யாழில் இளைஞர் ஒருவரை வானில் கடத்தி சென்று சித்திரவதை செய்த குற்றச்சாட்டில் ஐந்து பொலிஸார் இடமாற்றம் - Yarl Voice யாழில் இளைஞர் ஒருவரை வானில் கடத்தி சென்று சித்திரவதை செய்த குற்றச்சாட்டில் ஐந்து பொலிஸார் இடமாற்றம் - Yarl Voice

யாழில் இளைஞர் ஒருவரை வானில் கடத்தி சென்று சித்திரவதை செய்த குற்றச்சாட்டில் ஐந்து பொலிஸார் இடமாற்றம்
கோப்பாய் இளைஞர் ஒருவரை ஹைஏஸ் வானில் கடத்திச் சென்று தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள உப பொலிஸ் பரிசோதகர் உள்ளிட்ட 5 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கோப்பாய் பொலிஸ் நிலையத்திலிருந்து இடமாற்றப்பட்டுள்ளனர். 

அவர்கள் மீதான குற்றச்சாட்டுத் தொடர்பில் முன்னெடுக்கப்படும் உள்ளக விசாரணையில் தலையீடு செய்வதைத் தவிர்க்கும் வகையில் யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த லியனகேயின் உத்தரவில் ஐவரும் வெவ்வேறு பொலிஸ் நிலையங்களுக்கு உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இடமாற்றப்பட்டுள்ளனர்.

கோப்பாய் பொலிஸ் பிரிவில் கடந்த வியாழக்கிழமை “ஹைஏஸ்” ரக வானில் வந்த பொலிஸ் சீருடை மற்றும் சிவில் உடையில் இருந்த கும்பல் ஒன்று இளைஞன் ஒருவரைக் கடத்தி சென்று சித்திரவதை புரிந்து கைத்துப்பாக்கியால் தாக்கி வீதியில் வீசிவிட்டு சென்றது.

 அந்தச் சம்பவத்தில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் உள்ளமை தொடர்பில் தாக்குதலுக்குள்ளான இளைஞனால் யாழ்ப்பாணம் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு வழங்கப்பட்டது.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

 அந்த விசாரணைகளில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள உப பொலிஸ் பரிசோதகர் மற்றும் 4 பொலிஸ் உத்தியோகத்தர்கள் சாட்சிகளில் தலையீடு செய்வதைத் தடுக்கும் வகையில் அவர்கள் ஐவரும் இன்று உடன் நடைமுறைக்கு வரும் வகையில் வெவ்வேறு பொலிஸ் நிலையங்களுக்கு இடமாற்றப்பட்டுள்ளனர். 

இதற்கான பணிப்பினை வழங்கியுள்ள யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த லியனகே, பாதிக்கப்பட்ட இளைஞனின் வாக்குமூலத்தைப் பதிவு செய்து விசாரணைகளைத் துரிதப்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post