வீட்டு கதவை பூட்டி வைத்துவிட்டு விருந்துக்கு அழைக்கும் ஜனாதிபதி- கூட்டமைப்பு சுரேந்திரன் கருத்து - Yarl Voice வீட்டு கதவை பூட்டி வைத்துவிட்டு விருந்துக்கு அழைக்கும் ஜனாதிபதி- கூட்டமைப்பு சுரேந்திரன் கருத்து - Yarl Voice

வீட்டு கதவை பூட்டி வைத்துவிட்டு விருந்துக்கு அழைக்கும் ஜனாதிபதி- கூட்டமைப்பு சுரேந்திரன் கருத்து
 புலம்பெயர் அமைப்புகளுக்கு தடை விதித்து விட்டு முதலீடு செய்ய வரும்படி அழைப்பது வேடிக்கையாக இருக்கிறது.

 அமெரிக்க நியூயோர்க் நகரில் நடைபெறும்   ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத் தொடரில் கலந்து கொண்டிருக்கும் இலங்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்க்ஷ அவர்கள் சில வேடிக்கையான கருத்துக்களை நகைச்சுவையாக கூறியிருக்கிறார்.

  புலம்பெயர் தமிழ் சமூகம் இலங்கையில் முதலீடு செய்ய வேண்டும் என்று தான் வரவேற்பதாக கூறியிருப்பது வீட்டு கதவை இறுக்கி பூட்டி வைத்துவிட்டு விருந்தாளிகளை உணவருந்த உள்ளிருந்து அழைப்பது போன்ற ஒரு செயல்பாடு தான் இது.  

புலம் பெயர் அமைப்புகள் பலவற்றை தடை செய்ததோடு வெளிநாடுகளில் இருந்து வரக்கூடிய உறவுகள் அச்சம் அடைய கூடிய சூழ்நிலையை ஏற்படுத்தி விட்டு இங்கு வந்து முதலீடு செய்யலாம் என்று ஐநா செயலாளர்  நாயகத்திடம் தெரிவித்திருப்பது வேடிக்கையாக இருக்கிறது. 

முதலாவதாக முதலீட்டாளர்கள் ஒரு நாட்டை நோக்கி வருவதற்கான அரசியல் மற்றும் நிர்வாகச் சூழல் மிக அவசியம் என்பதை ஜனாதிபதி உணர்ந்து கொள்ள தவறி இருக்கிறார்.

 முதலீட்டாளர்கள் வழமையாக இவற்றையே முதலில் பிரதானமாக கருத்தில் எடுத்து முதலீடுகளை  தீர்மானிப்பார்கள். 

அரச நிர்வாகத்தில் இராணுவமயமாக்கல் தொடர்கிறது. அரசியல் பிரச்சனைகள் , மனித உரிமை விடயங்கள் அரசால் தீர்வு காணப் படாமல் தொடர்கிறது. 

உள்ளகப் பொறிமுறை ஊடாக நியாமான தீர்வுகள் எந்த இனத்தவருக்கும் கிட்டாது என முழு நாடுமே உணர்ந்துள்ளது. 

எல்லாவற்றுக்கும் மகுடம் வைத்தால் போல அரசியல் கைதிகள் சிறைச்சாலைக்கு பொறுப்பான இராஜாங்க அமைச்சரால் துப்பாக்கி முனையில் மிரட்டப் பட்டுள்ளனர்.

 அதற்கான சட்ட நடவடிக்கை எடுக்க, நீதி வழங்க உள்ளக பொறிமுறை தவறியுள்ளது மாத்திரமல்ல  அவற்றிற்கு அரசு துணை போவதை எடுத்து காட்டியுள்ளது. 

இந்த நிலையில் இலங்கை ஜனாதிபதி ஐநா செயலாளர் நாயகத்திடம் தெரிவித்திருக்கும் கருத்துக்கள் வேடிக்கையானது. 

அரசு இனியும் அரசியல் தீர்வு, மனித உரிமை, நீதிப் பொறிமுறை, நல்லிணக்கம், பொறுப்புக் கூறல் என்பவற்றை நிலைநாட்ட சர்வதேச சமூகத்தோடு ஒத்திசைந்து இதயசுத்தியோடு செயல்பட தவறினால் ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் அதல  பாதாளத்துக்குள் தள்ளுவதாகவே முடியும். 

சுரேந்திரன் 
ஊடகப் பேச்சாளர்- ரெலோ
தமிழ் தேசியக் கூட்டமைப்பு

0/Post a Comment/Comments

Previous Post Next Post