முல்லையில் தமிழ் கிராம அலுவலர் பிரிவுகளை மகாவலிக்குள் உள்வாங்கி சிங்கள அலகு ஒன்றை உருவாக்க முயற்சி - Yarl Voice முல்லையில் தமிழ் கிராம அலுவலர் பிரிவுகளை மகாவலிக்குள் உள்வாங்கி சிங்கள அலகு ஒன்றை உருவாக்க முயற்சி - Yarl Voice

முல்லையில் தமிழ் கிராம அலுவலர் பிரிவுகளை மகாவலிக்குள் உள்வாங்கி சிங்கள அலகு ஒன்றை உருவாக்க முயற்சி



முல்லையில் எட்டு தமிழ் கிராம அலுவலர் பிரிவுகளை மகாவலிக்குள் உள்வாங்க திட்டம்! சிங்கள அலகு ஒன்றை உருவாக்கும் முயற்சி 

முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்றுப் பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட, கொக்கிளாய் கிழக்கு, கொக்கிளாய் மேற்கு, கொக்குத் தொடுவாய் வடக்கு, கொக்குத்தொடுவாய் மத்தி, கொக்குத்தொடுவாய் தெற்கு, கருநாட்டுக்கேணி, செம்மலை கிழக்கு, செம்மலை ஆகிய எட்டு தமிழ் கிராம அலுவலர் பிரிவுகளையும் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை தமது நிர்வாகத்தின் கீழ் கொண்டு வருவதற்கான முயற்சியில் ஈடுபட்டுவருகின்றது.

மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையின் இச் செயற்பாடானது, தனித் தமிழ் முல்லைத்தீவில், சிங்கள அலகொன்றினை ஏற்பாடுத்துவதற்கான முயற்சி என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் மதிப்புறு துரைராசா ரவிகரன் அவர்கள் தெரிவித்துள்ளார். 

இவ்விடயம் தொடர்பான மகஜர் ஒன்றினை அப்பகுதி மக்கள் 03.05.2021 இன்று, ரவிகரன் அவர்களிடம் கையளித்திருந்தனர். இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், 

நாயாற்றுக்குத் தெற்கேயான காணிகள் சம்பந்தப்பட்ட விடயத்திலே, அந்த மக்களால் 03.05.2021 இன்று என்னிடம் மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டது. 

குறித்த மகஜரை உடனடியாக எனது கட்சித் தலைமைக்கும், தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைமைக்கும், தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் கையளிக்கவிருக்கின்றேன். 

குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் கொக்கிளாய் தொடக்கம் செம்மலை வரையான எட்டு கிராம அலுவலர் பிரிவுகளை உள்ளடக்கிய மக்களையும், மக்களோடு சேர்ந்த காணிகளையும் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை தனது நிர்வாகத்திற்குள் உள்வாங்குவதற்கு தீவிரமாக செயற்பட்டுவருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். 

ஏற்கனவே இவ்வாறானதொரு முன்னெடுப்பினை, மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை முன்னெடுத்திருந்த நிலையில் அதனை அப்பகுதி மக்கள் நிராகரித்திருந்தனர். 

இந் நிலையில் மீண்டும் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை தனது நிர்வாக அலகிற்குள் குறித்த எட்டு கிராம அலுவலர் பிரிவுகளையும் உள்வாங்குவதற்கு தீவிரமாகச் செயற்படுகின்றது என்பதையும் இங்கே சுட்டிக்காட்டவேண்டும். 

கொக்குத்தாடுவாய் வடக்கு, கொக்குத் தொடுவாய் தெற்கு, கொக்குத்தொடுவாய் மத்தி, கருநாட்டுக்கேணி, கொக்கிளாய் கிழக்கு, கொக்குளாய் மேற்கு, செம்மலை கிழக்கு, செம்மலை ஆகிய எட்டு கிராம அலுவலர் பிரிவுகளையும் உள்ளடக்கிய காணிகளின் நிர்வாகத்தினை மகாவலி அபிவிருத்தி அதிகார சபை தமது நிர்வாகத்திற்குள் உள்வாங்குவதற்கான தீர்மானத்தினை எடுத்து அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பதுதான் அந்த மக்களுடைய குற்றச்சாட்டாகும். 

இது ஏற்கனவே கடந்த 23.10.2020ஆம் திகதியன்று இந்த நடவடிக்கையை நிறுத்துமாறு, எங்களுடைய தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் பதின்மூன்றுபேர் கையொப்பமிட்டு மகாவலி அபிவிருத்தி அமைச்சர் சமல் ராஜபக்சவிடம் மகஜர் ஒன்றினை கையளித்திருந்ததுடன், இந்த செயற்பாடுகள் சிறிதுகாலம் கைவிடப்பட்டிருந்தது. 

இந் நிலையில் தற்போது மகாவலி அபிவிருத்தி அமைச்சர் சமல் ராஜபக்சவிற்குத் தெரிந்தோ அல்லது, தெரியாமலோ மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையானது இந்தத் திட்டத்தினை நடைமுறைப்படுத்தி, மக்களால் ஏற்றுக்கொள்ளப்படாத ஒருதிட்டத்தினை வலிந்து திணித்து, வெலிஓயாஎன்று உருவாக்கப்பட்ட சிங்களப் பகுதிகளுடன் இந்த மக்களை இணைக்கும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியிருக்கின்றார்கள். 

இந்த நடவடிக்கையினை அப்பகுதிமக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. மக்கள் நிராகரிக்கின்றனர். 

இப்படியானதொரு திட்டத்தினை இவர்கள் ஏன் வலிந்து திணிக்கவேண்டும் என்பதுதான் அந்த மக்களுடைய கேள்வியாகும். 

இந்த எட்டு கிராம அலுவலர் பிரிவுகளும் கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர் பிரிவுக்குள் அடங்குகின்றன. 

தொடர்ந்தும் கரைதுறைப்பற்று பிரதேசசெயலகத்தின் காணி நிர்வாகத்தின் கீழேயே இந்த எட்டு கிராம அலுவலர் பிரிவுகளும் இயங்கவேண்டும் என அந்த மக்கள் தெரிவிக்கின்றனர். 

தம்மைப் பிரித்து சிங்கள ஆட்சியளர்களுடனோ, சிங்கள மக்களுடனோ சேர்ந்த ஒரு நிர்வாகத்திற்குள் தம்மை சிறுபான்மையினராக்கும் எண்ணத்துடன் இந்த செயற்பாடுகள் இடம்பெறுவதாகவும் இந்த மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். 

மேலும் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையின் இத்தகைய செயற்பாடானது வன்மையாக கண்டிக்கப்படவேண்டியது. 

குறிப்பாக ஏற்கனவே தமிழர்களின் பூர்வீக தாயகப் பகுதியான மணலாற்றில் சிங்கள மயமாக்கலைஇவர்கள் வலிந்து திணித்துள்ளனர். 

இந்நிலையில் இதன் தொடர்ச்சியாக மணலாற்றினை அண்டிய தமிழ் குடியிருப்புக்களையும் ஏற்கனவே சிங்களவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பகுதிகளோடு இணைப்பதனூடாக தமிழ் மக்களை அங்கு சிறுபான்மையினராக்கி, பெரும்பான்மையாக சிங்கள மக்களை அப் பிரதேசத்திற்குள் உள்வாங்கி, அவ்வாறு உருவாக்கப்படுகின்ற பகுதியை ஒரு மாவட்ட அலகாகவோ அல்லது, பிரதேச அலகாகவோ தங்களுடைய திட்டத்திற்கேற்ப தனித் தமிழ் முல்லைத்தீவில் ஒரு சிங்கள அலகை ஏற்படுத்துவதற்கான முயற்சியாகத்தின் இது இருக்கின்றது. 

அதேவேளை வடக்கையும் கிழக்கையும் இணைக்கின்ற தமிழர்களின் பூர்வீக பகுதிகளாக இந்த இடங்கள் காணப்படுகின்றன. இந் நிலையில் வடகிழக்கை இணைக்கும் இந்தப் பகுதிகளை ஆக்கிரமித்து சிங்களமயப்படுத்தி வடகிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளை கூறுபோடும் நடவடிக்கையாகவும் இது அமைந்துள்ளது. 

நிச்சயமாக இவ்விடயம் தொடர்பாக எங்களுடைய தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள், தமிழ் பிரதிநிதிகள் அனைவரும் ஒன்றிணைந்து இந்த விடயத்தில் தங்களுடைய இறுக்கமான கரிசனையைக் காட்டவேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றேன். 

இந்த மக்கள் எங்களுடைய தமிழ் மக்கள், இவை எங்களுடைய தமிழர்களுடைய பூர்வீக நிலங்கள், இப்படியாகஇருக்க இந்த மக்களையும், எமது நிலங்களையும் கூறுபோட இவர்கள் செய்யும் நடவடிக்கைகளை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன் - என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post