ஆட்சிபீடம் ஏறவுள்ள திமுக ஈழத்தமிழர் பிரச்சனை தீர்விற்கு உதவி புரிய வேண்டும் - சுரேஸ் பிரேமச்சந்திரன் வேண்டுகோள் - Yarl Voice ஆட்சிபீடம் ஏறவுள்ள திமுக ஈழத்தமிழர் பிரச்சனை தீர்விற்கு உதவி புரிய வேண்டும் - சுரேஸ் பிரேமச்சந்திரன் வேண்டுகோள் - Yarl Voice

ஆட்சிபீடம் ஏறவுள்ள திமுக ஈழத்தமிழர் பிரச்சனை தீர்விற்கு உதவி புரிய வேண்டும் - சுரேஸ் பிரேமச்சந்திரன் வேண்டுகோள்




கடந்த மே 2ஆம் திகதி வெளியான தமிழக சட்டமன்ற தேர்தல்கள் முடிவுகளின் படி தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணி அமோக வெற்றியீட்டி ஆட்சியமைக்கவுள்ளது.

 இந்த வெற்றியின் மூலம் ஆட்சிப்பீடம் ஏறவுள்ள திராவிட முன்னேற்றக் கழகத்தை வாழ்த்தியுள்ளதுடன் இலங்கைத் தமிழர்களின் பிரச்சினை நிரந்தரமாகத் தீர்க்கப்படுவதற்கு தனது ஆதரவினை நல்க வேண்டும் என்ற வேண்டு கோளையும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் க.பிறேமச்சந்திரன் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையின் முழுவிபரம் வருமாறு:

திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணிக்கு தமிழக மக்கள் வழங்கிய பிரமாண்டமான ஆதரவுக்கும் அதனால் அடைந்த வெற்றிக்கும் திராவிட முன்னேற்றக்கழகத்திற்கும் அதன் தோழமை கட்சிகளுக்கும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறது.

உலக தமிழ் மக்களின் உரிமைகளைக் காப்பதிலும் அதற்காகக் குரல் கொடுப்பதிலும் திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ச்சியாக அரும்பணி ஆற்றிவந்துள்ளது. குறிப்பாக இலங்கைத் தமிழர் பிரச்சினை தீரவேண்டும் என்பதில் அறிஞர் அண்ணா முதல் கலைஞர் ஈறாக அக்கறையுடனேயே செயற்பட்டு வந்துள்ளனர்.

யுத்தம் முடிந்து பன்னிரண்டு வருடங்கள் கடந்துவிட்ட நிலையில், ஈழத் தமிழர்களுக்கு உரிமையும் கிடைக்கவில்லை நீதியும் கிடைக்கவில்லை.

 இப்பொழுது பதவியில் இருக்கின்ற இலங்கை அரசாங்கமானது, தமிழ் மக்களின் காணிகளை மூர்க்கத்தனமாகப் பறித்தெடுப்பதிலும், அவர்களது வாழ்விடங்களைக் கபளீகரம் செய்வதிலும் அவர்களது இருப்பைக் கேள்விக்குள்ளாக்கக்கூடிய வகையில் செயற்பட்டு வருகினறது. 

இத்தகைய ஒரு சூழ்நிலையில், ஈழத் தமிழ் மக்களது இருப்பை, பாதுகாப்பை உத்தரவாதப்படுத்த தமிழகத்து ஆதரவென்பது மிகமிக முக்கியமானது. அந்த ஆதரவு எப்பொழுதும் எமக்குக் கிடைக்கும் என்று நாம் எதிர்பார்க்கின்றோம்.

இவை மாத்திரமல்லாமல், இலங்கை என்பது முற்றுமுழுதாக சீனாவின் ஆதிக்கத்திற்குள் சென்றிருக்கக்கூடிய சூழ்நிலையில், யாழ்ப்பாண மாவட்டத்தின் பல தீவுகளைக்;கூட சீனக் கம்பெனிகளுக்;கு மாற்று மின்சாரத் திட்டங்களை மேற்கொள்வதற்காக இலங்கை அரசாங்கம் வழங்கியுள்ளது. இலங்கையின் வடபகுதி ஈழத் தமிழர்கள் செறிந்துவாழும் பிரதேசமாகும்.

 இப்பகுதியில் சீன ஆதிக்கம் என்பது ஈழத் தமிழர்களுக்கு மட்டுமன்றி தமிழகத்தின் பாதுகாப்பிற்கும் பாரிய அச்சுறுத்தலாகும். 

ஈழத் தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கான ஒரு முழுமையான தீர்வே இவ்வாறான அச்சுறுத்தல்களிலிருந்து விடுபட உதவிகரமாக இருக்கும்.

வடக்கு-கிழக்கு மாகாணம் யுத்தத்தினால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பல இலட்சம் இளைஞர் யுவதிகள் வேலைவாய்ப்பின்றியும் வாழ்வாதாரம் இன்றியும் இருக்கின்றனர். 

கொழும்பு அரசாங்கமானது இம்மாகாணங்களின் வளர்ச்சிக்கு எத்தகைய முயற்சிகளையும் மேற்கொள்ளாமல் மாற்றாந்தாய் மனப்பான்மையுடனேயே செயற்படுகின்றது. 

இவ்வாறான ஒரு சூழ்நிலையில், தமிழகத்து தொழில்முனைவோரை இயன்றவரை இலங்கையின் வடக்கு-கிழக்கு மாகாணங்களில் முதலீடுகள் செய்ய ஊக்குவிக்குமாறும் உங்களைக் கோருவதுடன், இவை தொடர்பாக காலக்கிரமத்தில் உங்களுடன் கலந்துரையாடவும் விரும்புகின்றோம்.

 உங்களது சிறப்பான வெற்றிக்கு மீண்டும் ஒருமுறை எமது வாழ்த்துகளையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

சுரேஷ் க.பிறேமச்சந்திரன்
தலைவர்
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி


0/Post a Comment/Comments

Previous Post Next Post