ஜோசப் ஸ்ராலின் கைது ஒரு ஜனநாயக படுகொலை! இலங்கை இராணுவ ஆட்சியை நோக்கி நகர்கிறது- சட்டத்தரணி சுகாஷ்! - Yarl Voice ஜோசப் ஸ்ராலின் கைது ஒரு ஜனநாயக படுகொலை! இலங்கை இராணுவ ஆட்சியை நோக்கி நகர்கிறது- சட்டத்தரணி சுகாஷ்! - Yarl Voice

ஜோசப் ஸ்ராலின் கைது ஒரு ஜனநாயக படுகொலை! இலங்கை இராணுவ ஆட்சியை நோக்கி நகர்கிறது- சட்டத்தரணி சுகாஷ்!




இலங்கை ஆசிரியர் சங்கத்தினுடைய செயலாளர் ஜோசப் ஸ்டாலின்  கைது ஒரு ஜனநாயக படுகொலை என்பதோடு இலங்கை இராணுவ ஆட்சியை நோக்கி நகர்ந்து கொண்டிப்பதாகவும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப்பேச்சாளரும் சட்டத்தரணியுமான கனகரட்ணம் சுகாஷ் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் யாழ்ப்பாணத்திலுள்ள தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைமைக்காரியாலயத்தில் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

குறித்த சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

இலங்கையில் ஜனநாயக படுகொலை தொடர்ந்து  கொண்டிருக்கிறது. சேர் ஜோன் கொத்தலாவல தேசிய பாதுகாப்பு கல்லூரி சட்டமூலத்திற்கு எதிராக ஜனநாயக வழியில் அகிம்சை முறையிலே எதிர்ப்பு தெரிவிக்க முற்பட்டஇலங்கை ஆசிரியர் சங்கத்தின் உடைய பொதுச் செயலாளர், மனித உரிமைச் செயற்பாட்டாளர் மரியாதைக்குரிய ஜோசப் ஸ்டாலின் அவர்கள் கைது செய்யப்பட்டு முறையற்ற விதத்தில்  தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார். இந்தக் கைதையும் தனிமைப்படுத்தல் செயற்பாட்டையும்  நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.


இலங்கை பாராளுமன்றத்தில் இருக்கின்ற சேர் ஜோன் கொத்தலாவல தேசிய  பாதுகாப்பு கல்லூரி  சட்டமூலம் என்பது இலங்கையை சட்டரீதியாக இராணுவ மயப்படுத்தலுக்கு உட்படுத்துவதற்கு வழிவகுக்கின்ற ஒரு சட்டமூலம்.  

இந்த சட்டமூலத்தை ஜனநாயக வழியிலே எதிர்த்த இலங்கை ஆசிரியர் சங்கத்தினுடைய பொதுச் செயலாளர் மதிப்பிற்குரிய ஜோசப் ஸ்டாலின் அவர்கள் ஒரு சட்டமூலத்திற்கு ஜனநாயக வழியிலே கொரோனா விதிமுறைகளை பின்பற்றி எதிர்ப்பு தெரிவித்தமைக்காக கைது செய்யப்பட்டு நீதிமன்றத்திலேயே உட்படுத்தப்பட்டு தற்சமயம் கேப்பாப்பிலவு இராணுவ முகாமில் தனிமைப்படுத்தப்பட்டதாகக் கூறி கைது செய்து அடைக்கப்பட்டிருக்கிறார். 

 உண்மையில் இது ஒரு கடத்தல் பாணியிலே தான் அவருடைய தனிமைப்படுத்தல் அமைந்திருக்கிறது என்பது கசப்பான உண்மை. 

 குறித்த சட்ட மூலமானது ஒரு பல்கலைக்கழகத்தை இராணுவ மயப்படுத்தி அந்தப் பல்கலைக்கழகத்தில் வெளியேறுகின்றவர்களை  இராணுவ மயமாக்கலுக்கு உட்படுத்தி அதற்கு பழக்கப்படுத்தி வெளியேற்றுகின்ற செயற்பாட்டிற்கு அனுமதிக்கின்ற ஒரு சட்டமூலமே இதுவாகும். 

 இந்தக் கல்லூரி இலங்கையினுடைய பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது என்பது அவதானிக்கப்பட வேண்டிய விடயம்.  ஆகவே இது ஒரு தனியான சட்டத்தின்கீழ் ஆளப்படுகின்ற ஒரு கல்லூரியாக இருக்கிறது.

இதனுடைய தாற்பரியத்தை உணர்ந்து ஜோசப் ஸ்டாலின் அவர்களும் சகோதர மொழி பேசுகின்ற நபர்களும் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தி இருந்தார்கள். அதற்காக அவர்கள் கைது செய்யப்பட்ட முறையே ஜனநாயகத்திற்கு முரணானதாக இருந்தது .

கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டபோதும் நீதிமன்றத்தினால்  இவர்களை தனிமைப் படுத்துவதற்கான  அனுமதி வழங்கப்படவில்லை.

 நீதிமன்றத்தினுடைய அனுமதியையும் மீறி நீதிமன்றத்தினுடைய கட்டளையையும் பெறாமல் எந்தவித பி.சி.ஆர் பரிசோதனையோ அல்லது ஆன்டிஜன் பரிசோதனையோ மேற்கொள்ளாமல் இவர்கள் கைது செய்யப்பட்டு தற்பொழுது கேப்பாபிலவு வான்படை முகாமிலே அடைக்கப்பட்டிருக்கிறார்.  அடிப்படை வசதிகள் எதுவுமே இல்லாது முறையற்ற விதத்தில் இந்த தனிமைப்படுத்தலானது மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

இவருடைய கைது ஒரு ஜனநாயக படுகொலை அதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். ஏனென்றால் இலங்கை ராணுவ ஆட்சியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது கோட்டாபய அரசினுடைய எதேச்சாதிகார சர்வாதிகார ஆட்சி எல்லை மாறிக்கொண்டிருக்கிறது.

 பல்கலைக்கழகத்தின் ஊடாக இராணுவ மயமாக்கலுக்கு உட்படுத்தப்பட்ட ஒரு சமூகத்தை உற்பத்தி செய்கின்ற பிரசவிக்கின்றதாகவே இந்த சட்டமூலம் அமைந்துள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post