யாழ் பல்கலைக்கழக பணியாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல் - Yarl Voice யாழ் பல்கலைக்கழக பணியாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல் - Yarl Voice

யாழ் பல்கலைக்கழக பணியாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்



யாழ் பல்கலைக்கழக அனைத்துப் பணியாளர்களிற்கும்,

நேற்றைய தினம் (சனிக்கிழமை 14.08.2021)  துணைவேந்தருடன் எமது செயற்குழு அங்கத்தவர்கள் கலந்துரையாடியதன் பின்பு அவரால் வழங்கப்பட்ட சில உறுதிமொழிகளின் பிரகாரம்,  09.08.2021ம் திகதி துணைவேந்தரால் வெளியிடப்பட்ட உள்ளக சுற்றுநிரூபம்: UOJ/03/2021க்கு அமைவாக, 16.08.2021 திங்கட்கிழமை முதல் பணிக்கு திரும்பலாம் என பரிந்துரை செய்கிறோம்.

அ:
பணிக்குத் திரும்பும் போது பின்வரும் விடயங்களை கவனத்தில் கொள்ளவும்.

1-  ஒவ்வொரு பணியிடங்களிலும் வாரத்தில் மூன்று தினங்களென்ற சுழற்சி முறையினை கட்டாயமாகக கடைப்பிடித்தல்

2-கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்கள்  துறைத்தலைவருக்கு, உரிய முறையில் அறிவித்து வீட்டிலிருந்து பணியாற்றல் வேண்டும்.

3- பணியிடங்களில் கொரோனா அபாயம் உள்ளவர்கள், அல்லது தங்களுக்கு கொரோனா தொற்றாளர் ஒருவருடன் நேரடி தொடர்பு உள்ளது என கருதுபவர்கள் அல்லது தங்கள் சூழலில்-பிரதேசத்தில் கொரோனா அபாயம் உள்ளவர்கள் துறைத்தலைவருக்கு, உரிய முறையில் அறிவித்து வீட்டிலிருந்து பணியாற்றல் வேண்டும். 

4-உங்களது துறையில் பணிபுரியும் ஒருவர் தொற்றுக்கு உள்ளாகியுள்ளாரெனின் பல்கலைக்கழக கோவிட் தடுப்பு செயலணித்தலைவரின் பரிந்துரை இன்றி உங்கள் துறைக்குள் பிரவேசிக்க வேண்டாம்.

5-பணிக்கு வருகை தந்தநிலையில் தங்களுக்கு கொரோனா தொற்றாளர் ஒருவருடன் நேரடி தொடர்பு உள்ளது என தெரியவரின் உடனடியாக பாதுகாப்பான முறையில் துறைத்தலைவருக்கு, உரிய முறையில் அறிவித்து உடனடியாக பணியிடத்தினைவிட்டு வெளியேறி வீடு திரும்பி உங்களை சுயதனிமைப்படுத்திக் கொள்வதோடு உரிய சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றவும்.

6-ஏதாவதொரு சந்தர்ப்பத்தில்  கொரோனா கண்டறிவதற்கான சோதனையினை (PCR Test/ Antigen Test) மேற்கொண்டிருப்பின் தயவுசெய்து அச்சோதனையின் முடிவு வரும்வரை உங்களை சுயதனிமைப்படுத்திக் கொள்வதோடு முடிவு கிடைத்தபின்னர் சுகாதார துறையினரின் (PHI/ MOH)வழிகாட்டல்களை பின்பற்றவும். 

மேற்கூறிய 2ஆம், 3ஆம், 4ஆம், 5ஆம், 6ஆம் சந்தர்ப்பங்களில் துறைத்தலைவருக்கு, உரிய முறையில் அறிவித்து துறைத்தலைவர் மறுக்கும் பட்சத்தில்  அல்லது அறிவிக்க முடியாத சந்தர்ப்பத்தில் துணைவேந்தருக்கு நேரடியாக எழுத்து மூலமாக அறிவிப்பதோடு ஊழியர் சங்கத்திற்கும் தெரியப்படுத்தவும்.

ஆ:
நீங்கள் சுழற்சி முறையில் பணிக்கமர்த்தப்பட்ட நாட்களில் கடமைக்கு சமுகளிக்க முடியாவிட்டால் அத்தினங்கள் தங்களின் சொந்த விடுப்பாகவே கருதப்படும் என்பதை கவனத்தில் கொள்ளவும். சுழற்சி முறையில் பணிக்கு வராமல் வீட்டில் தங்கியிருக்கும் நாட்களில் நிகழ்நிலை (online) மூலம் பணியாற்ற நீங்கள் தயாராக இருக்க வேண்டும்.

இ:
கடமையிலுள்ள போதும், பிரயாணங்களின் போதும், வெளியில் செல்லும் போதும் முகக்கவசத்தை உரிய முறையில் அணிந்திருத்தலோடு சமுக இடைவெளியை அவசியம் பேணவும். எப்போதும் கைவசம் சிறிய சனிடைசர் போத்தலை வைத்திருந்து உபயோகப்படுத்தலோடு, அவசியம் உணரப்படும் போதெல்லாம் உரிய முறையில் சவர்க்காரமிட்டு கை கழுவும் வசதி கிடைப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அத்துடன் அத்தியாவசிய காரணங்களின்றி வெளியில் நடமாடித் திரிவதை தவிர்க்குமாறும் வேண்டுகிறோம்.

ஈ:
இங்கு குறிப்பிடத் தவறிய வேறு அபாய சூழ்நிலைகளின் போதும் துறைத்தலைவர் தங்களைப் பணிக்கு அழைக்காமல் விட சுற்றுநிருபம் வாயிலாக அதிகாரமளிக்கப்பட்டுள்ளார். அதை அவர்  கோரானா பரவலை கட்டுப்படுத்த பயன்படுத்த முடியும். அவ்வாறு துறைத்தலைவர் பணிக்கு அழைக்காமல் விடும் சந்தர்ப்பங்களில் அவருக்கு முழுமையான ஒத்துழைப்பினை வழங்கவும்.

உ: 
பல்கலைக்கழக கோவிட் தடுப்பு செயலணிக்குழு உரிய தகுதி வாய்ந்த மருத்துவ நிபுணர்களால் மீள வலுப்படுத்தப்படுவதோடு இக்குழு அதிகாரமிக்கதொன்றாக சகல துறைகளின் தடுப்பு நடவடிக்கைகளையும் கண்காணிக்க வேண்டுமென, ஊழியர் சங்கம் அடுத்து வரும் தினங்களில் கடுமையாக வலியுறுத்தி ஆவன செய்யும் .

மேலும் பல்கலைக்கழக பணியாளர்களுக்கான பிரத்தியேக கோவிட் தடுப்பு சிகிச்சை மையமொன்றை உருவாக்கவும் துணைவேந்தரிடம் நாம் முன்வைத்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

ஊழியர் சங்க அறிவுறுத்தலின் பிராகாரம் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பதற்காக பணியிடங்களிற்கு செல்லாது வீட்டில் தங்கியிருந்த காலப்பகுதி (பராமரிப்புத் துறை பணியாளர்கள்  09.08.2021 முதலும் ஏனைய அனைத்துப் பணியாளர்கள் 12.08.2021 முதலும் 15.08.2021 வரை) ஊழியர்களின் சொந்த விடுமுறையில் கழிக்கப்படமாட்டாது.

சங்கச் சேவையில்
பல்கலைக்கழக ஊழியர் சங்கம்
15.08.2021.

0/Post a Comment/Comments

Previous Post Next Post