சட்டப்போராளி கெளரி சங்கரியின் மறைவு நீதிக்காக ஏங்கும் மக்களுக்கு பேரிழப்பு! விஜயகலா மகேஸ்வரன் - Yarl Voice சட்டப்போராளி கெளரி சங்கரியின் மறைவு நீதிக்காக ஏங்கும் மக்களுக்கு பேரிழப்பு! விஜயகலா மகேஸ்வரன் - Yarl Voice

சட்டப்போராளி கெளரி சங்கரியின் மறைவு நீதிக்காக ஏங்கும் மக்களுக்கு பேரிழப்பு! விஜயகலா மகேஸ்வரன்




தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காகவும்  மனித உரிமை மீறல்களுக்கு எதிராகவும் பெண் உரிமைக்காகவும் செயற்பட்டு வந்த சிரேஷ்ட சட்டத்தரணி கெளரிசங்கரி தவராசாவின் இழப்பானது  ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும் என்று முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான திருமதி விஜயகலா மகேஸ்வரன் அனுதாபம் தெரிவித்துள்ளார்.

சிரேஷ்ட சட்டத்தரணி கெளரி சங்கரி தவராசாவின் மறைவு குறித்து விடுத்துள்ள அனுதாபச் செய்தியிலேயே விஜயகலாமகேஸ்வரன் இவ்வாறு தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது..

சிரேஷ்ட சட்டத்தரணி கெளரி சங்கரி தவராசாவின் திடீர் மறைவானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக அன்றுதொட்டு இன்றுவரை கெளரிசங்கரி தவராசா பாடுபட்டு வந்தவர். அவரது கணவர் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசாவுடன் ஒன்றிணைந்து இந்த நடவடிக்கையில் அவர் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டு வந்தார்.

மனித உரிமை விவகாரம் தொடர்பிலும் பெண் விடுதலை மற்றும் உரிமை தொடர்பிலும் தொடர்ச்சியாக அர்ப்பணிப்புடன் பணியாற்றி வந்த சட்டப் போராளியாக கெளரிசங்கரி தவராசா திகழ்ந்தார். 

தன்னை நம்பி வந்தவர்களுக்காக எத்தகைய இடர்களுக்கு மத்தியிலும் சளைக்காது சட்டப்பணியாற்றிய ஒருவராகவே இவர் திகழ்ந்தார். மூன்று தாசாப்த காலங்களுக்கு மேலாக சட்டத்துறையில் பணியாற்றி சாதனைகளை படைத்த அவர். ஐக்கிய தேசியக்கட்சியின் செயற்குழு உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். 

அத்துடன் தமிழரசுக்கட்சியின் கொழும்பு மாவட்ட கிளையின் தலைவரான தனது கணவர் ஜனாதிபதி சட்டத்தரணி தவராசாவின் அரசியல் விவகாரத்திலும் தக்கதுணையாக அவர் செயலாற்றி வந்தார். தமிழ்த் தேசியப் பரப்பிலும் அக்கறை கொண்டு செயற்பட்டிருந்தார்.

சட்டத்துறையில் சிங்கப் பெண்ணாக திகழ்ந்த கெளரிசங்கரி தவராசாவின் இழப்பானது தமிழ் பேசும் மக்களுக்கு மட்டுமல்ல நாட்டில் நீதியை எதிர்பார்த்து காத்திருக்கும் சகலருக்கும் பேரிழப்பாக அமைந்துள்ளது. 

அன்னாரது மறைவினால் பெரும் துயருற்றிருக்கும் அவரது கணவர் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா அவர்களுக்கும் குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதுடன் அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post