அரசியல் இலாபத்திற்காக மதங்களுக்கிடையில் பிரச்சனைகளை தூண்டி விடுவதை நிறுத்துங்கள் - யாழ் விகாராதிபதி கோரிக்கை - Yarl Voice அரசியல் இலாபத்திற்காக மதங்களுக்கிடையில் பிரச்சனைகளை தூண்டி விடுவதை நிறுத்துங்கள் - யாழ் விகாராதிபதி கோரிக்கை - Yarl Voice

அரசியல் இலாபத்திற்காக மதங்களுக்கிடையில் பிரச்சனைகளை தூண்டி விடுவதை நிறுத்துங்கள் - யாழ் விகாராதிபதி கோரிக்கை



அரசியல் லாபங்களுக்காக  மதங்களுடையில் பிரச்சினைகளை தூண்டிவிடும் செயற்பாட்டை நிறுத்துங்கள் என யாழ்ப்பாணம் நாக விகாரையின் விகாராதிபதி ஸ்ரீ விமல தேரர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் ஆரியகுளத்தில்  பௌத்த விகாரை அமைக்கப்படவுள்ளதாக ஊடகங்களில் வந்த செய்தி தொடர்பில் இன்று ஊடகங்களுக்கு  கருத்து தெரிவிக்கும் போதே ஸ்ரீ விமல தேரர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நான் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்றில் ஆரிய குள அபிவிருத்தி சம்பந்தமாகவும் அதில் புத்த விகாரை அமைக்க முயற்சி என்ற செய்தியினைப் பார்த்தேன் அந்த செய்தியில் எந்தவித உண்மையும் இல்லை.

நாக விகாரைக்கு அண்மையில்  சுற்றுலா மையத்தினை அமைப்பது தொடர்பில் எனது அதிருப்தியை வெளியிட்டுருக்கின்றேன்

குறித்த அபிவிருத்தி தொடர்பில் எம்முடன் கலந்தாலோசிக்கபடவில்லை இது ஒரு புனித பூமி. 

சுற்றுலா ஹோட்டலை குளத்தின் நடுவில் அமைப்பதை நிறுத்தி இந்து  மற்றும் ஏனைய மதத்தவர்கள் ஒன்றிணைந்து செயற்பட கூடியவாறு ஒரு நல்லிணக்க மண்டபம் ஒன்றை அமைக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தேன்.

ஆனால் பத்திரிகைகளில் புத்தர் சிலை அமைக்க போகின்றோம் என செய்தி வெளியிட்டிருக்கிறார்கள் நாங்கள் அவ்வாறு ஒன்றும் செய்வதற்கு எண்ணம் இல்லை.

ஒரு தியான மண்டபமாக மாற்றுவதற்கு தான்  யோசித்துள்ளோம்  புனித பிரதேசம் என்பதால்  குளத்தின் நடுவில் ஒரு தியான மண்டபத்தை அமைத்தால் அது அனைத்து மதத்தினருக்கும் உதவியாக இருக்குமென்பது எமது நிலைப்பாடு.

இந்து மதமும் பௌத்த மதமும் சர்வமத குழுவாக இணைந்து யாழில் ஒற்றுமையாக செயற்பட்டு வருகின்றோம் விசேடமாக ஆரியகுளம் பகுதியில் அண்மையில் சைவ ஆலயம் உள்ளது அதேபோல் அண்மையில் பௌத்த விகாரையும் உள்ளது   இந்து மக்கள் வேறு மத  மக்கள் என்று பார்க்காது அனைவரும் இணைந்து செயற்படுகின்றோம்.

நாக விகாரை நுழைவாயிலில் பார்த்தால் தெரியும் இந்து மத  விசேட தெய்வங்களின் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன  ஒவ்வொரு நாளும் சிறப்பு பூஜைகளும் இடம்பெறுகின்றது இந்து மதத்தில் முழுமுதற்கடவுளின் சிலையும்  வைக்கப்பட்டு பூஜை வழிபாடு இடம்பெறுகின்றது.

நாம் கூறுவது என்னவென்றால் இந்த பகுதியை ஒரு புனித பிரதேசமாக மாற்ற வேண்டும்.

விகாரையுடன்  சம்பந்தப்பட்ட குளம் என்பதால் எம்முடனும் கலந்தாலோசித்திருக்கலாம் ஆனால் அவ்வாறு இடம்பெறவில்லை மாநகர முதல்வர் அவர்களை நேரில் கண்டபோது ஏன் குள அபிவிருத்தி  தொடர்பாக எம்முடன்  கலந்துரையாட வில்லை என கேட்டேன் அவர் கூறினார் தற்போது கொரோனா சூழ்நிலை காரணமாக நாங்கள் யாருடனும் கலந்துரையாடவில்லை என.

எனவே நான் ஒன்றை கூற விரும்புகின்றேன் சுற்றுலா மையமாக மாற்றினால் இது ஒரு புனித பிரதேசமாக இருக்காது எனவே  இந்து பௌத்த நல்லிணக்க மண்டபம் ஒன்றை அமைக்குமாறு தான்  முதல்வருக்கு கோரிக்கை விடுத்து இருக்கின்றேன் 

நாங்கள் யாழ்ப்பாண மாவட்டத்தில் அனைத்து மதத்தவர்களுடனும் இணைந்து செயற்படுகின்றோம் நேற்று கூட அனைத்து மத தலைவர்களும் இணைந்து  பூசை வழிபாட்டில் கலந்து கொண்டோம்.

எனவே யாழ்ப்பாண மாவட்டத்தில் அனைத்து மதத்தவர்களும் ஒன்று இணைந்து செயற்படுகின்றோம்.

சிலர்  தமது அரசியல் தேவைகளுக்காக மத வாதங்களை தூண்டி மக்களை  குழப்பி விட யோசிக்கிறார்கள் மக்களை தூண்டி விடுகிறார்கள் எனவே இதனை மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.

நாங்கள் இந்த நாட்டில் நல்லிணக்கத்தோடு சமாதானமாக வாழ  அனைவரும் முயற்சிக்கின்றோம். எனவே ஒரு சிலரின் அரசியல் லாபங்களுக்காக இவ்வாறான மதங்களுடையில் பிரச்சினைகளை தூண்டிவிடும் செயற்பாடுகளை உடனடியாக நிறுத்த  வேண்டும்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post