ஆரம்பக் கல்வியை மேம்படுத்த வேண்டும் - Yarl Voice ஆரம்பக் கல்வியை மேம்படுத்த வேண்டும் - Yarl Voice

ஆரம்பக் கல்வியை மேம்படுத்த வேண்டும்கொரோனாவால் தடைப்பட்டுள்ள ஆரம்ப கல்வியை மேம்படுத்த பெற்றோர்களும் ஊடகங்களும் உதவ வேண்டும்.. வடமாகாண பிரதி பணிப்பாளர் எஸ். சற்குணராஜா வேண்டுகோள்.

வடக்கு மாகாண ஆரம்பக் கல்விப் பிரிவில் தரம் ஒன்றில் கற்க வேண்டிய கல்வியை தரம் இரண்டில் கூட கற்க முடியாத துர்ப்பாக்கிய சூழல் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆரம்பக்கல்விப் பிரதி கல்விப்பணிப்பாளர் எஸ்.சற்குணராஜா கவலை தெரிவித்தார்.

நேற்றைய தினம் புதன்கிழமை வடக்கு மாகாண கல்வி அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் இலங்கையில் கடந்த வருடம் 2020கொரோனா சூழ் நிலையினால் தரம் 1 மாணவர்களின் முதன்மை நிலை ஒன்றுக் கல்விக்கான  செயற்பாடுகள் பூர்த்தி செய்யாத நிலையில் காணப்பட்டது.

தற்போது அவர்கள் தரம் இரண்டில் கல்வி கற்கின்ற நிலையில் நாட்டில் ஏற்பட்டிருக்கின்றன கொரோனா சூழ்நிலையினால் பாடசாலைகள் இயங்காத நிலையில் அவர்களின் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் தடைப்பட்டன.

தரம்1,2 மாணவர்கள் எழுத்து சொல் உருவாக்கம் ,வாசிப்பு ஆகியவற்றை பழகுகின்ற காலம் தவற விடப்பட்டுள்ள நிலையில் பெற்றோர்கள் வீடுகளிலேயே அவர்களுக்கான கற்றல் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.

தரம் 1,2 மாணவர்களின் கல்வியை மீட்டெடுப்பதற்காக இலகுவான கையேட்டுக் குறிப்புக்களை தயார்படுத்தி பாடசாலைகளுக்கு வழங்க உள்ளோம். 

தரம் 5 மாணவர்களுக்கான இணையவழி கற்றல் செயற்பாடுகள் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் நிலையில் அவர்களுக்கான பகுதி1க்கான
பரீட்சைகள் இணையவழி மூலம் நடாத்தப்பட்டது.

மேலும் தரம் 5 மாணவர்களுக்கான கற்றல் செயற்பாடுகளை விரிவுபடுத்துவதற்காக கற்றல் கற்பித்தல் வழிகாட்டிகளை உள்ளடக்கியதான காணொளி  இறுவெட்டுக்கள் மற்றும் பரீட்சை வழிகாட்டிப் பயிற்சிப்  புத்தகங்கள் 12 வலயங்களுக்ம் அனுப்பி வைக்கப்படவுள்ளது.

 கொரோனா காலத்தில் தடைப்பட்டிருந்த கல்வி நடவடிக்கைகளை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்காக குருகுலம் என்ற இணைய வாயிலாக ஆரம்ப கல்வி மாணவர்களுக்கு ஏற்ற ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது.

 ஆகவே தடைப்பட்ட வடக்கு மாகாணத்தின் ஆரம்பக் கல்வியை மேம்படுத்த பெற்றோர்களை விழிப்படைய செய்ய ஊடகங்களும்  செயற்படுவதன் மூலம் தடைப்பட்ட கல்வியை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post