ஆப்கானில் சிகையலங்காரங்களில் ஈடுபடுபவர்கள் முகச்சவரம் செய்யக்கூடாது தாடிகளை அழகுபடுத்தக் கூடாது என தலிபான்கள் உத்தரவிட்டுள்ளனர்.
இது இஸ்லாமிய சட்டத்தை மீறும் செயல் என தலிபான்கள் ஹெம்லாண்டில் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த உத்தரவை மீறுபவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என தலிபானின் மத பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். காபுலிலும் தலிபான்கள் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிகையலங்காரங்களில் ஈடுபடுபவர்கள் ஷரியா சட்டத்தை கடுமையாக பின்பற்றவேண்டும் என்ற உத்தரவை தலிபான்கள் சிகையலங்கார நிலையங்களில் ஒட்டியுள்ளனர்.
எவரும் இந்த உத்தரவை கேள்விக்கு உட்படுத்த முடியாது எனவும் தலிபான்கள் தமது உத்தரவில் தெரிவித்துள்ளனர் என பிபிசி தெரிவித்துள்ளது.
தலிபான்கள் எங்களிடம் வந்து எங்களிற்கு கடுமையான எச்சரிக்கையை விடுத்து சென்றனர் என சிகையலங்காரத்தி;ல் ஈடுபடும் ஒருவர் காபுலில் தெரிவித்துள்ளார். எங்களை கண்காணிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
தன்னை தொடர்புகொண்ட ஒருவர் தான் அரசாங்க அதிகாரி என தெரிவித்ததுடன் அமெரிக்க பாணியை பின்பற்றவேண்டாம்,முகச்சவரம் செய்யவோ தாடியை ஒழுங்குபடுத்தவோ வேண்டாம் என உத்தரவிட்டார் என இன்னொருவர் தெரிவித்துள்ளார்.
தலிபானின் முதலாவது ஆட்சிக்காலத்தில் தலைமுடியை அழகுபடுத்திக்கொள்வது தாடியை ஒழுங்குபடுத்திக்கொள்வது போன்றவற்றிற்கு தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எனினும் கடந்த இருபது வருடங்களில் இந்த நிலைமை மாற்றமடைந்துள்ளது.
இந்த புதிய உத்தரவுகள் காரணமாக தங்கள் வாழ்வாதாரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என சிகையலங்காரத்தில் ஈடுபடுபவர்கள் தெரிவித்துள்ளனர்.
Post a Comment