எல்லை நிர்ணயம் தொடர்பில் யாழ் அரச அதிபர் தலைமையில் விசேட கலந்துரையாடல் - Yarl Voice எல்லை நிர்ணயம் தொடர்பில் யாழ் அரச அதிபர் தலைமையில் விசேட கலந்துரையாடல் - Yarl Voice

எல்லை நிர்ணயம் தொடர்பில் யாழ் அரச அதிபர் தலைமையில் விசேட கலந்துரையாடல்யாழ்.மாநகர சபை, நல்லூர் பிரதேச சபை மற்றும் வலிதெற்கு பிரதேச சபைக்கான எல்லைகளை நிர்ணயம் செய்கின்றமை தொடர்பான கலந்துரையாடல் யாழ்.அரசாங்க அதிபர் க.மகேசன் அவர்கள் தலைமையில் நேற்று மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

யாழ்.மாநகர சபைக்குட்பட்ட ஒரு பிரதேசம் நல்லூர் பிரதேச சபைக்கானது என்ற கோரிக்கையின் பிரகாரம் எழுந்த சர்ச்சையை அடுத்து அது தொடர்பில் ஒரு தீர்க்கமான முடிவினை எடுக்கும் முகமாக இக் கூட்டம் நடைபெற்றது.

இக் கூட்டத்தில் கருத்து தெரிவித்த மாநகர முதல்வர். வி.மணிவண்ணன் பிரச்சனைகள் நீண்டு செல்வது உகந்தது அல்ல. அவ்வாறு இப் பிரச்சனை நீடிக்கப்படுவதன் காரணமாக பாதிக்கப்படப்போவது நல்லூர் பிரதேச சபையே அன்றி யாழ்.மாநகர சபை அல்ல. யாழ்.மாநகர சபை போல் நல்லூர் பிரதேச சபையும் ஒரு நகர சபையாகவே மாநகர சபையாகவோ தரமுயர்த்தப்படவேண்டும். அதற்கு அடிப்படையானது இந்த எல்லை நிர்ணயம் எனவே அதனைக் கருத்திற் கொண்டு விட்டுக் கொடுப்புடன் ஒரு இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும் என்றார்.

யாழ்.மாநகர ஆணையாளர் த.ஜெயசீலன் அவர்கள் நல்லூர் பிரதேச சபை தங்களுடைய பகுதி என்று உரிமை கூறும் இடங்களில் உள்ள ஆதனங்கள் எதுவும்  நல்லூர் பிரதேச சபைக்குரியதாக இல்லை. அவை மாநகர சபைக்குரியது. அவர்கள் தங்களுடைய வரிகளினை மாநகர சபைக்கே செலுத்துகின்றார்கள் எனவே நல்லூர் பிரதேச சபை கோருகின்ற பகுதிகளை எம்மால் வழங்க முடியாது என்றும் ஆனால் தொழிநுட்ப கல்லூரியின் ஒரு கட்டிடப் பகுதியின் நடுவே மாநகர சபையின் எல்லைக் கோடு செல்வதனால் அக் கட்டிடப்பகுதியினை முழுமையாக நல்லூர் பிரதேச சபைக்கு விட்டுக் கொடுக்க இணக்கம் தெரிவிக்க முடியும் என்று தெரிவித்தார்.

இவ்விடயத்தில் கருத்து தெரிவித்த யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் திரு.க.மகேசன் அவர்கள் தற்போது மாநகர சபைக்கு ஆதனவரிகளைச் செலுத்திக்கொண்டு இருப்பவர்களை பிரதேச சபைக்கு மாற்ற முடியாது அதன் அடிப்படையில் மாநகர சபை தமக்குரியது என்று கூறுகின்ற பகுதிகளுக்குள் உள்ளவர்கள்  மாநகர சபைக்கே தங்களுடைய ஆதனவரிகளைச் செலுத்திக் கொண்டிருப்பதனால் அப் பகுதி மாநகர சபைக்கே உரியது. எனவே குறித்த பகுதி மாநகர சபைக்கே உரியது என்ற இணக்கப்பாட்டிற்கு வருவோம் என்று கூறினார்.

இதனைத் தொடர்ந்து நல்லூர் பிரதேச சபை மற்றும் வலிதெற்கு பிரதேச சபைகளின் எல்லைகளை நிர்ணயம் செய்கின்றமை தொடர்பில் விவாதிக்கப்பட்டது.

யாழ்.மாவட்ட அரச அதிபர் மகேசன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் யாழ்.மாவட்ட மாவட்ட மேலதிக அரச அதிபர்கள், யாழ்ப்பாணம், நல்லூர், உடுவில் பிரதேச செயலாளர்கள், யாழ்.மாநகர முதல்வர், நல்லூர் பிரதேச சபைத் தலைவர், வலி தெற்கு பிரதேச சபைத் தலைவர்,யாழ்.மாநகர ஆணையாளர், நல்லூர் பிரதேச சபை செயலாளர் ஆகியோர் உட்பட பலரும் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களைத் தெரிவித்தனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post