மருத்துவமனையில் இருந்தபடியே 83 தமிழ் டிரைலரை வெளியிட்ட கமல்... உருகும் ரசிகர்கள் - Yarl Voice மருத்துவமனையில் இருந்தபடியே 83 தமிழ் டிரைலரை வெளியிட்ட கமல்... உருகும் ரசிகர்கள் - Yarl Voice

மருத்துவமனையில் இருந்தபடியே 83 தமிழ் டிரைலரை வெளியிட்ட கமல்... உருகும் ரசிகர்கள்
அமெரிக்கா சென்று திரும்பிய நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமலஹாசனுக்கு நவம்பர் 22 ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் காரணமாக சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார் கமல்.

தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையும், மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாகவும் தானே ட்விட்டர் மூலம் ரசிகர்கள் மற்றும் தொண்டர்களுக்கு அறிவித்தார் கமல். நவம்பர் 22 ம் தேதிக்கு பிறகு அவர் ட்வீட் ஏதுமம் பதிவிடவில்லை.

இதனால் கமல் எப்படி இருக்கிறார் என அனைவரும் கவலை அடைந்தனர். அவர் விரைவில் குணமடைய பலரும் வாழ்த்துக்களும், பிரார்த்தனைகளும் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் கமலுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவரின் உடல் நிலை சீராக உள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் அவ்வப்போது அறிக்கை வெளியிட்டு வருகிறது.

இதற்கிடையில் சனிக்கிழமையன்று தான் தொகுத்து வழங்கி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், மருத்துவமனையில் இருந்து வீடியோ கான்பிரன்சிங் மூலம் பேசினார் கமல். அதில் தான் நலமாக இருப்பதாக கூறியதுடன், கொரோனா பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பேசினார். கமலுக்கு பதில் ரம்யா கிருஷ்ணன் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

கமல் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பி விட்டதாக வதந்தி பரவியது. அவரை குடும்பத்தினர் ஆரத்தி எடுத்து வரவேற்பது போன்ற ஃபோட்டோ ஒன்றும் சோஷியல் மீடியாவில் வைரலானது. ஆனால் அது பழைய ஃபோட்டோ என்றும், கமல் இன்னமும் மருத்துவமனையில் சிகிச்சையில் தான் இருக்கிறார் என கட்சி நிர்வாகிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

இந்நிலையில் டிசம்பர் 24 ம் தேதி ரிலீசாக உள்ள 83 படத்தின் தமிழ் பதிப்பு டிரைலரை மருத்துவமனையில் இருந்தபடியே கமல் இன்று வெளியிட்டுள்ளார். 1983 ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட்டை மையமாகக் கொண்ட இந்த படம் இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளிலும் 3டி யிலும் டிசம்பர் 24 அன்று ரிலீசாக உள்ளது.

83 படத்தின் டிரைலரை ட்விட்டரில் வெளியிட்டு, நம் காலத்தின் நாயகர்களின் கதையான 1983 திரைப்படத்தின் டிரெய்லரை பெருமிதத்துடன் அறிமுகம் செய்கிறேன் என ட்வீட் செய்துள்ளார் கமல். கிட்டதட்ட ஒரு வாரத்திற்கு பிறகு கமல் போட்டுள்ள இந்த ட்வீட்டை பார்த்து விட்டு ரசிகர்கள் உற்சாகமடைந்து, விரைவில் குணமடைந்து திரும்ப வேண்டும் என கமெண்ட் செய்துள்ளனர்.

உடம்பை பார்த்துக் கொள்ளுங்கள் ஆண்டவரே என பலர் கேட்டுள்ளனர். நோட்டிஃபிகேஷன் வந்ததும் டிஸ்சார்ஜ் ஆகிறேன்னு ட்வீட் போடீங்கன்னு நினைச்சேன். நீங்க சீக்கிரம் குணமாகி வீட்டு வாங்க அது போதும் எங்களுக்கு. ஆண்டவர் சகஜ நிலைக்கு திரும்பி வருகிறார் என்பதையே இந்த ட்வீட் காட்டுவதாக சிலர் கமெண்ட் செய்துள்ளனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post