையும் உயிராக நேசிக்கின்ற ஒருவரும் தமிழ்நாட்டின் கல்வி மருத்துவம் குடிநீர் மூன்றையும் இலவசமாக வழங்குவேன் என்று அறைகூவல் விடுத்தவருமான நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்  செந்தமிழன் சீமான் அவர்களையும் கட்சியின் ஏனைய வேட்பாளர்களையும் அதிகவிருப்பு வாக்கு வித்தியாசத்தில் ஆதரித்து வெல்ல வைப்பதே தமிழ்நாட்டு தமிழர்களின் கடமையும் தார்மீக உரிமையுமாகும்.

2021 சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்து களம் காண்கிறது. எந்த கட்சியோடும் சமரசமோ கூட்டணியோ கிடையாது. 

தமிழர்களின் உரிமைகளை நிலைநாட்ட தமிழ்த்தேசிய அரசியலை மட்டும் பேசி இன்று தேர்தல்  களத்தில் விவசாயி சின்னத்தில் நம்பிக்கையுடன் நிற்கின்றார்கள் செந்தமிழன் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சியினர்.

 ஆகவே நாம் தமிழர் கட்சியை ஆதரித்து விவசாய சின்னத்திற்கு வாக்களிக்குமாறும் தமிழர்களுக்கான ஒரு அடையாளமான நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களுக்கு பெரும் ஆதரவை வழங்குமாறும் தமிழ்நாட்டு தொப்புள் கொடி உறவுகளை ஈழத்தில் இருந்து தமிழ்த் தேசியப் பண்பாட்டுப் பேரவை தார்மீக உரிமையுடன் கேட்டுக் கொள்கின்றது.

எஸ்.நிஷாந்தன்
தலைமை ஒருங்கிணைப்பாளர் 
தமிழ்த் தேசிய பண்பாட்டுப் பேரவை.

0/Post a Comment/Comments

Previous Post Next Post