யாழ்ப்பாணம் - வலிகாமம் வடக்கில் உள்ள ஆலய விக்கிரகங்களை கடத்தி விற்பனை செய்து வந்த இருவரையும் எதிர்வரும் 05ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு , மல்லாகம் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் உள்ள ஆலயங்களில் இருந்த பிள்ளையார் உள்ளிட்ட இந்து கடவுள்களின் விக்கிரகங்களை கடத்தி கொழும்பில் விற்பனை செய்த குற்றச்சாட்டில் கீரிமலை நல்லிணக்கபுரம் மற்றும் புத்தூர் நவக்கிரி பகுதியை சேர்ந்த இருவர் கடந்த 24ஆம் திகதி காங்கேசன்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் கடந்த 09ஆம் திகதி முதல் 23ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில், கொழும்புக்கு கடத்தி விற்பனை செய்யப்பட்ட சிலைகள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் , கொழும்பு விரைந்த பொலிஸ் குழுவினர் 25ஆம் திகதி கொழும்பில் விற்பனை செய்யப்பட்ட 20 சிலைகளை மீட்டு வந்தனர்.
அந்நிலையில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை சந்தேக நபர்களை மல்லாகம் நீதவான் முன்னிலையில் முற்படுத்தியதை அடுத்து , அவர்களை எதிர்வரும் 05ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
Post a Comment