தடுப்பூசி ஏற்றும் சந்தர்ப்பத்தை யாழ் மக்கள் தவறவிடக்கூடாது - வடக்கு சமுதாய மருத்துவ நிபுணர் வேண்டுகோள் - Yarl Voice தடுப்பூசி ஏற்றும் சந்தர்ப்பத்தை யாழ் மக்கள் தவறவிடக்கூடாது - வடக்கு சமுதாய மருத்துவ நிபுணர் வேண்டுகோள் - Yarl Voice

தடுப்பூசி ஏற்றும் சந்தர்ப்பத்தை யாழ் மக்கள் தவறவிடக்கூடாது - வடக்கு சமுதாய மருத்துவ நிபுணர் வேண்டுகோள்
சினோபார்ம் தடுப்பூசி பாதுகாப்பானதும் வினைத்திறனானதுமாகும். உலக சுகாதார நிறுவனத்தின் அண்மைய ஆய்வுகளின் அடிப்படையில் திரிபடைந்த வைரஸூகளுக்கு எதிராகவும் இது பாதுகாப்பானது என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் எந்தவொரு அச்சமுமின்றி தடுப்பூசி ஏற்றிக்கொள்ள முன்வரவேண்டும்."

- இவ்வாறு வடக்கு மாகாண சமுதாய மருத்துவ நிபுணர் இ.கேசவன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனாத் தடுப்பூசி ஏற்றல் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது. இதனை நேரடியாகச் சென்று பார்வையிட்ட பின்னர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

தடுப்பூசி யார் ஏற்றலாம்? யாரெல்லாம் ஏற்றக்கூடாது?

நீரிழிவு, இருதய நோய், குருதி அமுக்கம் போன்ற தொற்றா நோய் உள்ளவர்கள் கட்டாயம் தடுப்பூசி ஏற்றவேண்டும். இவர்கள் ஏனையோரை விட தடுப்பூசி ஏற்றுவது கட்டாயம். தொற்றா நோய் உள்ளவர்களுக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டால் பாதிப்பு அதிகம். எனவே அவர்கள் தடுப்பூசி ஏற்றுவது சிறந்தது.

காய்ச்சல் உள்ளிட்ட தொற்று நோய் உள்ள நேரத்தில் இந்தத் தடுப்பூசியை ஏற்றக் கூடாது. அந்த நோய் நிலைமை மாறிய பின்னர் ஏற்றலாம்.

கொரோனாத் தொற்று உள்ள ஒருவர் இந்தத் தடுப்பூசியை ஏற்ற முடியாது. தொற்று மாறிய பின்னர் அதாவது இரு வாரங்கள் கழித்து அவர்கள் தடுப்பூசியைப் போட முடியும்.

கொரோனாத் தொற்றாளர் ஒருவருடன் தொடர்புடையதாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள முதல்நிலை தொடர்பாளர்களும் இந்தத் தடுப்பூசியை ஏற்ற முடியாது. ஏனெனில் அவர்களுக்கு சில வேளைகளில் தொற்று இருக்கக் கூடும்.

மேலும் எதிர்ப்பு சக்தியைக் குறைப்பதற்கான மருந்துகளை எடுத்துக் கொள்பவர்கள் மருத்துவ ஆலோசனையைப் பெற்று ஏற்றுவது பொருத்தமானது. புற்றுநோய்க்கான மருந்துகளில் சில எதிர்ப்பு சக்தியைக் குறைக்கும். அவற்றை தொடர்ச்சியாக எடுத்துக் கொண்டிருப்பவர்களும் இவ்வாறான மருத்துவ ஆலோசனை பெறவேண்டும். அவ்வாறான மருந்துகள் எடுக்காத புற்றுநோயாளர்கள் தடுப்பூசியை ஏற்ற முடியும்.

குருதி உறைதல் சம்பந்தமான பிரச்சினை உள்ளவர்கள் மற்றும் முன்னெப்போதாவது தடுப்பூசி ஏற்றும்போது கடும் ஒவ்வாமை ஏற்பட்டவர்கள் மருத்துவ ஆலோசனையைப் பெற்று தடுப்பூசியைப் ஏற்றிக் கொள்ளவேண்டும். எச்.ஐ.வி. தொற்றுள்ளவர்கள் அது கட்டுப்பாட்டில் இருக்கும்போது இந்தத் தடுப்பூசியை ஏற்ற முடியும்.

பாலூட்டும் தாய்மாருக்கு கட்டுப்பாடில்லை

மேலும், பாலூட்டும் தாய்மார் தடுப்பூசியை ஏற்ற முடியும். குழந்தை பிறந்து எத்தனை மாதங்கள் என்ற கட்டுப்பாடுகள் எவையும் இல்லை. அத்துடன் தடுப்பூசி ஏற்றிய பின்னர் பாலூட்டுவதை நிறுத்தத் தேவையில்லை.

இதேவேளை, கர்ப்பிணித் தாய்மாருக்குச் சினோபார்ம் தடுப்பூசி பாதுகாப்பானது என்று இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. அவர்கள் இதனை ஏற்றுவதை தவிர்ப்பது நல்லது. அதேபோன்று கர்ப்பம் தரிப்பதற்கு எதிர்பார்ப்பவர்களும் இந்தத் தடுப்பூசியை ஏற்றக் கூடாது.

இரண்டு டோஸ் கட்டாயம்

சினோபார்ம் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களும் ஏற்றப்படவேண்டும். முதலாவது டோஸ் ஏற்றப்பட்டு 4 வார இடைவெளியின் பின்னர் இரண்டாவது டோஸ் ஏற்றப்படவேண்டும்.

சினோபார்ம் தடுப்பூசி ஏற்றிய பின்னர் தலையிடி, காய்ச்சல், உடம்புநோ ஏற்படலாம். இது சாதாரணமானது. இந்தத் தடுப்பூசி உடலில் சென்று செயற்படத் தொடங்கும்போது இவ்வாறான நிலைமை ஏற்படலாம். இவ்வாறான பக்கவிளைவு தென்படவில்லை என்றால் தடுப்பூசி செயற்படவில்லை என்று அர்த்தம் கொள்ளக் கூடாது.

தடுப்பூசி ஏற்றிய பின்னரும் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி பேணுதல், கைகளை அடிக்கடி கழுவுதல் போன்ற செயற்பாடுகளைத் தொடரவேண்டும். ஏனெனில் தடுப்பூசி ஏற்றியவருக்கு கொரோனாத் தொற்றால் பாதிப்பு ஏற்படாதபோதும் அவர் கொரோனாக் காவியாக இருக்கலாம். அவர் ஊடாக தடுப்பூசி ஏற்றாத ஒருவருக்குக் கொரோனாத் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது.

வினைத்திறனானது

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே சினோபார்ம் தடுப்பூசி ஏற்றுவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆனால், நாம் இங்கு 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே அதனை ஏற்றுக்கின்றோம்.

சினோபார்ம் தடுப்பூசி தென்னிலங்கையில் இதுவரை இலட்சக்கணக்கானோருக்கு ஏற்றப்பட்டுள்ளது. தடுப்பூசி ஏற்றியதால் எந்தப் பாதிப்பும் வந்ததாக இதுவரை பதிவாகவில்லை. இந்தத் தடுப்பூசி 80 சதவீதம் வினைத்திறன் வாய்ந்தது. அதன் அர்த்தம் தடுப்பூசி ஏற்றிய 100 பேரில் 80 பேருக்குத் தொற்று வராது. 20 பேருக்கு தொற்று வரலாம். ஆனால், அவர்களுக்குப் பாரதூரமான விளைவாக அது இருக்காது.

உலக சுகாதார நிறுவனம் அங்கீகரித்த அனைத்துத் தடுப்பூசிகளும் வினைத்திறனானதும் பாதுகாப்பானதும்தான். திரிபடைந்த வைரஸிலிருந்தும் பாதுகாப்புக் கொடுக்கும். தடுப்பூசி ஏற்றியவர்களுக்கு திரிபடைந்த வைரஸ் தொற்றாது. அல்லது தொற்றினாலும் பாரதூரமான பாதிப்பு ஏற்படாது - என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post