யாழ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா ஒத்திவைப்பு - Yarl Voice யாழ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா ஒத்திவைப்பு - Yarl Voice

யாழ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா ஒத்திவைப்பு



எதிர்வரும் 16,17,18 ஆம் திகதிகளில் நடைபெறவிருந்த யாழ்ப்பாணப் பல்கலைக் கழக 35 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது பகுதி தற்போதைய கொரோனா பெருந்தொற்று நிலைமைகளைக் கருத்தில் கொண்டு அடுத்தமாதம் 7,8,9 ஆம் திகதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

இந்தத் தகவல் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஊடகப்பிரிவினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஊடகப்பிரிவினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள அந்தச் செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் வருமாறு: 

யாழ்ப்பாணப் பல்கலைக் கழக 35 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது பகுதியை இம்மாதம் 16 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை நடாத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருந்தது. 

எனினும் நாட்டின் தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு பட்டமளிப்பு விழா ஏற்பாடுகள் பற்றி ஆராய்வதற்காக பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழாக் குழு இன்று 8 ஆம் திகதி புதன்கிழமை காலை துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா தலைமையில் கூடியது. 

தற்போதைய நிலைமைகள் பற்றி ஆராய்ந்த குழு, நாட்டின் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு பட்டமளிப்பு விழாவை அடுத்த மாதம் 07 ஆம் திகதி முதல் 09 திகதி வரை யாழ். பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில்  நடாத்துவதெனத் தீர்மானித்துள்ளது. 

எனினும்  சூழ்நிலைகளைப் பொறுத்து குறித்த தினங்களில் பட்டமளிப்பு விழாவைத் திட்டமிட்டபடி பட்டதாரிகளுடன் நடாத்த முடியாத நிலைமை ஏற்பட்டால் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பட்டமளிப்பு விழாவை நிகழ்நிலையில் நடாத்தி பட்டங்களை உறுதிப்படுத்துதெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.  

மேலும் பட்டமளிப்பு விழாவை நிகழ்நிலைக்கு மாற்றுவது தொடர்பான இறுதித் தீர்மானம் இம்மாதம் 23 ஆம் திகதி அறிவிக்கப்படும் என்றும் அந்த செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

0/Post a Comment/Comments

Previous Post Next Post