இந்தியாவின் தலையீட்டால் பின்வாங்கிய சீன நிறுவனம்! - பின்னணி என்ன? - Yarl Voice இந்தியாவின் தலையீட்டால் பின்வாங்கிய சீன நிறுவனம்! - பின்னணி என்ன? - Yarl Voice

இந்தியாவின் தலையீட்டால் பின்வாங்கிய சீன நிறுவனம்! - பின்னணி என்ன?



இலங்கையைவிட்டு சீன நிறுவனம் வெளியேறியிருப்பதன் பின்னணியில், இந்தியாவின் தலையீடு இருப்பதாக அதிரடித் தகவல்கள் வெளி வந்திருக்கின்றன.

இலங்கையிலிருக்கும் மூன்று முக்கியத் தீவுகளில் காற்றாலை மற்றும் சூரியஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்ட ஒப்பந்தத்தை முற்றிலுமாகக் கைவிட்டுவிட்டு, மாலத்தீவை நோக்கிச் சென்றிருக்கிறது, சீனாவின் சினோசர் - இடெக்வின் (Sinosar-Etechwin) நிறுவனம். இலங்கையைவிட்டு சீன நிறுவனம் வெளியேறியிருப்பதன் பின்னணியில், இந்தியாவின் தலையீடு இருப்பதாக அதிரடித் தகவல்கள் வெளிவந்திருக்கின்றன. மேலும், சீன நிறுவனத்தைவிட்டு கைநழுவிய அந்தத் திட்டம், இந்தியாவின் முன்னணித் தொழிலதிபரான அதானியின் நிறுவனத்துக்குக் கைமாறுவதாகவும் தகவல்கள் கசிந்திருக்கின்றன.

இலங்கை இந்திய எல்லை

இலங்கை-சீன நிறுவனம் ஒப்பந்தம்:

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடைப்பட்ட கடற்பரப்பில் இருக்கும், யாழ்ப்பாணத்துக்குட்பட்ட மூன்று முக்கியத் தீவுகள் நெடுந்தீவு, அனலைத் தீவு, நயினாத் தீவு. டீசல் மூலம் மட்டுமே மின்சாரம் கிடைத்துக்கொண்டிக்கும் இந்தத் தீவுகளில், காற்றாலை மற்றும் சோலார் மூலமாக மின்சாரம் தயாரிப்பதற்கான உலகளாவிய ஏலத்தை இலங்கை அரசாங்கம் அறிவித்தது. இந்திய நிறுவனங்கள் உட்பட, பல நாடுகளின் நிறுவனங்கள் இந்தத் திட்டத்தைக் கைப்பற்ற போட்டியிட்டபோது, சீனாவைச் சேர்ந்த சினோசர் - இடெக்வின் நிறுவனம், சுமார் 12 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பீட்டில் திட்டத்தைக் கைப்பற்றியது. கடந்த ஜனவரி (2021) மாதம், அதிகாரபூர்வமாக இலங்கை அரசாங்கத்திடம் சீனா ஒப்பந்தம் போட்டுக்கொண்டது.

ஒப்பந்தம் கையெழுத்தானபோதே இந்தியா அதற்குக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது. காரணம், அந்தத் தீவுகளிலிருந்து இந்தியாவுக்கான தூரம் வெறும் 49 கி.மீட்டர் தொலைவிலும், கச்சத்தீவிலிருந்து வெறும் 29 கி.மீட்டர் தொலைவிலும் இருந்தது. எனவே, இந்திய எல்லைக்கு மிக அருகில், சீன நிறுவனம் ஒரு பெரிய மின்சாரத் திட்டத்தை செயல்படுத்தவிருப்பது, இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என தமிழகத்தைச் சேர்ந்த தலைவர்களும் பகிரங்கமாக எச்சரிக்கை செய்தனர். அதேபோல, இலங்கையின் வடக்கு மாகாண தமிழ்த் தலைவர்களும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.

சோலார்

எந்த வகையில் இந்தியாவுக்கு ஆபத்து?

குறிப்பாக, பா.ம.க நிறுவனர் ராமதாஸ், ``சீன நிறுவனம் நெடுந்தீவில் மின்திட்டங்களை செயல்படுத்தும் போர்வையில் இந்தியாவை 24 மணி நேரமும் கண்காணிக்க முடியும். ஆயுதங்களையும், ராணுவத் தளவாடங்களையும் கொண்டுவந்து சேமித்து வைத்துக்கொண்டால், இரு நாடுகளுக்கு இடையே போர் ஏற்பட்டால் உடனடியாக இந்தியாவைத் தாக்கி நிலைகுலைய வைக்க முடியும். இது சாதாரணமான ஆபத்து அல்ல. இந்த ஆபத்தின் தீவிரத்தை இந்தியா உடனடியாக உணர்ந்து, அதை முறியடிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், இந்தியா, குறிப்பாக தமிழ்நாடு எந்த நேரமும் ஆபத்தின் விளிம்பில்தான் இருக்க வேண்டும்" என அறிக்கையின் மூலம் எச்சரித்தார்.

மருத்துவர் ராமதாஸ்

மேலும், ``வடக்கில் லடாக் தொடங்கி வடகிழக்கில் சிக்கிம் மாநிலம் வரை இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்றுவரும் சீனா, இலங்கைத் தீவுகள் வழியாக தமிழகத்திலும் தொல்லை கொடுக்கத் தொடங்கும். அந்தத் தீவுகளை இந்தியாவுக்கு எதிரான ராணுவத் தளமாக மாற்றிக்கொள்ளலாம். அத்தகைய நிலை ஏற்பட்டால், இந்தியா வளர்ச்சியில் கவனம் செலுத்த முடியாமல் சீனாவைச் சமாளிப்பதிலேயே முழு கவனத்தையும் செலுத்தவேண்டிய நிலை ஏற்படலாம். அப்படி ஒரு நிலை ஏற்படுவதை இந்தியா இப்போதே தடுக்க வேண்டும்" என தமிழகத் தலைவர்களும் இந்திய அரசாங்கத்தை வலியுறுத்தினர்.

இந்தச் சூழ்நிலையில், இலங்கைக்கான இந்தியத் தூதர் கோபால் பாக்லே, கடந்த பிப்ரவரி மாதம் அப்போதைய இலங்கை மின்சக்தித்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெருமவைச் சந்தித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார். ஆலோசனை முடிவில், இந்தத் திட்டத்துக்குத் தேவைப்படும் முழுத் தொகையான 12 மில்லியன் அமெரிக்க டாலரையும், இந்திய அரசாங்கம் இலங்கைக்கு நன்கொடையாகத் தருவதாக அறிவித்தார்.

இந்தியத் தூதர் கோபால் பாக்லே

இந்தியாவின் ஆஃபரை ஏற்றுக்கொண்ட அமைச்சர் டலஸ் அழகப்பெரும, ``என்னைச் சந்தித்த இலங்கைக்கான இந்தியத் தூதர் கோபால் பாக்லே, இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தத் தேவையான முழுமையான நிதித்தொகை 12 மில்லியன் அமெரிக்க டாலரை இலங்கைக்கு நன்கொடையாக வழங்குவதாக உறுதி அளித்திருக்கிறார். இந்தப் பிராந்தியம் குறித்து அக்கறை செலுத்துகிற ஒரு மிகப்பெரிய நாடாக இந்தியா இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் இந்தியா இலங்கையின் மூத்த அண்ணனைப் போன்றது. எனவே, இந்தியாவின் இந்த யோசனையை, ஆலோசனையை நாங்கள் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறோம்" என அறிவித்தார்.

டலஸ் அழகப்பெரும

இதனால், சீன நிறுவனத்துக்கும், இலங்கை அரசுக்கும் இடையேயான ஒப்பந்தத்தில் அப்போதே விரிசல் ஏற்பட்டது. இருப்பினும், எந்தவிதமான அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியிடப்படாமல் இருந்தது.

இடத்தை காலிசெய்த சீன நிறுவனம்:

இந்த நிலையில், கடந்த டிசம்பர் 2-ம் தேதி சீனாவின் சினோசர் - இடெக்வின் நிறுவனம், இலங்கைத் தீவுகளில் மேற்கொள்ளவிருந்த மின்திட்டங்களை கைவிடுவதாக அதிகாரபூர்வமாக அறிவித்தது. மேலும், அந்த அறிவிப்புக்குக் காரணம், ``மூன்றாவது தரப்பிலிருந்து (Third party) முன்வைக்கப்பட்ட பாதுகாப்பு தொடர்பிலான பிரச்னையே" என இலங்கையிலிருக்கும் சீனத் தூதரகம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தது. அதாவது, திட்டத்தைக் கைவிடுவதற்கு, `இந்திய அரசாங்கம்'தான் காரணம் என்பதை சீனத் தூதரகம் மறைமுகமாக `மூன்றாவது தரப்பு' எனக் குறிப்பிட்டிருந்தது.

சீனா

அதைத் தொடர்ந்து, சீன நிறுவனம், சூரியஒளி மின்சாரத் திட்டத்தை இந்தியப் பெருங்கடலில் இருக்கும் மாலத்தீவுக்கு மாற்றியிருக்கிறது. அந்த நாட்டிலிருக்கும், சுமார் 12 தீவுகளில் சூரியஒளி மின்சாரத் திட்டத்தைச் செயல்படுத்தும் புதிய ஒப்பந்தத்தை மாலத்தீவிடம் ஏற்படுத்தியிருக்கிறது.

மாலத்தீவு

அதானி வசம் செல்கிறதா இலங்கை மின்சாரத் திட்டம்?

இந்த நிலையில், இலங்கையின் முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, ``வடக்கு மாகாணத்திலிருக்கும் மன்னார் முதல் பூநகரி வரையிலான பிரதேசங்களில், சுமார் 500 மெகாவாட் காற்றாலை மற்றும் சூரியஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை அதானி நிறுவனத்துக்கு வழங்கும் முயற்சிகள் நடைபெற்றுவருகின்றன. இந்தத் திட்டத்துக்கான விலை மனுகோரலை பெரும்பாலான நிறுவனங்கள் விண்ணப்பித்திருக்கின்றன. ஆனால், அந்த நிறுவனங்கள் அனைத்தையும் ரத்து செய்துவிட்டு, அதானி நிறுவனத்திடம் இந்தத் திட்டத்தை வழங்க முடிவு செய்திருக்கிறார்கள்" என கருத்து தெரிவித்திருக்கிறார்.

அதானி
இந்தியாவின் தலையீட்டால், இலங்கையில் சீன நிறுவனம் பின்வாங்கியிருப்பது, சீனாவின் முதற்கட்ட பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. இருப்பினும், இலங்கையின் பெரும்பாலான துறைகளில் சீனாவே கோலோச்சுகிறது. சீனாவின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தி, அவற்றையும் மெல்லத் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவரும் முயற்சியில், இந்திய அரசாங்கம் மிகத்தீவிரமாகச் செயல்பட்டுவருகிறது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post