ஆப்கானில் நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் பெண்ணொருவர் ஆயுதம் ஏந்திய தலிபானை துணிச்சலுடன் எதிர்கொள்ளும் உணர்வுபூர்வமான படம் வெளியாகியுள்ளது.
பெண்கள் மீதான கொடூரத்திற்கு பெயர் பெற்ற தலிபான்களுக்கு எதிராக முன்னெப்போதும் இல்லாத வகையில் மூன்று பேரணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
நேற்று காபூலில் தலிபான் வன்முறைக் குழுவுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களின் போது ஆப்கானிஸ்தான் பெண் ஒருவர், ஆயுதம் ஏந்திய ஆண் ஒருவரை எதிர்கொள்ளும் புகைப்படமானது வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தான் தலைநகரின் வீதிகளில் பல பேரணிகளில் கூடியிருந்த நூற்றுக்கணக்கான மக்களை கலைக்க தலிபான்கள் துப்பாக்கிப் பிரயோகங்களை மேற்கொண்டுள்ளனர்.
இதற்கமைய பெரும்பாலான பெண்கள் பாகிஸ்தான் தூதரகத்திற்கு வெளியே ஒரு போராட்டத்திற்கு தலைமை தாங்கியுள்ளனர்.
தலிபான் ஒருவர் துப்பாக்கியை நீட்டுவதையும் அதனை பெண்ணொருவர் துணிச்சலுடன் எதிர்கொள்வதையும் காண்பிக்கும் இந்தப் படத்தை ரொய்ட்டர் வெளியிட்டுள்ளது.
ஆப்கானின் டொலொ செய்தி நிறுவனத்தின் ஜஹ்ரா ரஹ்மி டுவிட் செய்துள்ள இந்தப் படம் 1989 இல் தியனமென் சதுக்கத்தில் சீனாவின் டாங்கிகளை நபர் ஒருவர் தனித்து எதிர்கொள்ளும் படத்தை நினைவுபடுத்தியுள்ளது.
தனது நெஞ்சுக்கு நேரே துப்பாக்கியை நீட்டும் தலிபானை அச்சமின்றி முகத்திற்கு நேரே எதிர்கொள்ளும் பெண் என ஜஹ்ரா ரஹ்மி பதிவிட்டுள்ளார்.
கடந்த ஒரு வாரமாக ஆப்கான் முழுவதும் பல ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
தலிபான்களின் முந்தைய ஒடுக்குமுறை ஆட்சியை மீண்டும் அரங்கேற்றி மக்கள் தூக்கிலிடப்படுவார்கள் என ஆப்கானிய மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட வீடியோக்கள், பல மக்கள் தெருக்களில் அணிவகுத்துச் செல்வதையும், பதாகைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பியதையும், ஆயுதமேந்திய தலிபான் உறுப்பினர்களால் அவர்கள் கண்காணிக்கப்படுவதையும் வெளிப்படுத்தியுள்ளன.
நேற்றைய ஆர்ப்பாட்டத்தின் போது 14 பத்திரிகையாளர்கள் தடுத்து நிறுத்தப்பட்டதாக காபுலை தளமாகக் கொண்ட ஆப்கான் சுயாதீன பத்திரிகையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
செய்தியாளர்களிற்கு சிறிய காயங்கள் ஏற்பட்டதை காண்பிக்கும் படங்களும் வெளியாகியுள்ளன
Post a Comment