டி20 உலகக்கோப்பையில் கடந்த 24-ம் தேதி நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. இப்போட்டியில், இந்தியாவை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றிபெற்றது.
டி20 உலகக்கோப்பையில் இந்தியாவை பாகிஸ்தான் வீழ்த்தியதை பாகிஸ்தான் ரசிகர்கள் கொண்டாடினர். மேலும், சமூகவலைதளத்தில் இந்திய-பாகிஸ்தான் ரசிகர்கள் கருத்து மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையில், டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தானிடம் இந்தியா தோல்வியடைந்ததை இந்தியாவில் சிலர் கொண்டாடிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. அவ்வாறு கொண்டாடியவர்களில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மத்தியபிரதேச மாநிலம் சட்னா மாவட்டத்தை சேர்ந்த முகமது பரூக் (23) என்பவர் பேஸ்புக்கில் , பாகிஸ்தான் வாழ்க மற்றும் பாபர் ஆசம் வாழ்க என பதிவிட்டிருந்தார். அந்த பதிவு சமூகவலைதளத்தில் வைரலானது. இது குறித்து விஸ்வ இந்து பரிஷத் அமைப்பினர் மெய்ஹர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்த புகாரை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார், பேஸ்புக்கில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கருத்து பதிவிட்ட முகமது பரூக்கை கைது செய்தனர். மேலும், கைது செய்யப்பட்ட முகமது பரூக் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வியடைந்ததை கொண்டாடி சமூகவலைதளத்தில் கருத்து பதிவிட்ட பலர் மீது உத்தரபிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் தேசத்துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment