ஒழுங்கான திட்டமிடல் இல்லாததால் கரவெட்டி சுகாதார அதிகாரி பிரிவில் மக்களுக்குப் பெரும் பாதிப்பு - Yarl Voice ஒழுங்கான திட்டமிடல் இல்லாததால் கரவெட்டி சுகாதார அதிகாரி பிரிவில் மக்களுக்குப் பெரும் பாதிப்பு - Yarl Voice

ஒழுங்கான திட்டமிடல் இல்லாததால் கரவெட்டி சுகாதார அதிகாரி பிரிவில் மக்களுக்குப் பெரும் பாதிப்புகரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த 30 வயதுக்கு மேற்பட்ட18, 474 பேருக்கு இன்று வியாழக்கிழமை(29) காலை முதல் கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டு வருகிறது.

கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் கீழ் மொத்தமாக 35 கிராமசேவகர் பிரிவுகள் காணப்படுகிறது. இந்த நிலையில் மேற்படி கிராமசேவகர் பிரிவுகளைச் சேர்ந்த 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஒரே இடத்தில் வைத்துக் கொரோனா தடுப்பூசி ஏற்றப்படுவதால் அங்கு மக்கள் கூட்டம் அலை மோதுகின்றது.

இன்று காலை-06 மணி முதல் கொரோனாத் தடுப்பூசி ஏற்றுவதற்காக மக்கள் கால்கடுக்கக் காத்திருந்த போதும் காலை-08.30 மணி முதலே தடுப்பூசி செலுத்துவதற்காக மக்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டார்கள். இதனால், மக்கள் பெரும் அசெளகரியங்களை எதிர்கொண்டனர்.

கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் அண்மையில் கொரோனாத் தொற்றாளர்கள் அதிகளவில் இனம் காணப்பட்ட நிலையில் மேற்படி பிரிவைச் சேர்ந்த 30 வயதுக்கு மேற்பட்ட18, 474 பேருக்கும் வெவ்வேறு இடங்களில் வைத்துக் கொரோன தடுப்பூசி ஏற்றாமல் ஒரே இடத்தில் வைத்துக் கொரோனா தடுப்பூசி ஏற்றுவது தொடர்பில் சமூக ஆர்வலர்கள் கடும் விசனம் வெளியிட்டுள்ளனர்.        

கோவில்களிலும், ஏனைய இடங்களில் நடக்கும் நிகழ்வுகளிலும் சமூக இடைவெளியினை தீவிரமாக நடைமுறைப்படுத்தும் சுகாதார அதிகாரிகள் இங்கே குவிந்த மக்கள் கூட்டத்தை பார்த்து செய்வதறியாமல் நின்றனர்.  

தடுப்பூசியேற்ற வந்த மக்களுடன் பேசிய போது, ஆயிரக்கணக்கானோருக்கு ஒரே இடத்தில் வைத்து தடுப்பூசி போடுவதென்றால் காலை 7 மணிக்கே அந்தப் பணியை தொடங்கியிருந்தால் இங்கு பலரும் கால்கடுக்க நிற்கும் நிலை ஏற்பட்டிருக்காது. அதே போல் தடுப்பூசியேற்றும் சுகாதார துறையினரின் எண்ணிக்கையினையும் அதிகரித்திருக்க வேண்டும். வயதானவர்கள் பலரும் தூர இடங்களில் இருந்து அதிகளவான கட்டணங்களை போக்குவரத்துக்கு செலுத்தி வரும் நிலை உண்டு. கிராம அலுவலர் பிரிவுகளை பிரித்து போட்டிருந்தால் தங்கள் அருகிலுள்ள நிலையங்களில் இலகுவாக தடுப்பூசியை பெற்றிருக்க முடியும். இப்படியான நிர்வாக குறைபாடுகளை சீர்செய்திருந்தால் மக்கள் இலகுவாக தங்கள் தடுப்பூசிகளை பெற முடியும். சுகாதாரத்துறை உத்தியோகத்தர்களும் சலிப்பில்லாமல் பணியாற்ற முடியும். என்றனர்.

மக்களின் நெருக்கடி நிலை குறித்து சுகாதார அதிகாரிகளுடன் பேசிய போது, மருந்தேற்றும் தொழிநுட்ப உபகரணங்களை கொண்டு சென்று பல கிராம சேவையாளர் பிரிவுகளில் போடுவதில் சிரமம் உள்ளது. எங்களுக்கு ஆளணி பற்றாக்குறையும் உண்டு.  கொரோனாவும் தீவிரமாக பரவி வருவதால் தொற்றுக்குள்ளானவரை தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பும் பணியையும் இரவு பகலாக செய்து வருவதால் எங்களால் இந்தப் பணிகளையும் மேற்கொள்ள சிரமமாக உள்ளது. மக்கள் தான் புரிந்துணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றனர்.  

யாழில் தற்போது கொரோனாத் தொற்று மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் மக்கள் ஒரே இடத்தில் மிக நெருக்கமாக ஒன்றுகூடுவதால் ஏற்படப் போகும் ஆபத்து தொடர்பில் சுகாதார அதிகாரிகள் உடனடிக் கவனம் செலுத்துவார்களா?

இவ்வாறான கொரோனாத் தடுப்பூசி செலுத்துவதில் உள்ள நிர்வாகத் திட்டமிடல் குறைபாடுகள் யாழில்  மீண்டும் ஒரு கொரோனாக் கொத்தணியை உருவாக்காதிருக்க வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் இந்த விடயத்தில் உடனடிக் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கடந்த முறையும் கரவெட்டி சுகாதார அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட  60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நெல்லியடி மத்தியக்கல்லூரியில்  தடுப்பூசி ஏற்றப்பட்டது.  அங்கேயும் ஒரே இடத்தில் அதிகளவிலான முதியோர்கள் ஒன்று திரண்டு வெயிலுக்குள் கால்கடுக்க நின்றமை தொடர்பில் ஏற்கனவே செய்திகள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது. 


0/Post a Comment/Comments

Previous Post Next Post