காணாமற்போனோருக்கு மரணச் சான்றிதழ், நெடுங்கால கைதிகளுக்கு பொது மன்னிப்பு - ஐ.நா. செயலரிடம் கோத்தபாய உறுதி - Yarl Voice காணாமற்போனோருக்கு மரணச் சான்றிதழ், நெடுங்கால கைதிகளுக்கு பொது மன்னிப்பு - ஐ.நா. செயலரிடம் கோத்தபாய உறுதி - Yarl Voice

காணாமற்போனோருக்கு மரணச் சான்றிதழ், நெடுங்கால கைதிகளுக்கு பொது மன்னிப்பு - ஐ.நா. செயலரிடம் கோத்தபாய உறுதி
ஐ.நா சபையின் உயர்ந்தபட்ச ஒத்துழைப்பை இலங்கைக்கு தான் பெற்றுத் தருவார் என்பதனை ஐ.நா. சபையின் பொதுச் செயலாளர் ஜனாதிபதி கோத்தபாயவிடம் இதன்போது உறுதியளித்தார். 

இது தொடர்பில் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளதாவது....

உள்ளகப் பொறிமுறை ஒன்றின் ஊடாகப் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதற்கான பேச்சுவார்த்தைக்கு வருமாறு, புலம்பெயர் தமிழர்களுக்கு இந்தச் சந்தர்ப்பத்தில் நான் அழைப்பையும் விடுக்கின்றேன்.

இனங்களுக்கிடையில் ஒற்றுமையை பலப்படுத்திக்கொண்டு முன்னோக்கி நகர்வதற்கான முழுமையான ஒத்துழைப்பை, மிகவும் சாதகமான  முறையில் ஐக்கிய நாடுகள் சபை இலங்கைக்கு வழங்கும் என்று -

அதன் பொதுச் செயலாளர் அன்டனியோ குட்டரெஸ் (Antonio Guterres) அவர்கள் என்னிடம் தெரிவித்தார்.

நியூ யோர்க்கிலுள்ள ஐக்கிய நாடுகள் சபைத் தலைமையகத்தில், நேற்றைய தினம் இடம்பெற்ற ஐ.நா பொதுச் செயலாளர் உடனான விசேட சந்திப்பின் போதே அவர் இதனை என்னிடம் தெரிவித்தார். 

ஐ.நா தலைமையகத்துக்கு நான் சென்ற போது என்னை அன்புடன் வரவேற்ற குட்டரெஸ் அவர்கள்,

1978ஆம் ஆண்டில், சர்வதேச பாராளுமன்றச் சங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி இலங்கைக்குத் தான் விஜயம் செய்திருந்ததையும்,

கண்டி, அநுராதபுரம், பொலன்னறுவை மற்றும் திருகோணமலை ஆகிய பிரதேசங்களுக்குச் சுற்றுலா சென்றதையும், அதன்போதான தனது அழகான நினைவுகளையும் இவர் ஞாபகப்படுத்தினார். 

ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான ஆணையாளராக, இலங்கை தொடர்பில் தான் பணியாற்றியமை,

மற்றும் 2006ஆம் ஆண்டில் அப்போதைய ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களைச் சந்தித்தமை குறித்தும், குட்டரெஸ் அவர்கள் நினைவுபடுத்தினார்.

சுமார் 30 ஆண்டுகள் நிலவிய யுத்தம் காரணமாக, மிகவும் சிக்கலான நிலைமைக்குள் விழவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டாலும்,

இந்து சமுத்திர வலயத்தில், மாபெரும் சமூக மற்றும் பொருளாதாரப் பணிகளை நிறைவேற்றும் இலங்கையிடமிருந்து - தொடர்ந்தும் அப்பணியை எதிர்பார்ப்பதாக, பொதுச் செயலாளர் என்னிடம் எடுத்துரைத்தார். 

ஐ.நா பொதுச் செயலாளருடன் கலந்துரையாடக் கிடைத்தமையிட்டு நான் மகிழ்ச்சியடைவதனை அவரிடம் தெரிவித்ததுடன்,

உலகம் இன்று முகங்கொடுத்துள்ள மிகவும் இக்கட்டான சூழ்நிலைக்கு மத்தியில் ஐ.நா முன்னெடுத்து வரும் நிர்வாகச் செயற்பாடுகள்,

மற்றும் இரண்டாவது தடவையாகவும் ஐ.நா பொதுச் செயலாளர் பதவிக்கு அவர் தெரிவாகியுள்ளமை என்பவற்றுக்காக அவருக்கு எனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் நான் தெரிவித்துக்கொண்டேன்.

சிறிய பொருளாதாரத்தைக் கொண்டுள்ள இலங்கை போன்ற நாடொன்று, கொவிட் தொற்றுப் பரவலுக்கு மத்தியில் முகங்கொடுத்துள்ள சவால்கள் தொடர்பில்,, ஐ.நா பொதுச் செயலாளருக்கு நான்  எடுத்துரைத்தேன்.

கொவிட் தொற்றுப் பரவலுக்கு மத்தியில், இலங்கையின் கல்வி மற்றும் பொருளாதாரத்துக்கு ஏற்பட்டுள்ள பாரிய அச்சுறுத்தல்கள் தொடர்பிலும் தீர்க்கமான முறையில் நான் எடுத்துரைத்ததுடன்,

தொற்றுப்பரவலை வெற்றிகரமாக எதிர்கொள்ள, உலக சுகாதார ஸ்தாபனம் வழங்கி வரும் ஒத்துழைப்புக்கும் எனது பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்தேன். 

இதுவரையில், இலங்கையின் மொத்தச் சனத்தொகையில் அரைவாசிக்கும் மேற்பட்டோருக்கு  கோவிட் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதனை நான் சுட்டிக்காட்டியதுடன்,

நவம்பர் மாத இறுதிக்குள், 15 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி ஏற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதையும் தரவுகளுடன் எடுத்துரைத்தேன்.

இதன்போது, தடுப்பூசி ஏற்றலில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றத்துக்கு, பொதுச் செயலாளர் அவர்கள், தனது பாராட்டுகளைத் தெரிவித்தார். 

2019ஆம் ஆண்டில் ஜனாதிபதியாகத் தெரிவான நான், பொதுமக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றுவதில், கொவிட் தொற்றுப் பரவலானது பெரும் தடையாக இருக்கின்றதென்பதனை நான் தெரிவித்ததுடன்,

இருப்பினும், 30 வருட காலமாக நிலவிய யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்ததன் பின்னர் ஏற்பட்ட இடைநிலைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக நாம் எடுத்த நடவடிக்கைகள் தொடர்பில் விரிவாகத் தெளிவுபடுத்தினேன்.
 
பாதிக்கப்பட்டோருக்கு நட்டஈடு வழங்கல், காணிகளை மீளக் கையளித்தல் மற்றும் 2009ஆம் ஆண்டில், மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களின் வழிகாட்டலின் கீழ் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்பட்ட பாரிய அபிவிருத்திகள் மற்றும் வடக்கு மாகாண சபைக்கான உறுப்பினர்களை, ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுப்பதற்காக ஏற்படுத்திக்கொடுத்த வாய்ப்பு என்பவை தொடர்பிலும் நான் எடுத்துரைத்தேன். 

காணாமற்போனோர் தொடர்பில், அரசாங்கம் என்ற ரீதியில் எடுக்கக்கூடிய நடவடிக்கைகளை விரைவில் முன்னெடுப்போம் எனவும்,

மரணச் சான்றிதழ்களை வழங்கும் நடவடிக்கைகளை விரைவுபடுத்துவோம் எனவும் பொதுச் செயலாளரிளிடம் நான் தெரிவித்தேன். 

பயங்கரவாதச் செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த இளைஞர்களில் பலரை, நான் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் விடுவித்துள்ளதனை நான் எடுத்துரைத்ததுடன்,

அவ்வாறு விடுவிக்க முடியாத ஏனையோர் தொடர்பான வழக்கு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டு வருவதனையும்,

நீண்ட காலமாகத் தடுப்பிலுள்ள தமிழ் இளைஞர்கள் தொடர்பிலான சட்டச் செயற்பாடுகள் முடிவடைந்த பின்னர் - நீண்ட காலம் தடுப்பில் இருந்ததைக் கருத்திற்கொண்டு, ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் அவர்களை விடுவிப்பதற்கு நான் தயங்க மாட்டேன் என்பதனையும் பொதுச் செயலாளரிடம் நான் தெரிவித்தேன். 

இலங்கைக்குள் மிகவும் பலமான முறையில் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதே என்னுடைய இலக்கு என்றும்,

அதன்படி, போராட்டக்காரர்கள் மீது முன்னரைப் போன்று தடியடி, நீர்த்தாரைத் தாக்குதல் போன்றவற்றை நடத்த, என்னுடைய ஆட்சியின் கீழ் ஒருபோதும் அனுமதியில்லை என்றும்,

போராட்டக்காரர்களுக்கென்றே என்னுடைய அலுவலகத்துக்கு முன்னால்  தனி இடமொன்று ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் நான் விளக்கினேன்.

நாட்டுக்குள் அபிவிருத்தி மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக, சிவில் அமைப்புகளுடன் இணைந்து நான் செயற்படும் விதம் தொடர்பிலும் நான்  தெளிவுபடுத்தினேன். 

இலங்கையின் உள்ளகப் பிரச்சினைகள், நாட்டுக்குள்ளேயே உள்ளகப் பொறிமுறையினூடாகத் தீர்க்கப்பட வேண்டும் என்பதனையும்,

அதற்காக, புலம்பெயர் தமிழர்களைப் பேச்சுவார்த்தைக்கு நான் அழைப்பதனையும் ஐ. நா. பொதுச் செயலாளரிடம் நான் தெரிவித்தேன். 

ஐக்கிய நாடுகள் சபையுடன், எப்போதும் மிக நெருக்கமாகப் பணியாற்ற நாம் தயார் என்பதை  மீண்டும் ஒருமுறை நான் எடுத்துரைத்ததுடன்,

நாட்டுக்குள் மீண்டும் பிரிவினைவாதம் ஏற்படப்போவதில்லை என்பதை என்னால் உறுதிப்படத் தெரிவிக்க முடியும் என்ற போதிலும்,

மதவாதத் தீவிரவாதம் தொடர்பில், இலங்கை போன்று ஏனைய நாடுகளும் அவதானமாக இருக்க வேண்டுமென்பதையும் எடுத்துரைத்தேன் என்கிறார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச.

0/Post a Comment/Comments

Previous Post Next Post