கொவிட்-19 தடுப்பூசி ஏற்றும் பணியில் காரைநகர் முன்னுதாரண செயற்பாடு! -இரு தினங்களில் 1254 பேருக்கு தடுப்பூசி - Yarl Voice கொவிட்-19 தடுப்பூசி ஏற்றும் பணியில் காரைநகர் முன்னுதாரண செயற்பாடு! -இரு தினங்களில் 1254 பேருக்கு தடுப்பூசி - Yarl Voice

கொவிட்-19 தடுப்பூசி ஏற்றும் பணியில் காரைநகர் முன்னுதாரண செயற்பாடு! -இரு தினங்களில் 1254 பேருக்கு தடுப்பூசி




காரைநகரில் கொவிட் - 19 தடுப்பூசி வழங்கும் நிகழ்வு வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் நேற்றும் இன்றும் 1254 பேருக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. யாழ்.மாவட்டத்தில் இதுவே முதன்மையான நிலையாக அமைந்துள்ளது. நேற்று 538 பேருக்கும் இன்று 716 பேருக்கும் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டன. 

காரைநகர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையுடன் காரைநகர் பிரதேச செயலகம் மற்றும் காரைநகர் பிரதேச சபை ஆகியன கூட்டிணைந்து பணியாற்றியதன் மூலமே இந்த இலக்கை அடைய முடிந்துள்ளது. 

யாழ். மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட 50,000 ஸ்னோபாம் தடுப்பூசிகளில் தொற்று அதிகமாக அடையாளப்படுத்தப்பட்ட கிராம சேவையாளர் பிரிவுகளில் உள்ள மக்களுக்கு முதற்கட்டமாக  தடுப்பூசிகளை ஏற்றுவது என முடிவெடுக்கப்பட்டது.

இதற்கமைய காரைநகர் பிரதேச செயலாளர் பிரிவில் ஜே-47 கிராம சேவையாளர் பிரிவு மக்களுக்கான தடுப்பூசி ஏற்றும் பணி நேற்று (30) ஞாயிற்றுக்கிழமை காலை காரைநகர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் மத குருமார்களின் ஆசிகளுடன் ஆரம்பமானது. 

இதன்போது, காரைநகர் பிரதேச சபைத் தவிசாளர், காரைநகர் பிரதேச செயலாளர், காரைநகர் சுகாதார வைத்திய அதிகாரி, பொலிஸ், கடற்படை அதிகாரிகள் என பலரும் பங்குபற்றியிருந்தனர். 

தடுப்பூசி ஏற்றும் பணியை சுகாதார வைத்திய அதிகாரி மருத்துவர் திரு. யதுநந்தன் தலைமையிலான சுகாதாரத்துறை உத்தியோகத்தர்கள் நேர்த்தியாக ஒழுங்கமைத்திருந்தனர். இதன்போது பொதுச் சுகாதார பரிசோதகர்கள், குடும்பநல சுகாதார உத்தியோகத்தர்கள் மற்றும் சுகாதாரத்துறை பணியாளர்களும் அர்ப்பணிப்புடன் பங்கேற்றனர். 

மேலும், காரைநகர் பிரதேச செயலாளர் திரு.ம.ஜெகூ தலைமையில் உதவிப் பிரதேச செயலாளர், திட்டமிடல் பணிப்பாளர், கணக்காளர் மற்றும் உத்தியோகத்தர்களும் களத்தில் நின்று தீவிர அர்ப்பணிப்புடன் பணியாற்றினர். 

கிராம சேவையாளர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட களப்பணி உத்தியோகத்தர்கள் கிராமங்களில் வீடு வீடாகச் சென்று மக்களை விழிப்பூட்டி தடுப்பூசி ஏற்றும் இடத்திற்கு அனுப்பிக்கொண்டிருந்தனர். 

பிரதேச சபைப் பணியாளர்களும் ஒலிபெருக்கி பூட்டப்பட்ட வாகனத்தில் அடிக்கடி கிராமத்திற்குள் சென்று தடுப்பூசி ஏற்றப்படுவதன் அவசியம் தொடர்பாகவும் அனைவரையும் உடனடியாகச் சென்று தடுப்பூசி ஏற்றிக்கொள்ளுமாறும் அறிவித்தல் விடுத்துக்கொண்டிருந்தனர். 

தடுப்பூசி ஏற்றிக்கொள்ள வருகின்ற மக்களை பிரதேச செயலகம் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை ஆகியவற்றின் உத்தியோகத்தர்கள் உரிய சுகாதார விதிக்கமைய ஒழுங்குபடுத்தி விரைவாக பதிவுகளை மேற்கொண்டு தடுப்பூசிகளை ஏற்றி பாதுகாப்பாக வீடுகளுக்கு அனுப்பிக்கொண்டிருந்தனர். 

மேற்படி ஒருங்கிணைந்த செயற்பாட்டின் மூலம் யாழ். மாவட்டத்திலேயே முன்னுதாரணமாக செயற்பட்டு அதிக மக்களுக்கு தடுப்பூசிகளை ஏற்றிய இடம் காரைநகர் என்ற பெருமையை பெற்றுக்கொண்டுள்ளது.

இதேவேளை, பணியில் ஈடுபடும் உத்தியோகத்தர்களுக்கு காரைநகர் சக்தி இலவசக் கல்வி நிலைய இயக்குநர் அறக்கொடையாளர் இந்திரன் அவர்களின் ஏற்பாட்டில் ரி-சேர்ட் புதிதாக தயாரித்து வழங்கப்பட்டதுடன் பணியில் ஈடுபடும் அனைவருக்குமான மதிய உணவு மற்றும் சிற்றுண்டிகளையும் அவர் வழங்கி வருகின்றார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post