புகை பிடிப்போருக்கு கொவிட்-19 தொற்றும் அபாயம் அதிகமுள்ளது - Yarl Voice புகை பிடிப்போருக்கு கொவிட்-19 தொற்றும் அபாயம் அதிகமுள்ளது - Yarl Voice

புகை பிடிப்போருக்கு கொவிட்-19 தொற்றும் அபாயம் அதிகமுள்ளதுஉலக சுகாதார ஸ்தாபனத்தின் கணிப்பீட்டின்படி, புகை பிடிப்போருக்கு கொவிட் - 19 தொற்று ஏற்படும் அபாயமும் மரணிக்கும் அபாயமும் அதிகம் காணப்படுவதாக மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.

‘புகைப்பதை நிறுத்துவதற்காக அர்ப்பணிப்போம்’ என்ற தொனிப்பொருளில் புகைப்பொருள் தடுப்பு தினத்தை(இன்று) முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இணையவழி ஊடக மாநாட்டிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

புகைப்பொருளானது, பாவனையாளர்களில் இருவரில் ஒருவரின் மரணத்துக்கு காரணியாக அமைவதுடன் ஒரு நாளைக்கு சராசரியாக 55 இலங்கையர்கள் உட்பட வருடாந்தம் உலகளாவிய ரீதியில் 8 மில்லியன் மக்களை அகால மரணத்துக்கு உள்ளாக்குகின்றது.

புகையிலைப் பாவனையானது, இருதய நோய், புற்று நோய், சுவாச நோய் மற்றும் நீரிழிவு ஆகிய தொற்றா நோய்கள் ஏற்படுவதற்கு பிரதான காரணியாக அமைகிறது. மேலும் உலக சுகாதார ஸ்தாபனத்தினால் இவ்வருட ஆரம்பத்தில் கணிக்கப்பட்ட விஞ்ஞான ரீதியான ஆய்வுகளுக்கு ஏற்ப, புகை பிடிப்போருக்கு கொவிட் - 19 ஏற்படும் அபாயமும் மற்றும் மரணிக்கும் அபாயமும் அதிகம் என்பதை சுட்டிக்காட்டியிருந்தது.

குறிப்பாக புகைப்பவர்கள்; அடிக்கடி உதடுகளின் மீது கைகளை வைப்பதனால் கொரோனா வைரஸ் உடலினுள் செல்வதற்கான சந்தர்ப்பம் அதிகம். புகை பிடிப்போருக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவடை வதனால்; அவர்களுக்கு கொவிட் தொற்றும் சந்தர்ப்பம் அதிகமாகும்.  மேலும் கொரோனா வைரஸ் அவர்களின் உடலிற்குள் செல்லுமிடத்து, நுரையீரலின் செயற்பாடு பலவீனமடைவதுடன், அவர்களுடைய நோய் நிலைமை தீவிரமடைந்து மரணம் சம்பவிப்பதற்கான அதிக சாத்தியக்கூறுகள் இருக்கின்றன.
 
கடந்த 2016ஆம் ஆண்டு உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிதியம் ஆகியன இணைந்து இலங்கையில் நடத்திய கணக்கெடுப்பின் படி புகைத்தல் காரணமாக ஏற்பட்ட மரணங்கள், நோய்கள் மற்றும் வேறு தாக்கங்களினால் இலங்கை பொருளாதாரத்துக்கு ரூபா 214 பில்லியன்கள் நட்டம் ஏற்பட்டுள்ளது.

 அதேவேளை குறித்த ஆண்டில் புகையிலை நிறுவனத்திடமிருந்து இலங்கை அரசாங்கத்துக்கு கிடைக்கப்பெற்ற வரி வருமானம் ரூபா 92.9 பில்லியன் மாத்திரமே ஆகும்.

எனவே புகை பிடிப்போர் தமது பாவனையை நிறுத்த வேண்டியதும், அந்நிலைமையை தக்க வைத்துக்கொள்ள வேண்டியதும் தற்காலத்தில் அவசியமாகுமெனவும் மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post