சென்னை முதல் டெல்லி வரை.. தீபாவளி ஷாப்பிங்கிற்காக கடைகளில் குவிந்த மக்கள்.. கொரோனா 3ம் அலை அபாயம்? - Yarl Voice சென்னை முதல் டெல்லி வரை.. தீபாவளி ஷாப்பிங்கிற்காக கடைகளில் குவிந்த மக்கள்.. கொரோனா 3ம் அலை அபாயம்? - Yarl Voice

சென்னை முதல் டெல்லி வரை.. தீபாவளி ஷாப்பிங்கிற்காக கடைகளில் குவிந்த மக்கள்.. கொரோனா 3ம் அலை அபாயம்?



இந்தியாவில் எப்போது வேண்டுமானாலும் 3ம் அலை ஏற்படலாம் என்ற அச்சம் நிலவி வரும் நிலையில்தான்.. தீபாவளியை முன்னிட்டு மக்கள் கூட்டம் கூட்டமாக ஷாப்பிங் செய்து வருகிறார்கள்.

 மக்கள் கூட்டமாக இப்படி வெளியே செல்வது கொரோனா பரவலை அதிகப்படுத்துமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. 

உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் 3ம் அலை கொரோனா பாதிப்பு ஏற்பட தொடங்கி உள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, துருக்கி, யு.கே ஆகிய நாடுகளில் தினசரி பாதிப்பு 40 ஆயிரம், 50 ஆயிரம் என்ற அளவில் பதிவாகி வருகிறது. சீனாவில் கூட 14 பெரிய நகரங்களில் லாக்டவுன் போடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பல நாடுகளில் A.Y 4.2 கொரோனா பரவி வருகிறது. இந்தியாவிலும் இந்த உருமாறிய கொரோனா பரவினாலும் இதுவரை மூன்றாம் அலை பாதிப்பு ஏற்படவில்லை. இந்தியாவில் தினசரி பாதிப்பு 13 ஆயிரத்திற்கும் குறைவாகவே பதிவாகி வருகிறது.

இந்தியாவில் இதுவரை மூன்றாம் அலை அறிகுறிகள் ஏற்படவில்லை என்றாலும்.. தற்போது தீபாவளியை முன்னிட்டு மக்கள் கூட்டம் கூட்டமாக ஷாப்பிங் செய்து வருவது மூன்றாம் அலை அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. வரும் 4ம் தேதி தீபாவளி கொண்டாடப்பட உள்ள நிலையில் மக்கள் இப்போது துணி கடைகளிலும், வெடி கடைகளிலும், நகை கடைகளிலும் தீவிரமாக ஷாப்பிங் செய்து வருகிறார்கள்.

சென்னை பொதுவாகவே தீபாவளி நேரத்தில் சென்னையில் ஷாப்பிங் கூட்டம் அதிகரிக்கும். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் கூட்டமாக வந்து ஷாப்பிங் செய்வது வழக்கம். அதேபோல் கடந்த ஒருவாரமாக சென்னையில் மக்கள் தீவிரமாக ஷாப்பிங் செய்து வருகிறார்கள். அதிலும் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மக்கள் மொத்தமாக தி நகர் நோக்கி படையெடுத்தனர். தி நகர் தொடங்கி சென்னையின் பல முக்கிய பகுதிகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக ஷாப்பிங் செய்தனர்.

சென்னையின் முக்கிய ஷாப்பிங் மால்களில் கொஞ்சம் கூட இடைவெளி விடாமல்.. கொரோனாவா அப்படின்னா என்ன என்று கேட்கும் அளவிற்கு கூட்டமாக நின்று ஷாப்பிங் செய்தனர். சென்னையில் மட்டுமின்றி டெல்லியில் இருக்கும் பிரபல மார்க்கெட் பகுதிகள், சூரத், லக்னோ, பெங்களூரில் இருக்கும் பிரபல மார்க்கெட் பகுதிகளிலும் கூட்டம் அதிகமாக இருந்தது. மார்க்கெட்டுகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக நின்ற புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அதிலும் பல முதியவர்கள் ஷாப்பிங் செய்ய வந்ததும், பலர் குழந்தைகளோடு ஷாப்பிங் செய்ய வந்ததும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஷாப்பிங் செய்ய வந்த பெரும்பாலான மக்கள் மாஸ்க் அணியாமல் இருந்ததும் இன்னொரு அதிர்ச்சி அளிக்க கூடிய விஷயமாக இருந்தது. பல இடங்களில் மால்களில் ஏசிகள் இயக்கப்பட்டன. இது கொரோனா பரவலை மேலும் அதிகரிக்கும்.

மக்கள் எங்குமே சமூக இடைவெளி விடவில்லை. பல இடங்களில் மொத்தமாக கொரோனா கட்டுப்பாடுகள் காற்றில் பறக்க விடப்பட்டது. பல்வேறு இடங்களில் தியேட்டர்களிலும் கூட்டம் அலைமோதியது. இந்தியாவில் 366 மாவட்டங்களில் LocalCircles என்ற அமைப்பு நடத்திய சர்வேயில் மொத்தம் 2% பேர்தான் இந்தியாவில் மாஸ்க் அணிய விருப்பப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
இதனால் இந்த ஷாப்பிங்கிலும் மக்கள் பெரும்பாலும் மாஸ்க் அணியவில்லை. இந்தியாவில் ஏற்கனவே A.Y 4.2 கொரோனா பரவ தொடங்கிவிட்டது. இது வேகமாக பரவும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட நிலையில் இந்த தீபாவளி ஷாப்பிங் மூன்றாம் அலையை ஏற்படுத்தும் அச்சத்தை உருவாக்கி உள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post