கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் நோய்த்தொற்றானது, உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
இதனை எதிர்கொள்ள மருத்துவ உலகம் தடுப்பூசிகளை கண்டுபிடித்துள்ள நிலையில், கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாற்றம் அடைந்து வருவதால் இதன் தீவிரத்தை கணிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது.
இருப்பினும் கொரோனா வைரஸ் கிருமியின் தோற்றம் குறித்த மூல காரணம் கண்டறியப்பட்டால், இந்த நோயை எதிர்த்து போராடுவதற்கான சுலபமான வழிகளை கண்டறிய முடியும் என நோய்த்தொற்று நிபுணர்கள் கூறி வருகின்றனர்.
இதற்கிடையில் கொரோனா வைரஸ் கிருமியானது சீனாவின் உகான் மாகாணத்தில் உள்ள ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டும் நிலவி வருகிறது.
இது குறித்து ஆய்வு செய்வதற்காக உலக சுகாதார அமைப்பு சார்பில், நிபுணர்கள் குழு ஒன்று சீனாவிற்கு சென்று சுமார் 4 வாரங்கள் தங்கியிருந்து ஆய்வு நடத்தியது.
கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு முடிவுகளின்படி, கொரோனா வைரஸ் தோற்றம் குறித்த அனைத்து கருதுகோள்களும் அப்படியே தான் இருக்கின்றன என்றும் அதன் உண்மையான தோற்றம் குறித்து இன்னும் கண்டறியப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் கொரோனாவின் தோற்றம் குறித்து அடுத்த கட்ட ஆய்வுக்கு உலக சுகாதார அமைப்பு தயாராகி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்த ஆய்வை அனைத்து பரிசோதனைக்கூடங்கள் மற்றும் சந்தைகளில் நடத்தவும் திட்டமிடப்பட்டு இருக்கிறது. உலக சுகாதார அமைப்பின் இந்த முடிவை சீனா கடுமையாக நிராகரித்துள்ளது.
கொரோனா வைரஸ் கிருமியானது ஆய்வகத்தில் இருந்து கசிந்தது என்ற கோட்பாடு பொது அறிவுக்கு எதிரானது என்றும் இது அறிவியலுக்கு எதிரான புரளி என்றும் சீனா தெரிவித்துள்ளது.
சீனாவின் இந்த முடிவு மிகவும் ஏமாற்றம் அளிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது குறித்து வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் ஜென் சாகி பேசுகையில்,
கொரோனா வைரசின் தோற்றம் குறித்த 2-ம் கட்ட விசாரணைக்கான உலக சுகாதார அமைப்பின் திட்டத்தை சீனா நிராகரித்துள்ளது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார். மேலும் சீனாவின் நிலைப்பாடு பொறுப்பற்றதாகவும், ஆபத்தானதாகவும் இருப்பதாக அவர் விமர்சித்துள்ளார்.
Post a Comment