போதைப்பொருள் கடத்தலுக்காக சிங்கப்பூரில் இந்த வாரம் மரண தண்டனை நிறைவேற்றப்படவிருக்கும் மலேசியரின் வழக்கில் பரிவு காட்டுமாறு சிங்கப்பூர் பிரதமர் லீ சியங் லூங்கிடம் மலேசியப் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கேட்டுக்கொண்டுள்ளதாக பெர்னாமா செய்தியை மேற்கோள்காட்டி ‘த ஸ்டார்’ இணையச் செய்தி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பிரதமர் லீக்கு பிரதமர் இஸ்மாயில் கடிதம் எழுதியிருப்பதாக அச்செய்தி கூறியது.
நாகேந்திரன் கே.தர்மலிங்கம்(33 வயது) என்பவரின் மரண தண்டனை விவகாரம் அண்மைய வாரங்களாக அனைத்துலகக் கவனத்தை ஈர்த்து வருகிறது.
அவர் அறிவாற்றல் குறைபாடு உள்ளவர் என்பதைக் காரணம் காட்டி மரண தண்டனையை நிறுத்துமாறு மனித உரிமைக் குழுக்களும் மற்ற அமைப்புகளும் கோரிக்கை விடுத்து வருகின்றன.
இந்நிலையில், நாகேந்திரனின் மரண தண்டனையை நிறுத்தி வைப்பதில் சிங்கப்பூர் அரசாங்கம் கவனம் செலுத்தவும் அதிபருக்கு புதிய கருணை மனு அளிக்க வாய்ப்பு வழங்கவும் இஸ்மாயில் கோரிக்கை விடுத்திருப்பதாக பெர்னாமா இன்று தெரிவித்தது.
42.72 கிராம் ஹெரோயின் போதைப்பொருளைக் கடந்தி வந்ததற்காக 2009ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சிங்கப்பூர் அதிகாரிகளால் நாகேந்திரன் கைது செய்யப்பட்டார்.
தமது தொடையில் போதைப்பொருளை பொட்டலமாகக் கட்டி மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்குள் நுழைந்தபோது உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் அவர் பிடிபட்டார்.
நாகேந்திரனுக்கு 2010 நவம்பரில் சிங்கப்பூர் உயர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.
அதிபருக்கு அவர் அனுப்பிய கருணை மனு 2020 ஜூனில் நிராகரிக்கப்பட்டது. அவருக்கு மரண தண்டனையை எதிர்வரும் புதன்கிழமை (நவம்பர் 10) நிறைவேற்ற நாள் குறிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment