பிள்ளையானின் குண்டர்களால் தாக்குதல் முயற்சி : இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம்! - Yarl Voice பிள்ளையானின் குண்டர்களால் தாக்குதல் முயற்சி : இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம்! - Yarl Voice

பிள்ளையானின் குண்டர்களால் தாக்குதல் முயற்சி : இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம்!



 கிழக்கு மாகாணத்தின் கல்விப் புலத்தில் இடம் பெறும் முறைகேடுகளை துணிச்சலுடன் வெளிக்கொண்டு வரும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் தோழர் உதயரூபனுக்கு எதிராக  - அரசாங்கத்தின் பங்காளியான பிள்ளையானின் குண்டர் படையினால் - ‘பாடசாலை சமூகம்’ என்ற பெயரில் ஆர்பாட்டம் செய்து - மாணவர்களை பாடசாலைகளுக்குள் செல்லவிடாது அடாவடியாக தடுத்தும் திருப்பி அனுப்பியுள்ளதுடன் - ஆசிரியர்களையும் பாடசாலைக்குள் நுழைய விடாமல்  - தோழர் உதயரூபனைத் தாக்கவும் முயற்சித்துள்ளனர். 

கோவிற் - 19 தொற்றால் பாடசாலை நாட்கள் பலவற்றை மாணவர்கள் இழந்திருந்த நிலையில்இ இன்றும் மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளைப் பாதிக்கும் வகையிலும் - ஆசிரியர்களின் கடமைக்கு இடையூறு விளைவிக்கும் வகையிலும் பிள்ளையானின் குண்டர் குழுவினர் அடாவடியில் ஈடுபட்டிருந்தமை மிக மோசமான செயற்பாடாகும்.

பாடசாலைகளுக்கு கொவிற் தொற்று விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த காலத்தில் கூட - கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்னர் - முறையற்ற விதத்தில் பாடசாலை மாணவர்களைப் பயன்படுத்தி - அரசியல்வாதியான பிள்ளையான் பாண்ட் அணிவகுப்புடன் வரவேற்கப்பட்டிருந்த காட்சிகள் சமூக வலைத் தளங்களில் உலாவந்திருந்தன.

 இத்தகைய முறைகேடான செயற்பாடுகள் தொடர்பாக உதயரூபன் முன்னின்று தனது கண்டனத்தைத் தெரிவித்திருந்தார். அதுமட்டுமல்லாமல் கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர்களின் சம்மதம் பெறப்படாமல் ஆசிரியர்களின் சம்பளத்திலிருந்து - கொவிற் தொற்று தொடர்பான ஜனாதிபதி நிதியத்துக்கு சட்டவிரோதமாக பணம் கழித்தமைக்கு எதிராகவும் - இலங்கை ஆசிரியர் சங்கம் நீதிமன்றம் சென்று சட்டநடவடிக்கை எடுப்பதற்கும் முன்னின்று செயற்பட்டிருந்தார்.  

இதுபோன்று - கிழக்கு மாகாண கல்விப் புலத்தில் தொடர்ச்சியாக நடைபெறும் அதிகார துஸ்பிரயோக நடவடிக்கைகளுக்கு எதிராகவும் -  பின்ளையானின் குண்டர்களின் அடாவடித்தனமான செயற்பாடுகளுக்கு எதிராகவும் - கிழக்கு மாகாணத்தில் இலங்கை ஆசிரியர் சங்கம் தொடர்ச்சியாக துணிச்சலுடன் செயற்பட்டு வந்துள்ளது. 

இத்தகைய முறைகேடுகளைத் துணிச்சலுடன் வெளிக்கொண்டு வந்திருந்த -  இலங்கை ஆசிரியர் சங்கத்தின் கிழக்கு மாகாணப் பிரதிநிதிகளை தொடர்ச்சியாக அச்சுறுத்தும் செயற்பாடுகளில் பிள்ளையான் குழு ஈடுபட்டு வந்திருந்தது. அநீதிகளையும் -  அதிகார துஸ்பிரயோகங்களையும் வெளிக்கொண்டு வருவதற்கு இலங்கை ஆசிரியர் சங்கம் ஜனநாயக வழியில் எதிர்ப்பு தெரிவித்துவந்த நிலையில் - ஜனநாயகத்தின் குரல்வளையை நசுக்கும் செயற்பாடான தாக்குதல் முயற்சியை மேற்கொள்ள - அரசாங்கத்தின் பங்காளியான பிள்ளையானும் அவரது குண்டர்களும் ஈடுபட்டுள்ளமையை இலங்கை ஆசிரியர் சங்கம் மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றது. 

தாக்குதல் செயற்பாடுகளில் பிள்ளையானின் குண்டர்கள் ஈடுபட்டமை தொடர்பாகவும் - மாணவர்களின் கற்றல் செயற்பாட்டைத் தடுத்தமை தொடர்பாகவும் - ஆசிரியர்களை கடமைக்கு செல்லவிடாது இடையூறு ஏற்படுத்தியமை தொடர்பாகவும் - காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் பாடசாலையின் ஆசிரியர்களினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்விடயம் பொலிஸ்மா அதிபருக்கும், சட்டமா அதிபருக்கும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளரால் தெரியப்படுத்தப்பட்டுமுள்ளது. 

இந்த அடாவடித்தனத்தில் ஈடுபட்ட  பிள்ளையான் குழுக் குண்டர்கள் உடனடியாக சட்டத்தின் முன்நிறுத்தப்பட வேண்டும். பொலிசார் பக்கச்சார்பாக செயற்பட முற்பட்டால் அதன் விளைவு பாரதூரமாக அமையும் என்பதையும் இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவிக்கவிரும்புகின்றது. 

அரசாங்கத்தின் துணையுடன் பங்காளி குண்டர்களை ஏவி -  மேற்கொள்ளப்படும் அடாவடித்தனமான செயற்பாடுகளுக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் வண்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கின்றது என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் ஆ.தீபன் திலீசன் கண்டனம் தெரிவித்துள்ளார். 


0/Post a Comment/Comments

Previous Post Next Post