அரசியல் கைதிகளை விடுவிக்கும் அரசின் செயற்பாடு தமிழ் மக்களுக்கு மகிழ்ச்சி - அங்கஜன் - Yarl Voice அரசியல் கைதிகளை விடுவிக்கும் அரசின் செயற்பாடு தமிழ் மக்களுக்கு மகிழ்ச்சி - அங்கஜன் - Yarl Voice

அரசியல் கைதிகளை விடுவிக்கும் அரசின் செயற்பாடு தமிழ் மக்களுக்கு மகிழ்ச்சி - அங்கஜன்



தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான அரசாங்கத்தின் செயற்பாடுகள் தமிழ் மக்களை மகிழ்ச்சிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன என பாராளுமன்ற குழுக்களின் பிரதித்தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். 

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் பாராளுமன்றத்தில் அமைச்சர் நாமல் ராஜபக்ச உரையாற்றியிருந்த நிலையில், அவருக்கு நன்றி தெரிவித்து வெளியிட்டுள்ள ஊடகக்குறிப்பில்,  பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன்  இவ்வாறு தெரிவித்துள்ளார். 

அவர் வெளியிட்டுள்ள ஊடகக்குறிப்பில், 

நீண்டகாலமாக சிறைகளில் இருக்கும் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் பொறிமுறையொன்று உருவாக்கப்பட வேண்டும் என பாராளுமன்றத்தில் உரையாற்றியிருந்த கௌரவ அமைச்சர் நாமல் ராஜபக்ச அவர்களுக்கு, தமிழ் மக்களின் பிரதிநிதியாக மக்கள் சார்பில் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். 

கடந்த ஆட்சிக் காலத்தில் குறித்த அரசியல் கைதிகளின் விடுதலை விடயத்தை ஒரு அரசியல் துருப்புச்சீட்டாக பயன்படுத்திய அரசியல்வாதிகள் இன்று எதிர்தரப்பு வரிசையில் இருக்கும் பொழுது, அமைச்சரின் இந்த உரையும், அரசின் கொள்கை ரீதியான முடிவுகளும் உண்மையில் எமது சகோதரர்களின் விடுதலை தொடர்பான கதவொன்றை திறப்பதாகவே அமைகிறது. 

தேர்தல் காலத்தின் போதான சந்திப்புகளில், நாம் தொடர்ச்சியாக, சிறைகளில் வாடும் எமது சகோதரர்களின் விடுதலை தொடர்பான தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும் என கோரியிருந்தோம். அதை ஏற்றுக்கொண்ட நிலையில்தான் நாம் இந்த அரசாங்கத்துக்கு எமது ஆதரவை தெரிவிக்க தீர்மானித்திருந்தோம். அதன்படி, எமக்கு வழங்கிய வாக்குறுதியை  நிறைவேற்றுவது தொடர்பான ஒரு மிகச்சிறந்த புள்ளியாக இந்த உரையை நாம் பார்க்கிறோம். 

அந்தவகையில், கடந்த சில மாதங்களாக நீதி அமைச்சர் கௌரவ எம். யூ. எம். அலி சப்ரி அவர்களை அரசாங்கத்துக்கு ஆதரவு கொடுக்கும் தமிழ் உறுப்பினர்கள் சார்பில் நாம் சந்தித்து இவ்விடயம் தொடர்பில் தொடர்ச்சியாக வலியுறுத்தியிருந்தோம். தண்டனைக்காலத்தை விட அதிக காலம் விசாரணைகளின்றி, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாமல், விடுதலை செய்யப்படாமல் இருக்கும் தமிழ் அரசியல்கைதிகளின் விடுதலை என்பது இந்த நாட்டு மக்களின் ஒற்றுமை விடயத்தில் முக்கிய இடம் பெறுகிறது என்பதை வலியுறுத்தியிருந்தோம். 

அத்தகைய எமது கோரிக்கைகளை கருத்தில்கொண்டு, நீண்டகாலமாக சிறைகளில் விசாரணைகளின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து கொள்கைரீதியான முடிவுகளை நோக்கி நகரும் அரசாங்கத்துக்கும், அமைச்சர்களான கௌரவ நாமல் ராஜபக்ச, கௌரவ எம். யூ. எம். அலி சப்ரி ஆகியோருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 

அத்துடன் முதற்கட்டமாக குறிப்பிட்டளவு தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவதற்கான செயற்பாடுகள் ஜனாதிபதி மேன்மைதங்கிய கோட்டபாய ராஜபக்ச அவர்களின் பணிப்புரையின்படி முன்னெடுக்கப்பட்டு வருகிறது. 

மேலும் அடுத்தடுத்த கட்டங்களில் ஏனைய அரசியல் கைதிகள் தொடர்பிலும் கவனம்செலுத்துவதோடு, அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தில் மாற்றங்களை மேற்கொண்டு அவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுதல், அல்லது வழக்கு விசாரணைகளை மேற்கொள்ளல், அல்லது விடுதலை செய்வது தொடர்பிலும் ஜனாதிபதி உரிய பணிப்புரைகளை வழங்கியுள்ளார். 

ஆகவே எமது மக்களின் நீண்ட கால பிரச்சனைகளில் ஒன்றாக இருந்து வந்த அரசியல் கைதிகளின் விடுதலை விடயத்துக்கு நிரந்தரத் தீர்வொன்று விரைவில் கிடைக்கவுள்ளமையை தமிழ் மக்களாகிய நாம் மகிழ்ச்சியோடு பார்க்கிறோம்.என குறிப்பிடப்பட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post